என்ராகம் நீதானடி .

நிலாமுற்றம் காதல்கவிதைப் போட்டி (வெற்றிச் சான்றிதழ் பெற்றது)

என்ராகம் நீதானடி
.
கூந்தல் மேகமெனில் குளிர்வதனம் சந்திரனோ
 கொல்ல வல்ல இருவிழிகள் கூர்வேலோ
நீந்தும் பார்வைதனில் நிறைகின்ற காட்சியெலாம்
 நிலையாது நின்றினிக்கும் வான வில்லோ
ஏந்தும் அழகென்ன எழிற்பூவின் மென்மையதோ
 என்மனதை மயக்க வந்த மன்மதமோ
காந்தள் மலர்விரலோ கற்பகமோ கனிரசமோ
 கன்னல் தமிழ்போலக் களிக்கின்ற இன்பமதோ


காலை எழுந்திருப்பாய் கண்விழிப்பில் முகமலர்வாய்
 கனிந்த விதழ்ச் சிரிப்பாலே மகிழ்விப்பாய்
சோலை நடந்தாற்போல் சுற்றியெனை வலம்வருவாய்
 சொர்க்கத்தில் எனை யிருத்திப் பார்த்திருப்பாய்
ஆலைக் கரும்பாகி உன்னன்பில் நான்கரைவேன்
 அன்னை போல் அரவணைப்பாய்: சேயாவேன்
கோலமயி லுன்றன்முன் என்கொற்றம் கவிழ்ந்தாலும்
 குலவிளக்கே என்ராகம் எப்போதும் நீதானே.


கண்மூடிப் படுத்திருந்தால் கனவெல்லாம் நீதான்
 கண்விழித்துப் பார்த்தாலும் காட்சியெலாம் நீதான்
விண்மூடிக் கருமேகம் கவிகின்ற வேளையிலும்
 விளைகின்ற மின்னல்தரு வெளிச்சமதும் நீதான்
கண்ணோடும் கருத்தோடும் கலந்தென்னை வாழவைக்கும்
 கண்கண்ட அனல்மெழுகும் காட்டாறும் நீதான்
பெண்ணேயுன் புகழ்சொல்லக் கவிதையது போதாமல்
 பிதற்றுகின்ற என்நெஞ்சின்  புதுராகம் நீதான்.


கந்தவனம் கோணேஸ்வரன்
11.01.2020

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 09

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 03 - பகுதி 02

தமிழ் இலக்கணம் அறிவோம். (3) புணரியல் 4