இலக்கியத்துளி 18.

இலக்கியத்துளி 18.


படிக்கும் வேளையில் மட்டுமன்றி நினைக்குந்தோறும் இனிமை தரவல்லது விவேகசிந்தாமணி. இது ஒரு திரட்டுநூல். பவ்வேறு சந்தர்ப்பங்களில் பல பாவலர்களால் உருவான கவிதைகளின் தொகுப்பு. தமிழுலகின் கவிதைப்பரப்பின் மிகப்பெரிய சொத்து இந்நூல் எனின் மிகையன்று. அதில்வரும் பாடல்கள் சிலவற்றைத் தொகுத்து ஓர் இலக்கியக் காட்சி.


தலைவன் தலைவியை முதற்றடவையாகக் காண்கிறான். தலைவி சற்றுத்தூரத்தே அழகுமயில்போல் நடந்து வந்து கொண்டிருக்கிறாள். அவளின் அழகில் அவன் சொக்கிப்போய்த் தடுமாறுகிறான்.


“அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும்என் நெஞ்சு.”   (1081)


என்ற வள்ளுவன் மொழிக்கேற்ப அவன்மனம் மயங்குகிறது.
அந்த மங்கை அருகில்வர அருகில்வர அருகில்வர மனம் உருகுகிறதே. கரிய கூந்தலையுடைய அழகிய மேனியாள் கானமயில்போற் காட்சி தருகிறாளே. இவள் தனமோ பெரிது இடையோ சிறியது. ஐயகோ,  எப்படித்தான் தாங்குகிறாளோ…தெருவில் இவள் நிற்குங்காலை தெய்வம் எனும்படியாக அல்லவா காட்சிதருகிறாள்…


பாடலைப் பாருங்கள்.

“அருகில்வர அருகில்வர அருகில்வர உருகும்
 கரியகுழல் மேனிஇவள் கானமயில் சாயல்
 பெரியதனம் இடைசிறிது பேதைஇவள் ஐயோ
 தெருவில்இவள் நின்றநிலை தெய்வம் எனலாமே.”   (பாடல் எண் 108)



இப்போது தலைவனைத் தேடித் தலைவி வருகின்ற காட்சி.
தலைவி தலைவனைக் காண்பதற்காக ஓடோடி வருகிறாள். தலைவனோ தலைவியை மெய்ம்மறந்து இரசிக்கிறான். அவள் மூக்குத்தி கண்மையின் ஒளி காரணமாக மேற்பகுதி கறுப்பாகவும்,  உதட்டுச் சாயத்தாற் கீழ்ப்பகுதி சிவப்பாகவும் ஒளிர்ந்து குன்றிமணி (குண்டுமணி) போற்தெரிகிறது தலைவன் கண்களுக்கு. “எத்துணை அழகி என்னவள். சிறப்புமிக்க நகைகளை அணிந்து வருகையில் மூக்குத்தியில் மணி பதிக்காமல் குண்டுமணி அல்லவா அணிந்து வருகிறாள்.” என்று கவலுறுகின்றான் அவன். தலைவி நெருங்கியதும் கேட்டு விடுகிறான்.


தலைவி ஒருகையால் கண்களை மறைத்து மறுகையால் உதடுகளை மூடி  “இப்போது பாருங்கள்.” என்கிறாள். “அடடா.. மூக்குத்தியில் பதித்திருப்பது வெண்முத்தல்லவா…” தலைவன் மயக்கம் கலைகிறான்.


இதுதான் அந்த அழகிய பாடல்:

“கொல்உலை வேல் கயல்கண்
  கொவ்வைஅங் கனிவாய் மாதே
நல்அணி மெய்யில் பூண்டு
 நாசிதாம்ஆ பரணம் மீதில்
சொல்ääஅதிற் குன்றி தேடி
 சூடியது என்றோ என்றான்
மெல்லிய கண்ணும் வாயும்
 புதைத்தனள். வெண்முத்து என்றாள்.    (பாடல் எண் 107)



“வேல்போன்றும் கயல்போன்றும் அமைந்த கண்களையும் கொவ்வைக்கனி போன்ற அழகிய அதரங்களையும் கொண்டவளே,  மேனியெங்கும் நல்லாபரணங்களை அணிந்து மூக்கில்மட்டும் குன்றிமணி அணிந்தது ஏனோ சொல்வாயா?” எனத் தலைவன் வினவலும்,  ஒருகையால் கண்களையும் மறுகையால் இதழ்களையும் மூடியபடியே “இப்போது பாருங்கள். அது வெண்முத்தல்லவா..”  என்கிறாள் என்பது பாடலின் பொருள்.



தன் தலைவியின் அழகைத் தலைவன் எண்ணியெண்ணி வியக்கிறான். காதலியல்லவா….அவளின் அழகும் இதழ்ச்சுவையும் அவனுடையதல்லவா… சிந்திக்கிறான்..
வண்டுமொய்க்கின்ற அழகிய மலர்க்கூந்தல் அவளுக்கு. கண்களோ கெண்டை மீனுக்கு நிகரானவை. அவளைக் காணுந்தோறும் காதலின்பத்தைச் சேர்த்துவைத்திருக்கின்ற வல்லி என்றன்றோ சொல்லத் தோன்றுகிறது. அவள் பேசும்; வார்த்தையோ கிளிமொழி. அவள் வாயிலிருந்து ஊறிவரும் நீர் கற்கண்டோ. சர்க்கரையோ,  தேனோ,  கனியுடன் கலந்த பாகோ என்று மயக்கந்தரும் சுவையுடைத்து. அந்த நீரை அண்டமா முனிவர்களிடம் அமுதமெனக் கொடுத்தால் அதைப் பெற்றுமகிழ்வோடு அருந்திவிடுவார்கள்….. தலைவன் கற்பனை பறக்கிறது.


கவிதையைப் பார்ப்போம்:

“வண்டுமொய்த தனைய கூந்தல்
 மதன பண்டார வல்லி
கெண்டையோ டொத்த கண்ணாள்
 கிளிமொழி வாயின் ஊறல்
கண்டுசர்க் கரையோ தேனோ
 கனியொடு கலந்த பாகோ
அண்டமா முனிவர்க் கெல்லாம்
 அமுதமென் றளிக்க லாமே     (பாடல் எண் 11)



“பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
 வாலெயி றூறிய நீர்.”         (1121)

என்ற வள்ளுவன் வாய்மொழியையும் இணைத்துப் பார்த்தால் கவிதை மேலும் இனிக்குமல்லவா?


கந்தவனம் கோணேஸ்வரன்



கருத்துகள்