தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 09

பதவியல்      இயல் 2   பகுதி 9


ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டதாகவும் கருத்துப் புலப்படுமாறும் அமைந்திருக்கின்ற இரண்டோ அல்லது அதற்கும் மேற்பட்ட சொற்களைக் கொண்ட கூட்டே தொடர்மொழி எனப்படுகின்றது. 

தொடர்மொழியானது தொகைநிலைத் தொடர், தொகாநிலைத் தொடர் என இருவகைப்படுகின்றது. 

தொகைநிலைத் தொடர்:
தொகைநிலைத் தொடர் என்பது உருபுகள் வெளிப்படாமல் மறைந்து நிற்கின்ற நிலையில், இரண்டு அல்லது அவற்றுக்கும் மேற்பட்ட சொற்கள் இணைந்து இலக்கணரீதியாகப் பொருள் தருவது எனலாம். தொகை என்றால் தொக்கிநிற்கிறது அல்லது மறைந்து நிற்கிறது என்று பொருள்.

இத்தொகைநிலைத் தொடர் வேற்றுமைத்தொகை, வினைத்தொகை, பண்புத்தொகை, உவமைத்தொகை, உம்மைத்தொகை, அன்மொழித்தொகை என அறுவகைப்படுகின்றது.

1. வேற்றுமைத்தொகை:
வேற்றுமை உருபுகள் வெளிப்படையாகத் தெரியாமல் மறைந்துநின்று பொருள் தருகின்றபோது அது வேற்றுமைத்தொகை எனப்படுகிறது.

வேற்றுமைகள் எட்டு என்கிறது இலக்கணம். இவற்றுள் முதல்வேற்றுமையும் எட்டாம்வேற்றுமையாகிய விளிவேற்றுமையும் உருபுகள் அற்றன. அதாவது எந்த உருபுகளையும் தம்முடன் இணைத்து மொழிநடையில் மாற்றத்தை ஏற்படுத்தாமல் உருபுகள் அற்றநிலையிலேயே பொருளைத் தருகின்றன என்பதை மனத்திருத்தல் அவசியம். இரண்டு தொடக்கம் ஏழு வரைக்குமான வேற்றுமைகளுக்கே உருபுகள் அமைந்துள்ளன.

இனி வேற்றுமைத்தொகை பற்றிப் பார்ப்போம்.

இரண்டாம் வேற்றுமைத்தொகை.
பாடம் படித்தான், உரை நிகழ்த்தினார், விளக்கேற்றினாள் ஆகிய சொற்றொடர்களில் இரண்டாம் வேற்றுமை உருபான “” வெளிப்படையாகத் தெரியாதபோதும் அதன் பொருளை உள்வாங்கியே மொழியை நாம் விளங்கிக் கொள்கிறோம்.

பாடத்தைப் படித்தான், உரையை நிகழ்த்தினார், விளக்கை ஏற்றினாள் எனத் தெளிவாக வராமல் உருபு மறைந்து (தொக்கி) நிற்பதால் இவை இரண்டாம் வேற்றுமைத்தொகையின் பாற்படுகிறது.

மூன்றாம் வேற்றுமைத்தொகை.
மூன்றாம்வேற்றுமை உருபு “ஆல்”. தலை வணங்கினான் எனுந்தொடரில் வேற்றுமைஉருபு “ஆல்” வெளிப்படையாகவன்றி தொக்கிநிற்கும் நிலை காணப்படுகிறது. இதன் வெளிப்படையான வடிவம் தலையால் வணங்கினான் என்பதாகும்.

எனவே மூன்றாம்வேற்றுமை உருபு மறைந்து நிற்பதால் இத்தொடர் மூன்றாம் வேற்றுமைத்தொகை எனப்படுகிறது.

இதேபோன்று, பொன்னால் (ஆன) மணி என்ற பொருளில் வருகின்ற பொன்மணியும் மூன்றாம் வேற்றுமைத்தொகையாம். மட்குடம், தங்கமாலை போன்ற தொடர்களும் இவ்வகைத்தே.


