ஆங்கிலமும் சட்டமும் தமிழர் அரசியலும்.

ஆங்கிலமும் சட்டமும் தமிழர் அரசியலும்.


ஆங்கில அறிவென்பது அரசியலுக்கு ஒரு மேலதிகத் தகைமையேயன்றி வேறன்று. தங்கள் குடும்பவசதி காரணமாக ஆங்கிலத்தில் கல்விபெற்றவர்களும் ஆங்கிலமோகம் கொண்ட சில பாமரர்களும்தான் ஆங்கிலத்தை உயர்த்திப் பிடிக்கிறார்கள்.
ஆங்கில அறிவடையவர்களெல்லாம் சாதனையாளர்கள்போன்றும் ஏனையோர் இயலாதார்போன்றும் நடந்து கொள்வது மடைமைத்தனத்தின்  ஒரு வெளிப்பாடே.


நாங்கள் தலைவர்கள் எனக் கொண்டாடும் .பொன்னம்பலம் இராமநாதன், சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம், கணபதி காங்கேசு பொன்னம்பலம்,  அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம்,  முருகேசு சிவசிதம்பரம்,  இராஜவரோதயம் .சம்பந்தன், புதிதாய் முளைக்கும் க.வி. விக்கினேஸ்வரன் ஆகியோர் அனைவரும் ஆங்கிலமொழிமூலம் கல்வி பெற்றவர்களே. தமிழை இரண்டாம் மொழியாகப் பயின்றவர்களே.


இவர்களை எடுத்துப்பாருங்கள்: அனைவரும் பிரபுத்துவக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களே. உன்னையும் என்னையும் போன்று தெருக்களில் விளையாடியவர்களல்லர். பட்டம்விட்டு உடலெங்கும் புழுதியில் புரண்டவர்களல்லர். பஞ்சம் தெரியாமல் வளர்ந்தார்கள்: பெற்றோர் தேடிவைத்த பணத்தில் உயர்கல்வி பெற்றார்கள். அவற்றை வைத்துக்கொண்டு நமது சமூகத்துக்குத் தலைமை தாங்க வந்தார்கள். இவர்களிற் சிலரிடம் இரக்கக்குணம் இருந்தது: பலரிடம் மக்களை ஏய்க்கும் குணம் இருக்கிறது.


இவர்களில் எவராவது தங்கள் சிறுவயது வாழ்க்கையில் சாதாரணகுடும்பத்துப் பிள்ளைகளுடன் சேர்ந்து விளையாடியிருக்கிறார்களா? அவர்களின் இன்பதுன்பங்களில் பங்கெடுத்து இருக்கிறார்களா? அவர்களின் பசிபட்டினியையாவது புரிந்து வைத்திருக்கிறார்களா? எதுவுமே இல்லை. பிரபுகளாகப் பிறந்தார்கள்: பிரபுகளாக வளர்ந்தார்கள்;: பிரபுகளாகவே வாழ்ந்து மடிந்தவர்போக ஏனையோர் இன்றும் பிரபுகளாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இருப்பவர்கள் இன்றைய சமுதாய மாற்றத்தை அனுசரித்துத் தங்கள் மேலாதிக்கத்துக்காக ஏழைப்பங்காளன்போல் நடிக்கிறார்கள் அவ்வளவே.


அவர்களுடைய நண்பர்களைப் பாருங்கள்: மொழி மதங் கடந்தாலும் உயர்மட்டப் பிரபுகளாகவே இருக்கிறார்கள். நானும் நீயம் அவர்களுக்கு வேண்டுமானால் அறிமுகமானவர்களாக இருக்கலாமேதவிர நண்பர்களாக் ஒருபோதும் இருக்கமுடியாது. அவர்களுக்கு எம்மால் காரியங்கள் ஆகவேண்டுமென்றால் தோளில் கைபோட்டு அரவணைப்பார்கள். பின்னர் விலகிவிடுவார்கள். அவர்களுயை தேவையும் நமது பணிவும்தான் இருவரையும் இணைத்து வைப்பதல்லாமல் நட்பு அன்று என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.


இந்தச்சக்தி அவர்களுக்கு எங்கிருந்து வந்தது? அவர்களது பெற்றோரின் பணத்தால் வந்தது: அப்பணத்தின்மூலம் பெற்ற கல்வியால் வந்தது: பின்னர் அவற்றைப் பயன்படுத்திப் பெற்றுக்கொண்ட சமுதாய நிலையாலும் சேர்த்த பணத்தாலும் வந்தது. நீயோ நானோ அப்படியான குடும்பத்தில் பிறந்திருந்தால் அவர்களின் வரிசையிலே இணைந்திருப்போம். ஆனால் நீயும் நானும் பிறந்த குடும்பங்கள்வேறு வாழ்க்கை நிiலைமை வேறு. பிறந்த காலங்கள் வேறு.


