தம்பி.தில்லைமுகிலன் நினைவோடு…

(நினைவுக் கவியரங்கத் தொடக்கக் கவிதை)

நீண்டபல நாட்களின்பின்
 நினைவேந்தற் கவியரங்கில்
மீண்டும்நான் வந்துள்ளேன்
 மிக்கபெரு மகிழ்வுகொண்டேன்
வேண்டுமொழி தந்துதவும்
 வாணியன்னை தாள்பணிந்து
ஈண்டுநான் பாடலுற்றேன்
 இசைந்தென்னை ஏற்பீரே.

தம்பிதில்லை முகிலன் எனும்
 தணியாத ஆளுமையின்
அங்கமென வாய்த்த இந்த
 அழகான கவியரங்கை
நம்பிநான் தொடக்கி வைக்க
 நான்பெற்ற சிறப்புயாதோ?
தம்பிஎன்னைக் காத்தருள் வாய்
 தமிழ்ப்புயலே அண்ணாவே.

அம்கௌரி தாசன் என்ற
 அழகான தலைமையின்று 
எம்முன்னே நிற்கி றது
 இனியென்ன கவிமழைதான்
இம்மென்றால் கவி பாடும்
 எத்தனையோ கவிஞர் இங்கு
எம்மனத்தைக் கொள்ளைகொள்ள
 இனியதமிழ் படைக்கவுளார்.



அண்ணாவின் புகழ்சொல்லும் 
 அரியதமிழ்க் கவியரங்கில்
என்நாவும் தமிழ்பேச
 இயன்றதனால் பெருமையுற்றேன்
எந்நாளும் அவர்பெருமை
 இந்தமண்ணில் நிலைத்திருக்க
நின்றாடும் அம்பலத்தான்
 துணையிருப்பான்: கவிதொடர்வோம்.

அரங்கம் நிறைந்திருக்கும்
 அறிஞர்பெரு மக்களுக்கும்
அரங்கைச் சிறக்கவைக்கும்
 ஆன்றறிந்த பெரியோர்க்கும்
கரங்கள் கூப்பியிங்கு 
 கனிவாக வணங்குகிறேன்
அரங்கம் வலிமைபெற
 அன்னைத்தமிழ் அருகிருப்பாள்.

திருக்கோணை மண்தந்த திகட்டாத கவிஞரவர்
 தெளிவான தமிழாலே அவையடக்கும் புலவரவர்
செருக்கோடு வலம்வந்த செந்தமிழர் நிலவுஅவர்
 சிறப்பான நாடகத்தால் சிந்தனையைக் கிளறியவர்
ஒருக்காலும் பிழையொப்பாத் துணிச்சலுடை மனத்தரவர்
 ஓர்மமுடைத் தமிழ்க்கலைஞர் எனவாழ்ந்து காட்டியவர்
விருப்போடு அவர்புகழைப் பாடுதற்கு இம்மேடை
 வரமீந்த தால்திறந்து வைக்கின்றேன் பாவோடை.



எடுத்தவுடன் கவிதொடுக்கும் இனியதமிழ்ப்  புலமை
 எல்லோ ருடனும்பழகும் தோழமையின் எளிமை
தொடுத்தபணி முடிக்கும்வரை சோர்வறியா இளமை
 தொல்தமிழர்  கலைகளிலே ஆழ்ந்ததமிழ்த் திறமை
இடுக்கண்தரும் பணிகளையும் இசைந்தேற்கும் பெருமை
 எந்தநிலை யிலுமுள்ளம் தளராத வலிமை
நடுத்தெருதான் என்றாலும் கவிநயத்தோ டுரையாடி
 நான்குபேரைச் சுற்றிவர வைத்திருக்கும் புதுமை.

கைப்பிடியில் எனைவைத்துக் கவியெழுதச் செய்தவர்
 கலைத்திறனின் சிறப்புகளைக் கதைகதையாய்ச் சொன்னவர்
எப்படியும் ‘பிழைத்திருத்தல்’ வாழ்க்கையல்ல என்றவர்
 இப்படித்தான் வாழ்வதென்று விதிசொல்லி வாழ்ந்தவர்
தப்பென்று தெரிந்தவற்றைத் தலைநிமிர்த்திக் கேட்டவர்
 தலைவணங்கிச் சமரசங்கள் பேசத்தெரி யாதவர்
எப்போதும் தனித்திறனால் உயர்ந்தோங்கி நிற்பவர்
 எங்கள்தில்லை முகிலன்தமிழ்த் தாய்தந்த வித்தகர்.

நாடகத்தில் புரட்சிசெய்தார் நல்லதமிழ்க் கவிதைசெய்தார்
 நவில்கின்ற வார்த்தைகளால் மனங்களையும் வென்றெடுத்தார்
ஆடலிலும் மேன்மைகண்டார் அரசியலும் பேசிவந்தார்
 அனைத்துக்கும் மூலதனம் நேர்மையே என்றுரைத்தார்
பாடசாலை விழாக்களிலும் பங்களிப்புச் செய்துநின்றார்
 பைந்தமிழர் கலைபயிற்றும் பணிதனிலே மகிழ்வுகொண்டார்
தேடரிய பொக்கிசமாய்த் திருக்கோண மலைமுத்தாய்த்
 தம்பிதில்லை முகிலனென்ற தலைமகவாய் வாழ்ந்திருந்தார்.

அன்னாரின் பெயரையிந்த மண்சொல்ல வேண்டும்
 அவர்வளர்த்த கலைகளிங்கு தழைத்தோங்க வேண்டும்
எந்நாளும் அவர்நாமம் நிலைத்திருக்க வேண்டும்
 எங்கள்தமிழ் உலகவர்க்கு மதிப்பளிக்க வேண்டும்
பின்னாளில் வருகின்ற பைந்தமிழர் சந்ததிக்கும்
 பெருங்கலைஞர் வரலாறு தெரிந்திருக்க வேண்டும்
ஒன்றாகி எல்லோரும் மகிழ்ந்திருக்க வேண்டும்
 உயிர்த்தமிழின் புகழ்என்றும் உயர்ந்திருக்க வேண்டும்.

அவர்திறனைப் பேசுதற்கு
 அறிவார்ந்த தமிழ்ப்புலவர்
தவமுனிவர் போலிங்கு
 தமிழாய்ந்து நிற்கின்றார்
அவர்களிங்கு வரவேண்டும்
 அழகுதமிழ் பொழியவேண்டும்
செவிகுளிர நீங்கள்கேட்டு
 செந்தமிழ்த்தேன் பருகவேண்டும்.
                  என்பதனால்,

 தொடக்கக் கவிதைதனை
 சுந்தரமாய் நிறைவுசெய்தேன்
அடக்கப் பணிவுடனே 
 அவைநீங்கிச் செல்கின்றேன்
தொடராய்க் கவியுரைக்கத்
 தூயதமிழ் வல்லாளர்
அடலேறாய் இருக்கின்றார்
 அவர்கவிதை கேட்போமே…. 

                                     கந்தவனம் கோணேஸ்வரன்   
 19.09.2018





கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 4

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 09

தமிழ் இலக்கணம் அறிவோம் எழுத்தியல்- பகுதி 5