நான்காம் வேற்றுமைத்தொகை:
இதன் உருபு “கு” என்பதாகும். சிவகுமாரன், பார்வதிமைந்தன், இராமன்தம்பி, சீதைமணாளன், மாட்டுத்தீவனம், கோழித்தீன், போன்ற சொற்றொடர்கள் “கு” உருபை மறைத்து நிற்பதால் இவை நான்காம் வேற்றுமைத்தொகை எனப்படுகின்றன. இவற்றின் முழுவடிவங்கள் சிவனுக்குக் குமாரன், பார்வதிக்கு மைந்தன், இராமனுக்குத் தம்பி, சீதைக்கு மணாளன், மாட்டுக்குத் தீவனம், கோழிக்குத் தீன் என்பவையாகும்.

ஐந்தாம் வேற்றுமைத்தொகை:
ஐந்தாம் வேற்றுமையுருபுகள் “இன், இல்” என்பவையாம். கவிதைச்சாரம், மலையருவி,  போன்ற சொற்றொடர்கள் ஐந்தாம் வேற்றுமைத்தொகையாம். இவற்றை விரித்துரைக்கின் மலையில் அருவி, கவிதையின் சாரம் எனவமையும்.

ஆறாம் வேற்றுமைத்தொகை:
ஆறாம் வேற்றுமைஉருபு “அது, உடைய” என்பவையாம். தமிழர்பெருமை, கிராமத்துப்பண்பு, அவன்சாதனை என்பவற்றை ஆறாம் வேற்றுமைத் தொகையாகக் குறிப்பிடலாம். .தமிழரது பெருமை, கிராமத்தவருடைய பண்பு, அவனுடைய சாதனை என இவற்றைத் விரித்தும் கூறலாம்.

ஏழாம் வேற்றுமைத்தொகை:
ஏழாம் வேற்றுமையுருபு “கண்” என்பதாகும். மணியோசை, காட்டுத்தீ போன்ற சொற்கள் ஏழாம் வேற்றுமைத்தொகைக்கு எடுத்துக்காட்டுகளாகும். இவை முறையே மணியின்கண் ஓசை, காட்டின்கண் தீ என விரித்துரைக்கத் தக்கவை

2.வினைத்தொகை:
வினைத்தொகை என்பது ஒரு வினைச் சொல்லின் பகுதியும் அதனைத் தொடர்ந்து இணையும் ஒரு பெயர்ச் சொல்லினதும் கூட்டு எனலாம். இதில் வினைச் சொல்லானது பெயரெச்சத்துக்குரிய விகுதியையோ காலங்காட்டுகின்ற இடைநிலைகளையோ கொண்டிருப்பதில்லை என்பது சிறப்பு.

வினைத்தொகை உருவாகும்போது வினைச்சொற் பகுதியை யடுத்து இணையும் பெயர்ச்சொல்லின் முதலெழுத்து மிகுவதில்லை என்பதை மனத்திருத்தல் அவசியம்.

வினைச் சொல்லின் பகுதி மூன்றுகாலங்களையும் காட்டும் இடைநிலைகளுடனும் இணையத்தக்கதாக இருப்பதுடன் அவை தொக்கி நிற்கின்ற நிலை காணப்படுவதால் வினைத்தொகை எனப்படுகின்றது.

எடுத்துக்காட்டுகள்:
1.சுடுசோறு. இது (தொட்டால்) சுடும் சோறு, சுடுகின்ற சோறு. சுட்ட சோறு என முக்காலத்துக்கும் பொருந்தத்தக்க வினைச்  சொல்லைக் கொண்டிருக்கிறது.
2. ஊறுகாய்  - ஊறிய காய், ஊறுகின்ற காய், ஊறும் காய் என முக்காலமும் காட்டுகிறது.
3. எழுகதிர்  - நேற்று எழுந்த கதிர், இன்று எழுகின்ற கதிர், நாளை எழும் கதிர் எனக் கொள்ளலாம்.

இதேபோன்று, படுபொழுது, விடிகாலை, வருதுயர், எழுதுகோல், உதயநிலா, கொல்களம், வதைகூடம், சுடுசொல், எறிகணை, வீழ்புனல், விடுகதை, எரிதழல், புனைபெயர், இடுகாடு, புதைகுழி, ஆடுகளம், விடுகதை எனப் பல வினைத்தொகைச் சொற்களைத் தெரிந்து கொள்ளலாம்.

இவற்றை எழுதுக்கோல், விடிக்காலை, சுடுச்சொல் என வருமொழியின் வல்லினம் மிகத்தக்கதாக எழுதுவதோ உச்சரிப்பதோ தவறு என்பது கவனிக்கப்பட வேண்டியது.