ஆயினும் அவர்களைவிட நானும் நீயும் ஒருவகையில் மேலானவர்களே. ஏய்த்துப் பிழைக்காத பெற்றோர் எங்களுக்கு வாய்த்திருக்கிறார்கள். ஊரைஅடித்து உலையில் போடாத குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் நாங்கள். உழைப்பையும் நேர்மையையும் நம்பிய பெற்றோரின் பிள்ளைகள் நாங்கள். எனவே நாம் யாருக்கும் தலைசொறிய வேண்டியதில்லை. நிமிர்ந்து நியாயம்பேசும் உறுதி எங்களிடம் இருக்கிறது.


ஆனால் பலர் இவற்றைப் புரிந்து கொள்கிறார்களில்லை. தன்பலத்தை உணராத கோயில் யானைபோலப் பத்துக்காசுக்காகப் பிரபுகளை ஆசீர்வதித்துக் கொண்டிருக்கிறார்கள். பிரபுகளும் எங்களை அனுசரித்தால்தான் உனக்கு உணவு கிடைக்கும் என்பதுபோல நடந்து கொள்கிறார்கள். இததான் இன்றை இலங்கைத் தமிழனின் எழுதாத விதி.


இதை மாற்றும் சக்தி இளைஞர்களிடமே இருக்கிறது. இளைஞர்கள் நினைத்தால் ஆங்கிலம்படித்த பிரபுகளை இருத்திஎழுப்பலாம் என்பதை முப்பதாண்டுகளுக்கும் மேலாக நம்மவர்கள் செயன்முறையிலும் காட்டியிருக்கிறார்கள். ஆங்கிலப் பிரபுகள் அனைவரும் தமிழ்படித்த தம்பியின் ஆணைக்காகக் காத்துக் கிடந்த வரலாறு எங்கள் கண்முன்னேதானே நடந்தது. தம்பியின் உத்தரவுக்காகக் கோப்புகளையும் தூக்கிக் கொண்டு தம்பியின் அரசியல் பொறுப்பாளரிடம் கைகட்டி விளக்கம் சொன்னவர்கள்தாமே இந்த அறிஞர்கள்? அப்போதல்லாம் எங்கே போயிற்று இவர்களின் சட்டத்திறமையும் ஆங்கிலப் புலமையும்?


எட்டாம்வகுப்புப் படித்த டி.எஸ்.சேனநாயக்காவினால் கொண்டுவரப்பட்ட சிங்களக்குடியேற்றத்தை இந்த ஆங்கிலம்படித்த பிரபுகளால் தடுத்துநிறுத்த முடிந்ததா? புத்துலட்சம் தமிழர்கள் நாடற்றவர்களாகும் திட்டத்தை அவர்களால் விமர்சனம் செய்யத்தான் முடிந்ததேயல்லால் இல்லாமற் செய்ய முடிந்ததா? வமர்சிப்பதற்கு ஏன் ஆங்கில அறிவு? சுயமொழி அறிவு போதாதா?


1956இல் பண்டாரநாயக்காவால் கொண்டுவரப்பட்ட தனிச்சிங்களச் சட்டத்தை அவர்களது ஆங்கிலப் புலமையோ சட்டத்திறமையோ தடுத்து நிறுத்தியதா….இல்லையே. சாதாரண எழுதுவினைஞராகப் பணியாற்றிய கோடீஸ்வரன் அரசகரும மொழிச்சட்டத்தை எதிர்த்து வெற்றிகண்டபோது அதைப் பற்றிப்பிடித்து முன்னேறி அடுத்தகட்ட நடவடிக்கைக்குப் போகும் துணிச்சல் இந்தப் பிரபுகளிடம் இல்லாமற் போனதெப்படி?


கோடீஸ்வரன் சாதாரண குடும்பத்தில் பிறந்தவர் உறுதியுடன் போரரடினார்;: இவர்கள் சொகுசான குடும்பத்தில் பிறந்ததனால் போராடுபவர்கள் போல நடித்தார்கள் எனக் கொள்ளலாமா?


சோல்பரி யாப்பின் 29ஆவது பிரிவு தமிழர்களுக்கான பாதுகாப்பு என மேடைகளில முழங்கிய சட்டவாதிகள் எவரேனும் 1970இன் முதலாவது குடியரசுயாப்பில் இத்தகைய பாதுகாப்புப் பிரிவுகள் இல்லாதொழியும்போது தமது சட்டஅறிவாலும் ஆங்கில வளத்தாலும் ஏதாவது சாதித்தார்களா? வெளிநடப்பு செய்தோமே என்று இவர்கள் கூறலாம். மக்களைச் சமாதானப்படுத்தி அடுத்த வாக்கு வேட்டைக்கும் தயாராகியிருக்கலாம். ஆனால் மக்களுக்குத் தேவை உங்கள் வெளிநடப்பும் சமாதானமும் அல்லவே. செயற்பாடுகளுக்கு உதவாத உங்கள் ஆங்கிலப்புலமையை என்னவென்பது?


