இந்து சமய விளக்கம் - 3



இந்து மதத்தில் அருவம்,  அருவுருவம், உருவம் ஆகிய மூன்றுவகையில் கடவுளை வணங்கும் கோட்பாடு காணப்படுவதன் நோக்கம் என்ன? அருவ நிலையில் கடவுளை வழிபடுவதில் என்ன சிக்கல் காணப்படுகிறது?

உலகில் மனிதர்கள் எல்லோரும் ஒரே தரத்தினர் அல்லர். அகப்புறச் சூழல்கள் அவர்களில் ஆதிக்கம் செலுத்துகின்றன. வாழ்க்கை முறைகளும், சிந்தனை முறைகளும் மனிதர்களை வேறுபடுத்துகின்றன. சமயநெறியை ஒரு கல்விக்கூடமாகவும் பக்தர்களை மாணவர்களாகவும் பார்த்துக் கொள்வோமாகில் விடயத்தைக் கிரகிப்பது இலகுவாக இருக்கும். பாலர் வகுப்பில் உள்ள மாணவனுக்கு இரண்டும் இரண்டும் எத்தனை என்று கேட்டால் விளங்கப் போவதில்லை. மாறாக, அவனுக்கு அறிமுகமான பழங்களையோ, உணவுப் பண்டங்களையோ அல்லது வேறுபொருட்களையோ ஆதாரமாகக் கொள்ள வேண்டும். இதன் பிரகாரம் இரண்டு சாக்லேற்றுகளும் இரண்டு சாக்லேற்றுகளும் எத்தனை என்று கேட்டால், அவன் அதிகமாகவும் ஆர்வமாகவும் கேள்வியைப் புரிந்துகொள்வான். இங்கே, கேள்வியின் நோக்கம் மாணவனுக்குச் சாக்லேற்றுப் பற்றிய அறிவை ஊட்டுவதல்ல. மாறாக, கணிதம் பற்றிய அறிவை ஊட்டுவதேயாகும்.
இதேபோல்தான், ஆரம்ப தரத்திலிருக்கும் மாந்தர்களுக்கு கடவுள் பற்றிய அறிவை ஊட்டுவதற்கு, அவர்களுக்கு நன்கு அறிமுகமான அல்லது உற்றுநோக்கி இரசிக்கக்கூடிய விக்கிரகங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

அந்த மாணவன் இரண்டாம் வகுப்புக்கு வந்து விட்டதாக வைத்துக் கொண்டால், அவனுக்கு இப்பொழுது கணிதம் கற்பதற்குச் சக்கிலேற்றுகள் தேவையில்லை. இலக்கங்களே போதுமானதாகின்றன. இலக்கங்களைக் கூட்டியும் கழித்தும் தனது கணித அறிவை விருத்தி செய்து கொள்வான். இலக்கங்கள் உருவமுள்ளவையுமல்ல: உருவமற்றவையுமல்ல. இரண்டுக்கும் இடைப்பட்ட நிலையிலானவை. அதாவது அருவுருவ நிலையில் அவை காணப்படுகின்றன.

இதேபோல்தான் இரண்டாம் படித்தர மாந்தர்களுக்கு அருவுருவ வழிபாடு கூறப்படுகிறது. இவர்களுக்கு உருவங்கள் தேவைப்படுவதில்லை. மாறாக, கடவுளை நினைவூட்டுவதற்கு யாதாயினும் அடையாளமே போதுமானது.
இப்பொழுது அந்த மாணவன் மேல்வகுப்புக்கு வந்துவிட்டான் எனக் கொள்வோமாகில், சாதாரண கணக்குகளை மனக்கணக்கு மூலமே செய்துவிடுவான். மனக் கணிதத்தின்போது சாக்கலேற்றுகளோ இலக்கங்களோ தேவைப்படுவதில்லை.
அருவ வழிபாடு இத்தகையதே. இங்கு உருவம் எதையும் கற்பித்துக் கொள்ளமலேயே மனம் கடவுளை வழிபடுமளவுக்குப் பக்குவம் பெற்று விடுகிறது.
இவற்றை அடிப்படையாகக் கொண்டே இந்து சமயத்தில் அருவ, அருவுருவ, உருவ வழிபாட்டு முறைகள் வகுக்கப்பட்டுள்ளன




உலகம் முன்னேறிவிட்டது. மனிதர்கள் முன்னேற்றமடைந்து விட்டார்கள். இந்தநிலையில் வழிபாட்டு முறையில் மூன்றுதரங்களும் இருப்பது தேவைதானா? ஏனைய சில சமயங்களில் காணப்படுவதுபோல் உருவமற்ற வழிபாட்டு முறைகளை மட்டும் நாம் மேற்கொண்டால் என்ன?