3. பண்புத்தொகை:
நிறம், வடிவம், குணம், சுவை, இயல்பு என்பவற்றின் அடிப்படையில் தோன்றுவது பண்புத்தொகை எனப்படும்.

வெண்புறா, கருமுகில், சேவடி போன்றவை நிறஞ்சார்ந்த பண்புத்தொகைக்கு எடுத்துக்காட்டுகள்.
இச்சொற்கள் வெள்ளை நிறத்தையுடைய புறா என்றும், கருமை வண்ணமுடை முகில் என்றும்,  சிவந்த அடி என்றும் விரியும்.

வட்டநிலா, சதுரமுகி போன்ற சொற்கள் வடிவம் சார்ந்த பண்புத் தொகைகளாகும். 
இவை வரியின் வட்டவடிவமுள்ள நிலா எனவும் சதுரவடிவிலான முகம் எனவும் விரியும்.

நல்லமனிதன், கோபக்காரன், சிரித்தமுகம் என்பவை குணம்சார் பண்புத் தொகைகளாகும்.
நல்ல இயல்புடைய மனிதன், கோபத்தைக் கொண்டிருப்பவன், சிரிக்கின்ற இயல்புடைய முகம் என இவை விரியும்.

இருபெயரொட்டுப் பண்புத்தொகை:
இருபெயர்ச்சொற்கள்; இணைந்து பண்பை உணர்த்துகின்ற நிலையில் அவை இருபெயர் ஒட்டிவரும் தொகைச் சொல் எனும் பொருளில் இருபெயரொட்டுப் பண்புத்தொகை எனப்படுகின்றன.

இந்தியநாடு, வேற்படை, கற்கோவில், பனைமரம், பிறைநிலா என்பவை இதற்கு உதாரணங்களாம்.
இந்தியா எனும் நாடு, வேல்கள் தாங்கிய படை, கற்களால் அமைந்த கோவில், பனை இனத்தைச் சார்ந்த மரம்,  பிறை வடிவிலான நிலா என இவற்றின் பொருள் விரியுந் தன்மையடையன.

4. உவமைத்தொகை:
ஒரு பொருளை பிறிதொரு பொருளோடு இணைத்து இதற்கு அது நிகர் என ஒப்பிடுவது உவமையாகும். இவ்வுமவைகளை விரித்துக் கூறும்போது போல, போன்ற, அன்ன, ஒப்ப, நிகர்த்த  ஆகிய இடைச்சொற்கள் சேர்ந்து அவை தெளிவாக வெளிப்படும். இச்சொற்கள் வெளிப்படாவிடத்து அதாவது தொக்கி அல்லது மறைவாக நிற்குமிடத்து அது உவமைத்தொகை எனப் பெயர் பெறுகிறது.

ஓப்பீடு செய்யும்போது இரு பொருட்கள் தேவைப்படுகின்றன. ஒரு பெண்ணின் முகம் நிலாவைப்போல் இருப்பதாகக் கொண்டால் நிலாவைப் போன்ற முகம் என்றோ மதியை நிகர்த்த வதனம் என்றோ குறிப்பிடுவதுண்டு. 

இங்கு உவமேயம். உவமானம் என இருவகைச் சொற்கள் காணப்படுகின்றன. முதன்மைப் பொருள் உவமேயம் எனவும் ஒப்பீட்டுக்குப் பயன்படும் பொருள் உவமானம் எனவும் பெயர் பெறுகின்றன.

மேற்சொன்ன உதாரணத்தில் முதற்பொருள் பெண்ணின் முகம் அல்லது வதனம். எனவே இவை உவமேயம் எனப்படுகின்றன. ஒப்பீட்டுப்பொருள் நிலா அல்லது மதி. இவை உவமானம் எனப்படுகின்றன.
தேன்மொழி (தேன்போன்ற மொழி), மலர்ப்பாதம் (மலரையொத்த பாதம்), பானை வயிறோன் (பானை போன்ற வயிற்றை உடையவன்), ஆந்தைக் கண்ணன் (ஆந்தையின் கண்களையொத்த கண்களை உடையவன்), போன்றவற்றையும், பால்நிலா, தேன்நிலா, பொன்வதனம் போன்றவற்றையும்  உவமைத்தொகைக்கு உதாரணங்களாக நோக்கலாம்.

