எங்கள் திருக்கோணமலை -- 10

எங்கள் திருக்கோணமலை  -- 10

அந்தணர்தம் கரங்குவிய அம்புயம் மலரும்
 ஆன்மிக ஸ்வரங்களுடன் பொழுதும் புலரும்
செந்தமிழர் தேவாரம் செவியில் ஒலிக்கும்
 செவ்வரி வண்டுமலர் தாவிக் களிக்கும்
முந்தையர்தம் நல்லாசி மழையாய்ப் பொழியும்
 மூத்தநல் லறிஞர்தம் வழியில் வாழும்
எந்தமிழர் திருக்கோண மலையெங்கள் பூமி
 எம்தந்தை தாய்வாழ்ந்த இனியதமிழ்ப் பூமி

கடலலைகள் மந்திரங்கள் ஓதி நிற்கும்
 கண்கவரும் மலரினங்கள் மகிழ்ந்தே பூக்கும்
படம்போட நண்டுவந்து மணலிற் பாயும்
 பாய்கின்ற அலைவரவாற் படமும் தேயும்
திடங்கொண்ட மீன்குஞ்சு கரையைப் பார்க்கும்
 சிறுவர்தம் துணிவுகண்டு உடலம் வேர்க்கும்
அடங்காது தீமைகண்டு ஆர்க்கும் தமிழர்
 அணிதிரளும் பூமியெங்கள் அன்னை பூமி

பசியவயல் நெல்மணியும் பல்தொழிலும் பெருகும்
 பசுவினங்கள் நிரைநின்று பால்தன்னைச் சொரியும்
இசைநடனம் ஓவியமும் உயர்ந்திங்கு ஓங்கும்
 எங்கும்நிறை பள்ளிகளால் அறிவுயர்ந்து துலங்கும்
திசைதோறும் தீந்தமிழர் புகழ்பரப்பி நிற்கும்
 திருக்கோண மலைமண் தென்கயிலை யாகும்
அசையாது கோணேசர் குன்றமர்ந்து காக்கும்
 அருந்தமிழர் பூமியெங்கள் புனிதப் பூமி.

                       கந்தவனம் கோணேஸ்வரன்
                       ஆவணி 1998


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 4

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 09

தமிழ் இலக்கணம் அறிவோம் எழுத்தியல்- பகுதி 5