உலகம் அறிவியல் ரீதியாக முன்னேறியிருக்கிறது என்று சொன்னால் ஓரளவு ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், இறையியல் ரீதியாக முன்னேறி இருப்பதாகக் கருத முடியாது. “இந்த மதத்தின் மூலம் மட்டுமே இறைவனை அடையலாம்.” என்று பரப்புரை செய்கின்றவர்கள் இருக்கும்வரை, “அந்த மதத்துக்கு மாறினால் எளிதில் இறைவனை அடையலாம்.” என்று ஏமாறுகின்ற மக்கள் இருக்கும்வரை, இறையியல் ரீதியாக உலகம் முன்னேறியுள்ளது என்ற எவ்வாறு கருத முடியும்?
நிற்க, வழிபாட்டு முறையில் உருவம், அருவுருவம், அருவம் ஆகிய மூன்று முறைகளுந் தேவையானவைதாம். ஏனெனில் ஒரு மனிதனின் தரத்தை யாரும் அளவிட முடியாது. அவரவர் தமக்கு இயைபான வழிமுறைகளில் இறைவனை வணங்கவேண்டும் என்றுதான் இந்துமதம் எதிர்பார்க்கிறதேயொழிய, இப்படித்தான் வணங்கவேண்டும் என்று இறுக்கமான கட்டுப்பாடுகளை விதிக்கவில்லை. உருவமற்ற நிலையிலதான் இறைவனைவழிபட வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதானது, பாலர் வகுப்பு மாணவனை மனக்கணிதம் போடச்சொல்லி வற்புறுத்தி அவனுடைய மூளையைக் குழப்பி விடுவதற்கு நிகராகும். அவனாகவே மனக்கணிதம் போடும் தரத்துக்கு உயர்வதற்கு வழிகாட்டுவதுதான் ஆசிரியரின் கடமை என்பதை உணர்ந்து கொண்டால் இந்து சமய வழிபாட்டு நிலைகளின் பெருமை புரியும்.
இன்னொரு வகையில் பார்க்கின், இறைவனை உருவமற்றவர் என்று சொல்லி வழிபடுகிறவர்கள் பக்குவமடையாத வரையில் எதனை வழிபடமுடியும் என்ற வினா எழுவது நியாயமானதே.
இறைவன் என்ற வார்த்தையைத் தத்தம் மொழிமூலமாக நினைத்துக் கொள்கிறார்களா? அல்லது தத்தம் மொழியில் அச்சொல்லுக்காக நிற்கும் எழுத்துகளை நினைத்து வழிபடுகிறார்களா?
நீரை, காற்றை, தீயை, ஒளியை, திசையை நினைத்துக் கொண்டாற்கூட, அது அருவ வழிபாடாக அமைய மாட்டாது. பின்னர் எதை நினைத்து வழிபடுகின்றார்கள் என்ற கேள்விக்கான விடை மிகவும் சிக்கலானதாகவே அமையும். ஏனெனில் உலகில் இல்லாத பொருள் எதையும் எண்ணிப் பார்க்கக்கூட முடியாது. மனிதனின் தலையையும், சிங்கத்தின் உடலையும், பறவையின் வாலையும் பொருத்தித்தான் புதிய பொருளைக் கற்பனை பண்ண முடியும் என்பது சிந்திப்போருக்கு நன்கு புரியும்.
இச்சிக்கல்களால் தான் இந்து தர்மம் மூன்று தர வழிபாட்டு முறையை அனுசரிக்கிறது. அவரவர் தத்தமது ஆத்மிக பலத்துக்கேற்ப இறைவனை நினைத்துக் கொள்ள வழி சமைத்திருக்கிறது.


உருவ வழிபாட்டை வலியுறத்துகின்ற இந்து மதம் ஒரே உருவத்தை இறைவனின் அடையாளமாக அறிமுகப்டுத்தாமல் பல உருவங்களை அறிமுகப்படுத்தியதன் நோக்கம் என்ன?

நோக்கம் எளிமையானதுதான். ஆவரவர் விருப்பத்துக்கும் வாழ்வியல் முறைகளுக்குமேற்ப இறைவனை வழிபடுதலே சிறப்பு என்பதுதான் இந்துமதக் கோட்பாடு. இதன் அடிப்படையிலேதான் கடவுளர் உருவங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
உதாரணமாக. தனது நாட்டை வளப்படுத்தவும் செல்வத்தைப் பெருக்கவும் விரும்பும் ஒரு தலைவன் அல்லது அரசன் ஆண்டி முருகனின் உருவத்தை வழிபட்டால் வேடிக்கையாக இருக்காதா? அத்தகைய ஒருவன் வணங்கும் கடவுளின் தோற்றம் செல்வச் சிறப்பும் தைரியச் சிறப்பும்  உடையதாக இருந்தால்தானே அவன் கடவுளிடம் தனது எண்ணத்தை வெளியிட்டு ஒன்றித்து நிற்க இயலும்.
இளமையும் அழகும் துருதுருவென்ற குணமுமாக இருக்க விரும்பும் ஒருவனின் கடவுளர் திருவுருவம் முருகனாக இருந்தால்தானே சிறப்பாக இருக்கும்? கல்வியைத் தருபவள் இவளென்று வீணையும் ஏடுமாக இருக்கும் சரஸ்வதியின் திருவுருவத்தில்தானே மாணவனதும் கலைஞனதும் மனம் இலயித்துப் போகிறது?
உலகியல் செல்வத்தில் திளைத்து வாழவேண்டும் என்று ஆசைப்படுகின்ற மனிதன், செல்வமும் சிறப்புமாக இருக்கும் திருமாலையும் இலட்சுமியையுந்தானே வழிபட முடியும். பிரம்மச்சரியத்தைக் கடைப்படிக்க விரும்பும் ஒரு பக்தன் வள்ளி தெய்வயானை சமேதரராகக் காட்சியளிக்கும் முருகனையோ, பாமா ருக்குமணியுடன் ஆனந்திக்கும் திருமாலையோ வழிபட்டால் அவர்கள் கோலமே அவன் இலக்கைக் கலைத்து விடாதா?
இதனாலேயே நம் முன்னோர்கள் பக்தனின் வேண்டுதலுக்கும் ஆசைக்குமேற்ப இறைவனின் திருவுருவங்களை வகுத்துக் கொடுத்திருக்கிறார்கள்.

                                                                                                                 தொடரும்…

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 4

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 09

தமிழ் இலக்கணம் அறிவோம் எழுத்தியல்- பகுதி 5