தமிழ் இலக்கணம் அறிவோம் 4. தொடரியல் 2 (4).

தமிழ் இலக்கணம் அறிவோம் 4.
தொடரியல் 2 (4).

வினா வாக்கியம் அமைத்தல்.

வினாவாக்கியங்கள் பொதுவாக இருவகையின.
ஒருவகை: ஆம் அல்லது இல்லை என்ற விடையை எதிர்பார்த்து நிற்குமியல்பின.

மற்றவகை: விளக்கங்கள் கோரி நிற்பன.
இவ்வாக்கியங்களைத் தெளிவுறவும் வழுவறவும் அமைத்தல் சிறப்பாம்.

ஆம் அல்லது இல்லை என்ற பதிலை எதிர்பார்க்கும் வினா வாக்கியங்கள்.

இவை இலகுவானவை. ‘ஆ’ அல்லது ‘ஓ’ என்ற எழுத்தைப் பொருத்தமான சொல்லின் இறுதியில் சேர்ப்பதன்மூலம் இவ்வகை வாக்கியங்கள் அமைக்கப்படுகின்றன.

அவன் வந்தானா?  (விடை: “ஆம்.” அல்லது, “ஆம் அவன் வந்தான்.”)
அவனா வந்தான்?  (விடை: “ஆம்.” அல்லதுä, “ஆம்ää அவனேதான் வந்தான்.)
அவன் வந்தானோ?
அவனோ வந்தான்?

இவற்றுள் “அவன் வந்தானா?” “அவன் வந்தானோ? ஆகிய இருவாக்கியங்களும் ஒரே தன்மையின. இவ்வகை வாக்கியங்கள் செயலுக்கு முன்னுரிமை கொடுக்கும் வினாவாகின்றன. இவற்றின் எதிர்பார்ப்பு “அவன்” எனக் குறிப்பிடப்படும் மனிதன்,  “வந்தானா அல்லனா?” (தற்கால மொழிநடையில்,  “வந்தானா இல்லையா?”) என்பதாகும். இவ்வகை வினாக்களுக்கு ‘ஆம்’ அல்லது ‘இல்லை’ என்றுதான் விடை கூறப்பட வேண்டும்.


“அவனா வந்தான்?” “அவனோ வந்தான்?” ஆகிய இருவினாக்களும் செயலைவிடக் கருத்தாவுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் தொனியைக் கொண்டுள்ளன. இவற்றில் ‘வந்தான்’ என்ற செயல் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. வந்தவன் ‘அவனா?’ அல்லது ‘அவனோ?’ என்பதே வினாத்தன்மை பெறுகிறது. இதைக் கிட்டத்தட்ட “யார் வந்தான்?” என்ற வினாவின் பொருளைக் கொண்டிருப்பதாகவும் கொள்ள முடியும்.



வந்தவன் அவனா,  அல்லது வேறு மனிதனா என்ற கருத்து வினாவில் உயர்ந்து நிற்பதால் வந்தவன் அவன்தானெனில் ‘ஆம்’ என்றும் அல்லன் எனில் ‘இல்லை’ என்றுமே விடை வழங்கப்பட வேண்டும்.


பின்வரும் வினாக்களையும் நோக்கலாம்:


அவள் குடத்தை உடைத்தாளா?
அவள் குடத்தையா உடைத்தாள்?
அவளா குடத்தை உடைத்தாள்?

இம்மூன்று வினாக்களுக்கும் “ஆம்.”,  அல்லது “இல்லை.” என்பவையே விடையாக அமையும். எனினும் வினாக்களின் காரணம்   வெவ்வேறு தன்மையில் அமைந்திருக்கின்றது.

இவ்வினாக்களைப் பின்வரும் முறையிலும் அமைக்கலாம்.

அவள் குடத்தை உடைத்தாளோ?
அவள் குடத்தையோ உடைத்தாள்?
அவளோ குடத்தை உடைத்தாள்?

இவற்றுள்,  முதலாவதுவகை வினாவில் “உடைத்தல்” முக்கியத்துவம் பெறுகிறது. இரண்டாவதில் “உடைக்கப்பட்ட பொருள்” சிறப்பிடம் பெறகிறது. மூன்றாவதில் “குடத்தை உடைத்தவர்” பற்றிய அறிதலே மேலோங்கி நிற்கிறது.


‘ஆ’ அல்லது ‘ஓ’ எழுத்து,  சொற்களின் இறுதியில் பொருத்தமாக இணைத்து இத்தகைய வினாக்களைப் பெறுகின்றோம். இவ்       வெழுத்துகள் முதல் வினாவில் பயனிலையுடனும்,  இரண்டாவது வினாவில் செயப்படுபொருளுடனும் மூன்றாவதில் எழுவாயுடனும் இணைந்து வினாக்களைத் தருகின்றன என்பது கவனத்திற் கொள்ளத்தக்கது

.
எவ்வாறெனினும்,  இன்றைய மொழிநடைமுறையில் ‘ஓ’ எழுத்து வினாக்களிற் பயன்படுவது குறைந்து வருகின்றது.