வெளிநடப்புச் செய்வதற்கேன் ஆங்கில அறிவு? சட்டப்படிப்பு? தமிழ்மாத்திரம் தெரிந்தவர்கள் வெளிநடப்புச் செய்தால் அது வெளிநடப்பு இல்லையென்றாகி விடுமா?


எழுபதுகளில் உங்கள் சட்டஅறிவால் பெற்ற மாவட்டசபையால் நீங்கள் இனத்துக்குப் பெற்றுக்கொடுத்த நன்மையென்ன? ஒன்றுமில்லை யென்றால் மாவட்டசபைத்திட்டத்தை எழுத உதவிய அல்லது பரிசீலித்து ஏற்றுக்கொண்ட உங்கள் சட்டத்திறமையின் பெருமை என்ன?


முதலாவது குடியரசு யாப்புப் போலவே இரண்டாவது யாப்பும் தனிச்சிங்களத்துக்கும் பௌத்தத்துக்கும் முதன்மை வழங்கியபோது உங்கள் சட்டஅறிவும் ஆங்கில ஆளுமையும் எங்கே போனது? ‘நாங்கள் போராடினோம். ஆலோசனை வழங்கினோம். அவர்கள் ஏற்கவில்லை. வெளியேறினோம்.’ என்று பதில் கூறுவதானால் அதனால் மக்களுக்கு விளைந்த நன்மை என்ன? திரும்பவும் உங்கள் பதவிகளை உறுதிப்படுத்துத்தானே நாடகம் போட்டீர்கள்? அதற்கேன் சட்டப்புலமையும் ஆங்கிலத்திறமையும.?


இன்று பெயரளவிலேனும் தமிழ் அரசகரும மொழியாக இருக்கிறது: மாகாண ஆட்சிமுறை நிலவுகிறது எனக் கொண்டால்,  அது யாரால் நிகழ்ந்தது. ஆங்கிலப் புலவர்களாலா ஆங்கிலமறியாமலேயே களத்தில் சாதித்த இளைஞர்களாலா என்பது குழந்தைக்கும் தெரியுமே. பிறகென்ன உங்களுக்குள் வீண்தலைக்கனம்?


கல்வி அறிவிற் குறைந்த பிரேமதாஸாவுக்கு சேர் போட்டவர்கள் நீங்கள். சாதரண நபராக இருந்த மைத்திரியைத் தூக்கிவைத்து வணங்கி ஏமாந்தவர்கள் நீங்கள். ராஜபக்சவினால் தொடர்ந்து பதினெட்டு சுற்றுப்பேச்சுவார்த்தைகளால் ஏமாற்றப்பட்டவர்கள் நீங்கள்.


சுயமொழியிற் கல்விபெற்ற விமல்வீரவன்ச வடக்கையும் கிழக்கையும் நீதிமன்றின்மூலம் பிரித்தபோது அதற்குத் தமிழ்மக்களிடம் விளக்கம் சொல்லிக் காலங்கடத்தியவர்கள் நீங்கள். அதற்கெதிராகச் சட்டநடவடிக்கை எடுக்கத் தைரியமற்றுப் போனவர்கள் நீங்கள். ரணிலுக்கு ஆபத்து என்றபோது சட்டமூளையைக் கசக்கிப் புதுவழிமூலம் நீதிக்கான போராட்டம் செய்து ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் வல்லமை கொண்ட உங்களால் வடக்குக்கிழக்குப் பிரிப்புக்கு எதிராகச் சட்டநடவடிக்கை எடுக்க முடியாமற் போனமையை எந்த வகுதிக்குள் சேர்ப்பது?


இளைஞர்களே…நீங்கள் விழித்தால்தான் நமது அடுத்த தலைமுறைக்காவது விடிவு. ஆங்கிலம் அறிவல்ல ஒரு மொழி.  சட்டம் என்பது திறமையல்ல: அது ஒரு தொழில்.  இதைப் புரிந்துகொள்ளுங்கள். இனத்துக்காக நேரிய வழியில் உழையுங்கள். கசடர்களைப் புறந்தள்ளுங்கள்.


கந்தவனம் கோணேஸ்வரன்

16.03.2020


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 4

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 09

தமிழ் இலக்கணம் அறிவோம் எழுத்தியல்- பகுதி 5