அரசியற் கட்டுரை - 05- வடமாகாண முதலமைச்சரும் மண்குதிரும்.
வடக்கு முதல்வர் விக்கினேஸ்வரனின் பதவிக்காலம் இன்னும் சிலவாரங்களில் நிறைவுற இருக்கிறது. அவரைத் தேர்தலுக்குக் கொண்டுவரும்போது மக்களிடையே காணப்பட்ட எதிரும் புதிருமான கருத்துகளில் எவையும் அவரைப்பற்றி மக்களிடையே இப்போது இருப்பதாகத் தெரியவில்லை. மக்களின் எதிர்பார்ப்புகளில் எதனையும் நிறைவேற்றாமற் காலங்கடத்திய ஒரு முதலமைச்சராகவே அவர் பதவியிலிருந்து நீங்க வேண்டிய நிலையில் காணப்படுகிறார்.
கொழும்புத் தமிழர் சிலர் தங்களது ஆளுமையை மேம்படுத்துவதற்கான உத்தியாகவே அவரை முதலமைச்சர் வேட்பாளருக்குப் பரிந்துரைந்தனர். தனது ஆசிரியர் என்றவகையில் சுமந்திரனும், நீதியரசர் என்றவகையில் திறமைசாலி ஒருவரை அரசியலுக்குக் கொண்டுவருகிறோம் என்ற நம்பிக்கையில் அன்றைய தமிழரசுக் கட்சியினதும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினதும் தலைவரான சம்பந்தனும் அப்பரிந்துரையை மனதார ஏற்றுச் செயல்வடிவம் கொடுத்தனர்.
வேட்பாளர்கள் தெரிவுக்குமுன்னர் வவுனியாவில் இடம்பெற்ற தமிழரசுக்கட்சியின் மத்தியகுழுக் கூட்டத்தில் விக்கினேஸ்வரனின் விடயம் அலசப்பட்டபோது அனைத்துக் கருத்துகளும் சம்பந்தனின் போக்குக்கு எதிராகவே அமைந்திருந்தன. விக்கினேஸ்வரன் நீதியரசராக இருந்துவிட்டுப் போகட்டும்: அவர் வடமாகாண சபைக்குப் பொருத்தமான மனிதர் அல்லர் என்ற கருத்தையே அனைவரும் கொண்டிருந்தனர். பதிவு செய்துமிருந்தனர்.
ஒருவர்கூட விக்கிக்கு ஆதரவாகக் கதைக்கவில்லை. ஆதரவான மனோநிலையிலிருந்த சுமந்திரன்கூட அப்போது அமைதியாக இருக்க வேண்டியதாயிற்று. விக்கியின் தெரிவுக்கு எதிராகச் சுமார் நான்குமணி நேரமாக முன்வைக்கப்பட்ட கருத்துகளின் நிறைவில் கருத்துரை பகர்ந்த ஒவ்வொருவரும் தாங்கள் விரும்பாவிடினும் கட்சி எடுக்கும் முடிவுக்குக் கட்டுப்படுவோம் என்ற பண்பான வாக்குறுதியையும் கொடுத்திருந்தனர்.
சம்பந்தன் இறுதியில் தனது விருப்பத்தை வலுப்படுத்த வில்லூன்றியானையும் பத்ரகாளியையும் அழைக்க வேண்டியதாயிற்று. விக்னேஸ்வரன் நல்லமனிதர் என்றும் நியாயமாக நடந்து தமிழ்மக்களின் போராட்டத்துக்கு உந்துசக்தியாக நிற்பார் என்றும் வலிந்து உறுதிப்படுத்தியிருந்தார். இவ்வாறாகக் கட்சி முக்கியஸ்தர்களால் நிராகரிக்கப்பட்டும் தலைமையின் முடிவுக்காக ஏற்றுக் கொள்ளப்பட்ட மனிதர்தான் இன்றைய வடமாகாண முதலமைச்சர்.
கடந்த தேர்தலில் விக்கினேஸ்வரன் பெற்ற வெற்றி அவருடைய செல்வாக்கால் கிடைத்த ஒன்றன்று. அவருக்கு வாக்களிக்க மக்கள் தயங்கினார்கள். தென்னிலங்கைத் தமிழராகவே அவரைப் பார்த்தார்கள். சிங்களவர்களோடு சம்பந்தம் செய்தவரும் அரச விசுவாசியாகப் பணியாற்றி ஓய்வுபெற்றவருமான நீதியரசருக்கு வடபகுதிக் கிராமங்கள் தெரியுமா, மக்களின் தேவைகள் புரியுமா என்று கேட்டார்கள். அவரது பாதங்கள் இந்தமண்ணை எப்போதாவது தொட்டிருக்கின்றனவா என்றும் கேட்டார்கள்.