5. உம்மைத்தொகை:
இருசொற்கள் இணையும்போது “உம்” எனும் இடைச்சொல் தோன்றுவதுண்டு;. அவ்வாறு தோன்றும் “உம்” மறைந்து நின்று செயற்படுமிடத்து அது உம்மைத்தொகை எனப்படுகிறது.

“அவன் இராப்பகல் உழைத்து முன்னேறினான்.” என்ற வாக்கியத்தின் பொருள், அவன் இரவும் பகலும் உழைத்து முன்னேறினான் என்பதாகும். இங்கே, இரவும் பகலும் என்பதன் உம்மை தொக்கி நிற்க இராப்பகல் என்றாயிற்று. எனவே இராப்பகல் உம்மைத்தொகை எனப் பெயர் பெறுகிறது.

இதேபோல் பிறவற்றையும் நோக்கலாம். அண்ணன்தம்பி (அண்ணனும் தம்பியும்), சுகதுக்கம் (சுகமும் துக்கமும்),  மாலைமரியாதை ( மாலையும் மரியாதையும்), மானஅவமானம் (மானமும்அவமானமும்), ஏற்றம்இறக்கம் (ஏற்றமும் இறக்கமும்), கூன்குருடு (கூனும் குருடும்), காலநேரம் ( காலமும் நேரமும்), பட்டம்பதவி (பட்டமும் பதவியும்), உருட்டுப்புரட்டு (உருட்டும் புரட்டும்) எனபவை உம்மைத் தொகை உதாரணங்களுட் சிலவாம்.

6. அன்மொழித்தொகை:
அன்மொழித்தொகை என்பது  அன்மொழித்தொகை மொழிக்கூட்டில் வருகின்ற சொற்களின் பொருளைச் சுட்டி நில்லாதவை என்பதையும், அவை வேறுபொருளைச் சுட்டுவதற்காக எழுந்தவை என்பதையும் விளங்கிக் கொளல் நலம்.

ஆயிழை --- அழகாகப் பின்னப்பட்ட நகை என்பதே பொருள். ஆயினும் அப்பொருளுக்கும் அப்பாற் சென்று அழகான நகையணிந்த பெண்ணைக் குறிக்குமாயின் அது அன்மொழித் தொகையாகும்.

நேரிழை ---- நேர்த்தியாக இழைக்கப்பட்ட அணிகலன். 
ஏந்திழை ---- இழைக்கப்பட்ட நகைகளை ஏந்தி நிற்பது. ஆயினும் இவையிரண்டும் நகையையோ நேர்த்தி அல்லது ஏந்தியிருத்தலையோ கருதாது பெண்ணைச் சுட்டி நிற்குமிடத்து அன்மொழித்தொகை ஆகின்றன.

பூங்கொடி --- பூவைஏந்திய கொடியைக் குறிக்காமல் பூங்கொடிபோன்ற பெண்ணைக் குறிக்குமிடத்து அதுவும் அன்மொழித்தொகை எனப்படுகிறது.
இதேபோல் வேல்விழி (வேல் போன்ற விழி எனக் கருதுமிடத்து உவமைத்தொகை எனப்படும்), கயல்விழி, மீன்விழி, மான்விழி என்பவையும் ( கயலொத்த, மீன்நிகர்த்த, மான்போன்ற விழி என)  நேரடிக் கருத்தைக் கொள்ளுமிடத்து உவமைத்தொகையாக வருகின்ற போதிலும் பெண்ணைக் குறிக்குமிடத்து அன்மொழித்தொகை எனப்படுகின்றன.

இவ்வாறே. கார்குழல் என்பது கருமையான கூந்தல் எனப் பொருள் கொள்ளுமிடத்து பண்புத்தொகையாக அமையும். எனினும் கரியகூந்தலையுடைய பெண்ணைக் குறிக்குமிடத்து அது அன்மொழித்தொகை எனப்படும்.

பொதுவாக, அன்மொழித்தொகை பேச்சுவழக்கிலோ வசனநடையிலோ வருவதில்லை. இலக்கியத்தரம் வாய்ந்தசொல் என்பதால் கவிதைகளிலேயே பெரும்பாலும் கையாளப்படுகின்றன என்பதை மனதிற் கொண்டால் கருத்துமயக்கம் ஏற்பட வாய்ப்பிருக்காது.  




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 4

தமிழ் இலக்கணம் அறிவோம் எழுத்தியல்- பகுதி 5