விளக்கமான பதிலை எதிர்பார்க்கும் வினாக்கள்.


இவ்வகை வினாக்களுக்கு வெறுமனே ‘ஆம்’ அல்லது ‘இல்லை’ என்ற விடைகள் பொருத்தமானவையாக அமைவதில்லை. விடைகள் விளக்கங்களைத் தருவதை நோக்காகக் கொண்டிருத்தலே முறையாகும்.


இவ்வினாக்கள் ஏன்,  என்ன, எப்படி,  எங்கே,  எவ்வாறு,  யாது, யார்,
 எப்போது அல்லது எப்பொழுது ,எதற்காக,  எதற்கு போன்ற சொற்களை உள்ளடக்கித் தோன்றுகின்றன.


“அவன் ஏன் வந்தான்?”  அல்லது “ஏன் அவன் வந்தான்?”


இதற்கு விடையாக ‘ஆம்’ அல்லது ‘இல்லை’ என்ற பதங்களை முன்வைக்க முடியாது. அவன் வந்ததன் காரணத்தைத் தெளிவாகக் கூறினால் மட்டுமே விடை திருப்தியாக அமையும். எனவே, “அவன் படிக்க வந்தான்.” என்றோ “அவன் விளையாட வந்தான்.” என்றோ விளக்கமாக விடை சொல்லப்பட வேண்டும்.

பின்வரும் வினாக்களையும் நோக்குக:


என்னைப்பற்றி என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய்?

திருடன் எப்படி வீட்டுக்குள் நுழைந்தான்? (அல்லது,  எப்படித் திருடன் வீட்டுக்குள் நுழைந்தான்?)

நேற்றிரவு எங்கே சென்றாய்?

பிறர் விடயத்தில் எவ்வாறு நீ தலையிட முடியம்? (எவ்வாறு நீ பிறர் விடயத்தில் தலையிட முடியம்?)

யாது காரணத்தினால் அவன் அங்கே செல்ல மறுக்கிறான்?
யார் அந்தப் பையன்?

எப்போது நீ அவனைச் சந்தித்தாய்?

எப்பொழுது அவன் வருவதாகச் சொன்னான்?

எதற்காக (எதுக்காக) வரமறுக்கிறாய்?

இவற்றுள் எதற்கு (எதுக்கு) முன்னுரிமை கொடுக்க வேண்டும்?

இவர்களில் யாருக்கு உதவிகள் வழங்கப்பட வேண்டும்?

இவ்வாறெல்லாம் விளக்கத்தேவையின் அடிப்படையில் பலவித முறைமைகளில் வினாக்கள் தோற்றம் பெறுகின்றன. வினாக்கள் அமையும் விதத்தைப் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் உற்றுநோக்கி வருவோமாயின் சிறந்த முறையில் வினாக்களை உருவாக்குவது இலகுவானதாக அமையும்

.
கேட்கப்படும் வினாக்களுக்குத் தெளிவான விடைகளை அளிப்பது மாத்திரம் புத்திசாலித்தனம் என்று கொள்ளமுடியாது: ஆரோக்கியமானதும் ஆழமானதுமான கேள்விகளை உருவாக்குவதும்கூட புத்திசாலித்தனம்தான் என்பர் அறிஞர். இக்கூற்றை மனத்திருத்தி கேள்விகளை ஆக்கப் பழகிக் கொள்ள வேண்டும்.





நேர்கூற்று அல்லது உடன்பாட்டு வாக்கியமும் அதற்கெதிரான  எதிர்க்கூற்று அல்லது மறுப்பு வாக்கியமும்
.

சாதாரணமான வாக்கியங்கள் மொழியில் எத்துணை முக்கியத்துவத்தைக் கொண்டிருக்கின்றனவோ அத்துணை முக்கியத்துவத்தை எதிர்க்கூற்று வாக்கியங்களும் கொண்டிருக்கின்றன. எனவே உடன்பாடு, எதிர்க்கூற்று ஆகிய இருவகைகளையும் சரிவரக் கையாளத் தெரிந்திருப்பது நன்று.

கீழே சில உதாரணங்கள் தரப்படுகின்றன. மறுப்பு வாக்கியத்தின்  இலக்கண நடைமுறையும் தற்கால இலகுதமிழ் நடைமுறையும் அவ்வவ் வாக்கியங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. தற்கால நடைமுறையும் இலக்கணத் தகைமை உடையதே என்பதை மறவாதிருத்தல் நலம். 