இவற்றையெல்லாம் மாற்றி அவரை வெற்றியாளராக்கியவர்கள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினரே. வடக்கிலிருந்த தொண்டர்கள் மட்டுமல்லாது, கிழக்கிலிருந்தும் ஏராளமான தொண்டர்கள் வடபகுதி சென்று அவருக்காக வாக்குக் கேட்டார்கள். தங்கள் தலைவர் சம்பந்தனுக்கு அறிவுரீதியாகவும் சட்டரீதியாகவும் உதவி விரைவில் தீர்வைப் பெற்றுத்தர வல்ல தலைவராக அவர் செயற்படுவார் என்ற நம்பிக்கையை மக்களிடம் ஊட்டினார்கள். இப்பரப்புரைகளை நம்பித்தான் மக்கள் வாக்களித்து அவரை முதலமைச்சராக்கினார்கள். வேட்பாளர் விக்கினேஸ்வரனும் தேர்தற் பரப்புரைகளில் அத்தகைய பிம்பத்தையே வெளிப்படுத்தியும் வந்தார்.
சம்பந்தனும், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும், அவருக்கு வாக்களித்த மக்களும் எதிர்பார்த்த விக்கினேஸ்வரனை வெற்றிக்குப் பிறகு காணவில்லை. மிகப்பெரிய வாக்கு எண்ணிக்கையில் வெற்றி கண்டதாலோ என்னவோ வித்தியாசமான ஒரு மனிதராகவே அவர் காட்சியளித்தார். வீட்டுச்சின்னத்தை அவருக்கு வழங்கிய தமிழரசுக்கட்சியையோ அவரது வெற்றிக்காக உழைத்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பையோ முன்னிலைப்படுத்தாமல் அவற்றை இரண்டாம் பட்சமாகக் கருதி சுயம்புபோல நடக்கத் தொடங்கினார்.
ஆட்சிக்கு வந்த புதிதில் ஆளுநர் தனது செயற்பாடுகளுக்கு இடையூறாக இருக்கிறார் என்றார். ஆளுநரும் மாற்றமடைந்தார். பிரதம செயலாளர் தனக்கு ஒத்துழைப்பு வழங்குகிறாரில்லை என நீதிமன்றம்வரை சென்று வந்தார். பின்னர் சிலகாலம் கழித்து தன்னால் பரிந்துரைக்கப்பட்டு நியமனம் பெற்ற அமைச்சர்களில் இருவர் ஊழல்வாதிகள் என்று ஒரு விசாரணைக்குழுவை நிறுவினார். அதன்பிறகு தான்நிறுவிய குழுவின் அறிக்கையையே ஏற்றுக்கொள்ளத் தயங்கினார். விசாரணைக் குழுவின் கருத்துக்குமாறாக இரண்டு அமைச்சர்களையும் வெளியேற்றினார். புதிய விசாரணை தொடங்கப்படும் என்றார். அதன் முடிவு என்னவென்பதை இன்றுவரை வெளிப்படுத்தாது காலம்கடத்துகிறார்.
குற்றம் செய்தார்கள் என்று நிரூபிக்கப்படாத நிலையில் வெளியேற்றப்பட்ட அமைச்சர்களுடன் சேர்த்து ஏனைய இருஅமைச்சர்களையும் மெதுவாகப் பதவியிலிருந்து அகற்றினார். அவ்வாறு அகற்றப்பட்டவர்களுள் ஒருவரான அமைச்சர் டெனீஸ்வரன் நீதிமன்றம்வரை சென்று தன்னை நீக்கியது செல்லாது என்ற தீர்ப்பையும் பெற்றார்.
ஆனால் முதலமைச்சரோ டெனீஸ்வரன் தொடர்பான நீதிமன்றத் தீர்ப்பைக் கிடப்பிற்போட்டாத் தளர்த்தி விடலாமெனக் கனவு காண்கிறார். இளம் சட்டத்தரணியிடம் தான் நீதிமன்றில் தோல்வி கண்டதைப்பற்றி விக்கினேஸ்வரன் சிறிதேனும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. குற்றத்தை ஆளுநர்மேல் செலுத்திவிடடுத் தான் சரியாக நடந்து கொண்டதாகச் சாதிக்கிறார்.
ஒரு முதலமைச்சர் தனக்குகந்தவர்களெனப் பெயர் குறிப்பிடுபவர்களையே ஆளுநர் அமைச்சர்களாக நியமனம் செய்கிறார். இதன்படி வடமாகாண அமைச்சர்கள் அனைவரும் முதலமைச்சரினால் பெயர் குறிப்பிடப்பட்டவர்கள் என்பது தெளிவு. தன்னால் நியமிக்கப்பட்ட அனைத்து அமைச்சர்களும் ஊழல்வாதிகள் என்றால் அவர்களை வழிநடத்தி வேலைவாங்கும் திறன் முதலமைச்சருக்கு இல்லை என்றாகிவிட்டது. இத்தகைய கையாலாகாத முதலமைச்சர்தான் இப்போது தனக்குமுன்னே நான்கு தெரிவுகள் காத்துக்கிடக்கின்றன என்று தேர்தல்காலக் கதைகள் புனைவதில் இறங்கியுள்ளார்.
