சைவநெறித் தத்துவம் - 4


சிவனின் நிலைகள்.

சைவசமயிகளின் முழுமுதற் கடவுளான சிவபெருமான் சொரூபநிலை, தடத்தநிலை என இருநிலைகளில் அடையாளப் படுத்தப்படுகிறார்.

சொரூபநிலையில் அவர் குணங்குறிகள் இல்லாதவராகவும் செயற்பாடுகள் அற்றவராகவும் இருக்கிறார். பிரபஞ்ச ஒடுக்கத்தின் போது இந்நிலையில் இறைவன் இருப்பதாகக் கொள்ளப்படுகிறது. இந்நிலையில் இறைவன் இருக்கும்போது பரப்பிரம்மம் என்றும் பரம்பொருள் என்றும் சைவர்களால் அடையாளங் காணப்படுகிறார். இதுவே இறையின் இயல்பு நிலையாதலின் சொரூபநிலை எனப்படுகிறது. 

சொரூபநிலை மனம் வாக்கு காயம் என்பவற்றால் உணரமுடியாதது. அநாதி முத்த சித்தாய், சத்தாய் இறை நிற்கும் நிலை இது. இறைவனின் முழுமையான சிறப்பம்சங்கள் சொரூபநிலையிற் காணப்படுவதால், இதனைச் சிறப்பியல்புநிலை என்றும் சொல்வர். இதன்போது உயிர்களோ பிரபஞ்சமோ இயங்குவதில்லை. 

பிரபஞ்சம் தோற்றம் பெறும்போது இறைவன் தடத்தநிலைக்கு வந்து உயிர்களுக்கு அருள் பாலிக்கிறார். தடத்த நிலையின் போது அருவ, அருவுருவ, உருவத் திருமேனிகளில் தோன்றி உயிர்கள் உய்ய வழிகாட்டுகிறார். எனவே சிவனின் மூவகைத் திருமேனிகளும் தடத்தநிலை சார்ந்தவையே. 

உயிர்களின் ஈடேற்றம் வேண்டி பரமேஸ்வரன் குணங்குறிகளைக் கொண்ட திருமேனிகளைப் பெற்று அருள் பாலிக்கின்றார். இந்நிலையிற்றான் சிவபெருமான் ஆன்மாக்களின் வழிபாட்டுக்கு இயைபுடையவராகிறார்.

சொரூபநிலை குணங்குறிகள் அற்றதாகவும் மனதாலோ உடலாலோ வார்த்தைகளாலோ எட்டமுடியா நிலையிலிருப்பதாலும் அது வழிபடுதற்கு உரித்தாவதில்லை. எனவே, தடத்தநிலையில் உள்ள இறைவனையே திருக்கோயில் முறைமைகளாலும் மனதாலும் எம்மால் வழிபடமுடிகிறது.

சிவபெருமான் தனது சக்தியின் அல்லது வல்லமையின் துணையால் ஐவகைப் பேதங்களிற் தோன்றி உயிர்களுக்கு உதவுகிறார். பிரம்மாவாகப் படைத்தலையும், விஷ்ணுவாகக் காத்தலையும், உருத்திரனாக அழித்தலையும். மகேசுரனாக மறைத்தலையும், சதாசிவனாக அருளலையும் செய்வதன்மூலம் ஆன்மாக்களின் ஈடேற்றத்துக்கு வழிசமைக்கிறார்.

இவ்வாறான தோற்றங்களை இறைவன் இயல்பாகவே பெறுவதால் அவர் எவ்வித மாற்றத்துக்கும் உட்படுவதில்லை. மாயையின் உதவியும் அவருக்கு வேண்டியதில்லை. எனவே அவர் நிர்விகற்பன் எனப்படுகிறார். நிர்வகற்பன் என்பதன் பொருள் மாற்றமற்றவன் என்பதாகும்.

படைத்தல் என்பது, தனு, கரண, புவன, போகங்களை ஆக்கி உயிர்களின் கன்ம வினைகளுக்கேற்ப அவற்றை உயிர்களுக்கு அளித்தலாம்.

காத்தல் என்பது உயிர்களுக்குக் கிடைக்கப்பெற்ற வாய்ப்புகளை உயிர்கள் சரியாகப் பயன்படுத்துதற்குத் துணையாக இருத்தலாம்.

அழித்தல் என்பது ஒரு பிறப்பில் உயிரானது தனக்குரிய பிராப்த பலன்களை அநுபவித்ததும், அப்பிறப்பின் தூல உடம்பிலிருந்து உயிரை நீக்குதலாம்.

மறைத்தல் என்பது ஆன்மாக்களைப் போகசுகத்தில் மூழ்கவைத்து அவற்றின் வினையாற்றல்களை யடுத்துப் பெறும் நிலைக்கேற்ப இன்பத்தையோ துன்பத்தையோ பொருட்டாகக் கொள்ளவிடாது மலங்களின் வீரியத்தை ஆன்மாக்களின் செயற்பாட்டிலிருந்து மறைத்தலாம். இது திரோதான சக்தி என்றும் அழைக்கப்படும்.

அருளல் என்பது படைத்துக் காத்து அழித்து மறைத்தன் பெறுபேற்றுக்கேற்ப உயிர்களைப் பீடித்திருக்கின்ற ஆணவமலத்தை முற்றாக வலிகெடச் செய்து வீடுபேற்றை அருளல் என்பதாம். வீடுபேறு தவிர்ந்த பிறசுகங்கள் அருளல் என்ற வகைப்படா.


26.08.2018 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 4

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 09

தமிழ் இலக்கணம் அறிவோம் எழுத்தியல்- பகுதி 5