இந்துசமய விளக்கம் 14
நைவேத்தியம் அன்பின் வெளிப்பாடு, மலர்கள் அழகுணர்வின் வெளிப்பாடு என்றால் பச்சிலைகள் போட்டு இறைவனை அர்ச்சிப்பதன் நோக்கம் என்ன?
பச்சிலைகள்போட்டு இறைவனை அர்ச்சிப்பது ஆரோக்கியத்தின் வெளிப்பாடு. நாங்கள் இந்து சமயத்துள் எவ்வளவு ஆழமாக உட்புக நினைக்கிறோமோ அவ்வளவுக்குத் தத்துவங்களின் ஆழ்ந்த கருத்துகள் புலப்படும்.
ஆயுள்வேதம், சித்தமருத்துவம் என்பன இந்துமத ஞானியரால் தோற்றுவிக்கப்பட்டு, நவீன காலத்திலும் சிறப்பாகச் செயல்பட்டுவரும் இருபெரிய மருத்துவத்துறைகள் என்பதை நாம் மறந்துவிட முடியாது. மனிதருக்கு உருவாகக்கூடிய நோய்களை இனங்கண்டு இயற்கையாகக் கிடைக்கும் மூலிகைகளைப் பயன்படுத்தி, நோய்களைக் குணமாக்குவதே இதன் சிறப்பு. இயற்கையோ டிணைந்து போவதால், இன்றைய மருத்துவ உலகில் பக்கவிளைவுகள் - பின்விளைவுகள் - அற்ற மருத்துவமாக இது பேணப்பட்டு வருகிறது.
இனி விடயத்துக்கு வருவோம். சிவன் சூரியனைத் தனக்குள் கொண்ட கடவுள். வெம்மை இவரது தன்மை. முப்புரம் எரித்தமை, காமனை எரித்தமை, முருகக் கடவுளைத் தோற்றுவிப்பதற்கு நெற்றிக் கண்ணிலிருந்து நெருப்பை உதிர்த்தமை ஆகியன இவரது திருவிளையாடல்களாகப் போற்றப்படுவதும் இக்கருத்தின் அடிப்படையில்தான்.
வில்வம் இலையோ குளிர்ந்த தன்மையுடையது. இதன்சாறு எந்த உஷ்ண நோய்களுக்கும் சிறந்த மருந்தாகிறது. வெம்மையின் உருவமான சிவனை. வில்வம் இலை கொண்டு அர்ச்சிப்பதால் சமநிலை பேணப்படுகிறது. வெம்மைக்குச் சிறந்த இயற்கைச் சமநிலை வில்வம் இலையாகும்.
அதேபோல், திருமாலை எடுத்துக் கொண்டால், அவர் நீரின்மேல் படுப்பவர். விஷப்பாம்பின் நிழலில் துயில்பவர். குளிருக்கும் விஷத்துக்கும் இடையில் வாழும் இவருக்கு இவ்விரண்டுக்குமான மாற்றீடு துளசிஇலை மூலம் பேணப்படுகிறது. சளி, இருமல் போன்ற குளிர் காரணமாக ஏற்படும் உபாதைகளுக்குத் துளசிஇலைச்சாறு சிறந்த மருந்தாகும். அதுவுமல்லாமல் துளசி விஷத்தையும் கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டது. துளசி உள்ள இடங்களில் பாம்பு போன்ற விடஜந்துகள் வர விரும்புவதில்லை என்பதையும் இங்கு நோக்க வேண்டும். இதனால்தான் கிருஸ்ணருக்குத் துளசி பிடித்தமானது எனக் கூறப்படுகிறது. பிருந்தாவனம் எனப்படுகின்ற துளசிச் செடிகள் நிறைந்த இடம்தான் கிருஸ்ணருக்கு மிகவும் விருப்பமான விளையாட்டுத்திடல் என்பதும் கவனிக்கத்தக்கது.
பிள்ளையாருக்கு அறுகம்புல் விருப்பமானது என்று கூறப்படுகின்றது. அறுகம்புற்சாறு இன்றைய உலகில் ‘கொலஸ்ரோல்’ என்ற நாகரிகமாகக் கூறப்படும் கொழுப்பைக் குறைக்க வல்லது. இது எல்லோருக்கும் நன்கு தெரிந்த உண்மை. பிள்ளையாரைப் பாருங்கள். அவரைப்போல் பருமன் உள்ள மனிதர்களைக் காணும்போது, கொலஸ்ரோல் உள்ளவர் என்றுதானே பொதுவாகக் கருதுகிறோம். கணபதிக்கு அறுகம்புல் உவப்பாக இருப்பது உடலாரோக்கியம் கருதியதே என்பதை உணர்ந்து கொண்டால், நம்முன்னோரின் அறிவுக்கூர்மை புலனாகும்.
தேகாப்பியாசத்தை எடுத்துக் கொள்வோம். இன்று உலகெங்கும் பரவிக்கிடக்கின்ற யோகாசனம், தியானம் என்பவை இந்துசமயப் பெரியார்களின் கண்டுபிடிப்பே என்பதில் நாம் பெருமை கொள்ளலாம். இவற்றுக்குச் சாதாரண உணவுவகைகளே போதுமானவை. சிறிய இடம் போதுமானது. எவ்வித உபகரணங்களும் வேண்டியதில்லை. ஆனால் யோகாசனம், தியானம் என்பவற்றின் பலனோ அளப்பரியது.
யோகாப்பியாசம் செய்கின்ற ஒருவருக்கு நோய்கள் ஏற்படுவது மிகமிகக் குறைவு. உடலுக்கும் உள்ளத்துக்கும் ஆரோக்கியம் தருகின்ற வல்லமை யோகாசனத்துக்கும் தியானத்துக்கும் உண்டு. இத்தகைய சிறப்பகளைப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரேயே அறிந்து, ஆன்மபலம், உடனலம், மனநலம் என்பவற்றை வளர்த்தவர்கள் எமது ரிஷிகள் என்பதை மறந்து விடலாகாது.
கருத்துகள்
கருத்துரையிடுக