முதலாவது தெரிவு தானாக வீட்டுக்குப் போவது. இரண்டாவது தெரிவு யாதாயினும் ஒரு கட்சியின் வேட்பாளராகக் களமிறங்குவது. மூன்றாவது தெரிவு புதியகட்சி தொடங்குவது. நான்காவது தெரிவு மக்கள் பேரியக்கம் ஒன்றைத் தொடங்கி மக்கள் விடிவுபெற உழைப்பது.
முதலாவது தெரிவை அவர் நடைமுறைப்படுத்தினால் அவருக்கும் நல்லது: மக்களுக்கும் நல்லது. ஆனால் அத்தகைய ஒரு முடிவுக்கு வருகின்ற துணிச்சலான மனோநிலை முதலமைச்சரிடம் கிடையாது.
இரண்டாவது தெரிவை எடுத்துக் கொண்டால் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினரிடம் சரணாகதி அடைந்தால் மாத்திரமே அடுத்தமுறையும் முதலமைச்சராக வரமுடியும். இதுதான் நிதர்சனம். ஆனால், தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்குத் தண்ணீர் காட்டுவதையே கவர்ச்சிகரமான அரசியல் என நினைத்து ஐந்தாண்டுகளைக் கடத்தியவருக்கு இந்த முடிவு கசப்பானதாகவே இருக்கும்.
வேறு ஏதாவது கட்சியில் சேர்ந்து முதல்வராக வரலாமென்றால் அதுவும் பகற்கனவாகவே முடியும். ஏனெனில் ஒருவேளை கடுமையான பரப்பரைகளால் விக்கி வெற்றியைத் தொட்டாலும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைத் தவிர்ந்த எந்தக் கட்சியும் ஆட்சியமைக்கும் அதிகாரத்தைப் பெறப்போவதில்லை. இன்னொரு மகிந்த போன்று மாகாணசபைக் கதிரையில் அமர்வதைத்தவிர அவருக்கு வேறுவழி இருக்கப் போவதில்லை. இதை விக்கினேஸ்வரன் விரும்பமாட்டார்.
மூன்றாவது தெரிவு புதியகட்சி தொடங்குவது. இத்தெரிவுக்கு எதிரான கருத்துகளை அவரே வெளிப்படுத்தத் தொடங்கிவிட்டார். தன்வயதைக் காரணங்காட்டுகிறார். கட்சி தொடங்குவது எளிது: கொண்டு நடத்துவது கடினம் என்றெல்லாம் தத்துவம் பேசுகிறார். இப்போது கட்சியைத் தொடங்கி எப்போது தேர்தலில் நிற்பது என்றுகூட யோசிக்கின்றார். எனவே இந்தத் தெரிவும் முதலமைச்சருக்குச் சரிப்பட்டு வரப்போவதில்லை.
நான்காவதாக, அவருக்கு முன்னுள்ள தெரிவு மக்கள் பேரியக்கம் தொடங்குவதுதான். முதலமைச்சராக இருந்து அதிகாரத்தை நேர்வழியிற் செலுத்த மாட்டாத ஒருவர் மக்கள் பேரியக்கத்துக்குத் தலைமை கொடுப்பது என்பது நடக்கக்கூடிய ஒன்றன்று. அதற்கு அசாத்தியத் திறமையும், போர்க்குணமும் வேண்டும். மக்களைக் கட்டிக் காத்து ஆபத்தில்லாத வழியில் அவர்களை அழைத்துச் செல்லும் பக்குவம் வேண்டும். மீறி மக்களுக்குத் துன்பம்ஏற்பட்டால் தோள்கொடுக்கும் துணிவும்வேண்டும். இவற்றில் எந்தத் திறனும் முதலமைச்சரிடம் இருப்பதாகத் தெரியவில்லை.
எழுதி வாசிப்பதையே மேடைப்பேச்செனக் கொண்டிருக்கும் முதல்வர், பலர் உதவிக்கு நின்றும் தமிழ்மக்கள் பேரவையை ஒரங்குலந்தானும் முன்னகர்த்தி வைக்கமுடியாத முதல்வர், தனது நான்கு அமைச்சர்களையே வழிநடத்துவதில் தோல்விகண்ட முதல்வர், பாரிய மக்கள் இயக்கமொன்றைக் கட்டியெழுப்பித் தமிழ்மக்களின் விடுதலைக்கு வழிசமைப்பாரென எண்ணுவது மண்குதிரை நம்பி ஆற்றில் இறங்குதற்கு ஒப்பான கற்பனையாகும். எனவே நான்காவது தெரிவும் அவருக்குப் பொருந்தப்போவதில்லை.
தமிழ்மக்கள் தனக்கு அளித்த வாக்குகளால் பெற்றவெற்றியை, மக்களின் விருப்பத்துக்கு மாறாகத் தமிழ்மக்களை அழித்த மகிந்தவின் காலடியிற்போட்டு மண்டியிட்டு முதலமைச்சராகப் பதவிப்பிரமாணம் செய்துகொண்ட முதலமைச்சர் தற்போது குழப்பநிலையில் இருக்கிறார் என்பதுதான் நிதர்சனம்.
கந்தவனம் கோணேஸ்வரன்,
03.08.2018
கருத்துகள்
கருத்துரையிடுக