இறந்தகால  வாக்கியங்கள்:


அவன் வந்தான். (உடன்பாடு) (ஆண்பால்)

அவன் வந்திலன்.—  அவன் வந்தானல்லன். (மறுப்பு -- இலக்கண வழக்கு )

அவன் வரவில்லை. (மறுப்பு – தற்கால வழக்கு)



அவள் சென்றாள். (உடன்பாடு) (பெண்பால்)

அவள் சென்றிலள்.—அவள் சென்றாளல்லள்  (மறுப்பு --இலக்கண வழக்கு)

அவள் செல்லவில்லை. (மறுப்பு –தற்கால வழக்கு)



அவர்கள் நின்றனர். (உடன்பாடு) (பலர்பால்)

அவர்கள் நின்றிலர்.  (மறுப்பு -- இலக்கண வழக்கு.)

அவர்கள் நிற்கவில்லை. (மறுப்பு  -- தற்கால வழக்கு)



பழம் விழுந்தது. (உடன்பாடு) (ஒன்றன்பால்)

பழம் விழுந்திலது. (மறுப்பு -- இலக்கண வழக்கு)

பழம் விழவில்லை. (மறுப்பு – தற்கால வழக்கு)


பசுக்கள் மேய்ந்தன. (உடன்பாடு) (பலவின்பால்)

பசுக்கள் மேய்ந்தில. (மறுப்பு -- இலக்கண வழக்கு)

பசுக்கள் மேயவில்லை. (மறுப்பு – தற்கால வழக்கு)



நிகழ்கால வாக்கியங்கள்:


அவன் வருகின்றான். (உடன்பாடு)

அவன் வருகின்றிலன். (மறுப்பு இலக்கண வழக்கு)

அவன் வரவில்லை. (மறுப்பு – தற்கால வழக்கு)



அவள் பாடுகின்றாள். (உடன்பாடு)

அவள் பாடுகின்றிலள் (மறுப்பு - இலக்கண வழக்கு)

அவள் பாடவில்லை. (மறுப்பு – தற்கால வழக்கு)



அவர்கள் நடக்கின்றனர். (உடன்பாடு)

அவர்கள் நடக்கின்றிலர். (மறுப்பு -இலக்கண வழக்கு)

அவர்கள் நடக்கவில்லை. (மறுப்பு – தற்கால வழக்கு)



நாய் குரைக்கின்றது. (உடன்பாடு)

நாய் குரைக்கின்றிலது. (மறுப்பு - இலக்கண வழக்கு)

நாய் குரைக்கவில்லை. (மறுப்பு – தற்கால வழக்கு)



பறவைகள் பறக்கின்றன. (உடன்பாடு)

பறவைகள் பறக்கின்றில. (மறுப்பு - இலக்கண வழக்கு)

பறவைகள் பறக்கவில்லை. (மறுப்பு - தற்கால வழக்கு)




எதிர்கால வாக்கியங்கள்:


அவன் வருவான். (உடன்பாடு)

அவன் வரான். (மறுப்பு - இலக்கண வழக்கு)

அவன் வரமாட்டான். (மறுப்பு – தற்கால வழக்கு)



அவள் சிரிப்பாள். (உடன்பாடு)

அவள் சிரியாள். (மறுப்பு - இலக்கண வழக்கு)

அவள் சிரிக்கமாட்டாள். (அறுப்பு – தற்கால வழக்கு)



அவர்கள் விளையாடுவார்கள். (உடன்பாடு)

அவர்கள் விளையாடார். (மறுப்பு - இலக்கண வழக்கு)

 அவர்கள் விளையாடமாட்டார்கள். (மறுப்பு – தற்கால வழக்கு)



அது வரும். (உடன்பாடு)

அது வராது (மறுப்பு – இலக்கண வழக்கும் தற்கால வழக்கும்)

அது வரமாட்டாது (பேச்சு வழக்கு)


அவை வரும். (உடன்பாடு)

அவை வரா. (மறுப்பு - இலக்கண வழக்கும் தற்கால வழக்கும்)

அவை வரமாட்டாது. (பேச்ச வழக்கு)





பின்வரும் எடுத்துக்காட்டுகளையும் கருத்திற் கொள்க:


தம்பி விளையாடிக் கொண்டிருந்தான். (உடன்பாடு)

தம்பி விளையாடிக் கொண்டிருந்திலன். (எதிர்நிலை)

தம்பி விளையாடிக் கொண்டிருக்கவில்லை. (தற்கால எதிர்நிலை)



இவற்றை மேலும் விளங்கிக் கொள்ளவும் சிறப்பாக எதிர்மறை வாக்கியங்களை ஆக்கவும் தொடர்ந்து நூல்களை வாசித்தறிதல் பெரும் துணையாயமையும் என்பதை மனதிற் கொள்க.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 4

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 09

தமிழ் இலக்கணம் அறிவோம் எழுத்தியல்- பகுதி 5