எங்கள் திருக்கோணமலை – 9

எங்கள் திருக்கோணமலை – 9

நுரைபொங்கும்  அலைவந்து கரையேறிக் களிக்கும்
 நுவலரிய தமிழ்ச்சான்றோர் அறங்காதில் ஒலிக்கும்
தரைபொங்கி நெல்மணியாய்த் தலைசாய்ந்து கிடக்கும்
 தமிழர்நலம் காப்போர்கரம் தழும்பேறிச் சிவக்கும்
வருவினைகள் நலமாக அறிஞர்குழாம் உழைக்கும்
 வையகத்துத் தமிழர்க்கெலாம் தலைநகராய்ச் செழிக்கும்
திருக்கோணை மலைமண்ணின் புகழுரைக்கும் நாவில்
 திருவேறி அறிவேறித் தெளிந்தோர்மம் மேவும்.

அந்தணர்தம் கரங்குவிய அழகுமலர் விரியும்
 அதிகாலை நேரமென வண்டுகாதில் மொழியும்
தென்கயிலை மலையமர்ந்து தெய்வம்அருள் பொழியும்
 தெருவெங்கும் சிவநாமம் தேனெனவே சொரியும்
இன்புறுநல் லோர்நெஞ்சில் இனியஅன்பு மலரும்
 எல்லோரும் நலம்பெறுக என்றுகதிர் விரியும்
சென்றபல நூற்றாண்டாய்ச் சைவமும் தமிழும்
 சேர்ந்துவளர்ந்த தாலிந்தச் சிவபூமி மகிழும்

வருவோரை உபசரித்து வாழவகை செய்யும்
 வாழ்வோரை அறந்தூணாய் வழுவின்றிக் காக்கும்
செருக்கோடு நிற்பவரைச் சிலநாளே ஏற்கும்
 செய்தொழிலில் நேர்மையுள்ளோர் தனைவாழ்த்திக் வணங்கும்
திருக்கோணை மலைமண்ணில் நொந்திழந்து கெட்டோர்
 தேடினுங்கா ணாரென எமக்குரைத்தார் முன்னோர்
விருப்போடு மலையமர்ந்து குடிதன்னைக் காக்கும்
 கோணேசர் அருளாலே மண்ணென்றும் சிறக்கும்.

                                     கந்தவனம் கோணேஸ்வரன்
                                     ஓகஸ்ட் 2007

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 4

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 09

தமிழ் இலக்கணம் அறிவோம் எழுத்தியல்- பகுதி 5