எங்கள் திருக்கோணமலை 19

எங்கள் திருக்கோணமலை 19


அதிகாலை அழகுதமிழ் அணங்குகளின் விழிமலரும்
 அதுகண்டு வண்டினங்கள் தேனருந்த ஆர்ப்பரிக்கும்
இதுபூவோ இளநிலவோ என்றுசில மயங்கிநிற்கும்
 இருவிழிகள் அசைகையிலே கருவண்டோ எனத்தயங்கும்
இதமான கடற்காற்று இளமேனி தழுவிவரும்
 இளமங்கை எழில்கண்டு அதுகூடக் கவியிசைக்கும்
பதமான பண்ணொலிகள் செவியேறிக் களிப்பூட்டும்
 பைந்தமிழர் மண்காக்கும் கடமைக்கு வலுவூட்டும்



எழுந்துவரும் கடலலையும் இன்தமிழால் ஓசையிடும்
 எமதீசன் பதங்கழுவித் தினந்தோறும் பூசையிடும்
வளர்ந்துவரும் இளந்தமிழர் வாழ்முறையோ கோடிபெறும்
 வளர்சைவத் தமிழுக்குத் தினம்மேன்மை கூடிவரும்
இழந்தநலம் அனைத்தையுமே இளைஞர்பலம் மீட்டுத்தரும்
 எங்கள்தமிழ் வரலாற்றைப் பெருமையுடன் பேசவரும்
பழந்தமிழர் பதியெங்கள் திருக்கோண மலையென்றும்
 பாரெங்கும் புகழ்பெறவே பரம்பொருளும் துணையிருக்கும்.



சுடுகின்ற எழுநீரும் தமிழர்மன நிலைசொல்லும்
 சுதந்திரமாய் ஐங்கரனார் அமைகாலம் இனிவெல்லும்
நெடுந்தூரம் நடந்தகளை நிழல்வந்தால் மறைந்தொழியும்
 நீதிநெறி நடப்போர்க்கு நிறைபொருளும் அருள்பொழியும்
படுந்துயரம் போயொழிந்து பைந்தமிழர் நிலைமீளும்
 பதிகமலைத் தென்கயிலை யானருளே எமையாளும்
விடமுண்டு நலங்காக்கும் விமலனார் கோணேசர்
 விளையாடும் போதிலழிந் தொழிவரிந்த இழிநீசர்.



                          கந்தவனம் கோணேஸ்வரன் . 
                          ஆடி 2019


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 4

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 09

தமிழ் இலக்கணம் அறிவோம் எழுத்தியல்- பகுதி 5