இலக்கியத்துளி 7

இலக்கியத்துளி 7

வறுமையால் வாடிய புலவரொருவர் ஒரு செல்வந்தனை நாடிச் சென்றார். அவனைப் புகழ்ந்து பாடினால் பரிசு ஏதாவது கிடைக்கும் என்ற நம்பிக்கை அவருக்கு. அந்தச் செல்வந்தன் மகா கஞ்சப்பிரபு என்பது புலவருக்குத் தெரியாது.


புலவரைக் கண்டதும் கஞ்சப்பிரபு வெலவெலத்துப் போனான். “புலவன் பாடி முடித்ததும் ஏதாவது பொருள் கொடுக்க வேண்டுமே.” என்பதுதான் அவன் கவலை. தான், பிறருக்குப் பொருள் கொடுக்க விரும்பாத உலோபி என்பது வருகின்ற புலவனுக்குத் தெரியக்கூடாது: அதேவேளை பொருள் கொடுக்காமல் புலவனைத் திருப்பி அனுப்பிவிடவும் வேண்டும் என்பதே அவனது விருப்பம்.


பிரபுவை நெருங்கிய புலவர், “ ஐயா, யான் தங்களைப் பாடிப் பரிசுபெற வந்திருக்கும் புலவன். தங்களைப் பாடுவதற்கு அனுமதி தாருங்கள்.” என்று பவ்வியமாகக் கேட்டார். அதைக் கேட்ட  கஞ்சப் பிரபுவோ நடுநடுங்கிப் போனான். பேராபத்தில் சிக்கிக் கொண்டவன்போல் தவித்தான். “எனக்கு வந்த மோசம் யாதோ?” என அஞ்சி உடலம் வியர்த்;து வாய் குளறினான். “ம்…பாடுக.” என வேண்டா வெறுப்பாகச் சொன்னான்.


பிரபுவின் நிலை தெரியாத புலவர் அவனைப் புகழ்ந்துபாடத் தொடங்கினார்.

“சிறப்புகள் நிறைந்ததும் விரும்புவற்றைத் தருவதுமான காமதேனு என்கின்ற தெய்வப் பசுவே,

தேவருலகில் தழைத்திருக்கும் கற்பகவிருட்சமே,

சிந்தாமணிக்கு நிகராகக் கேட்டவற்றைக் கொடுக்கவல்ல வள்ளலே,

வாய்ச்சொல் தவறாத அரிச்சந்திரப் பிரபுவே….”

என்று தொடரவும்,  சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள விழைந்த உலோபி,  கண்கள் இரண்டும் கோபத்தாற் சிவக்க,

“யாரை நீ மாடு (காமதேனு) என்று சொல்கிறாய்?

என்னைக் கல் (சிந்தாமணி) என்று சொல்ல உனக்கு என்ன துணிச்சல்?

என்னை மரம் (கற்பகதரு – தாரு) என்றும் கூறுகிறாயா?

இப்படியெல்லாம சொன்னவற்றைக்கூட ஓரளவு பொறுத்துக் கொண்டாலும் அரிச்சந்திரன் என்று அடாத வார்த்தையால் என்னை அழைத்து விட்டாயே…

யாரிடம் நான் அடிமையாக இருந்தேன்?

யாரிடம் என் மனைவியை விற்றேன்?

ஐயகோ இந்த வசைச் சொற்கள் இனி என்னை விட்டு நீங்குமோ…”


என்று  அலறியடித்துக் கொந்தளித்த கஞ்சனைக் கண்டு துணுக்குற்ற புலவர்,  “தில்லையுள் நின்று நடம்புரிகின்ற ஆடல்வல்லானே! இவ்வளவு மோசமான தீய பிறப்பாளனைப் பாடி வருந்தும்படி என்னைப் படைத்;தனையே.” என்று கவன்றார்.


இந்தக் காட்சியைத் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் அழகான கவிதையாக்கித் தமிழுலகுக்குத் தந்திருக்கிறார். இதுதான் அந்தப் பாடல்:


வாரும்நீர் யாரென்ன வித்துவான் என்னவும்
  மதிமோசம் வந்ததென்றே
வாய்குளறி மெய்யெலாம் மிகநடுக் குற்றுநீர்
  வந்தகா ரியம்ஏதெனச்
சீருலா வியகாம Nதுனுவே தாருவே
  சிந்தாமணிக் குநிகரே
செப்புவச னத்துஅரிச் சந்த்ரனே எனலும்
  சினந்துஇருக ணுஞ்சிவந்தே
யாரைநீ மாடுகல் மரமென்னு சொன்னதும்
  அலால்அரிச் சந்திரன்என்றே
அடாதசொற் சொன்னையே யார்க்கடிமை யாகினேன்?
  யார்கையிற் பெண்டுவிற்றேன்?
தீருமோ இந்தவசை என்றுரைசெய் வெகுகொடிய
  தீயரைப்பாடி நொந்தேன்
திருமன்றுள் நடுநின்று நடமொன்று புரிகின்ற
  தென்தில்லை நடராசனே!


ஒரு புலவரின் புலம்பல்கூடத் தமிழுக்கு அழகான கவிதையைத் தந்திருக்கிறது.


                    கந்தவனம் கோணேஸ்வரன்
                    10.04.2019
   
 



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 4

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 09

தமிழ் இலக்கணம் அறிவோம் எழுத்தியல்- பகுதி 5