தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 03 - பகுதி 01

புணரியல் 1


இரண்டோ அல்லது அதற்கும் மேற்பட்ட சொற்களோ ஒன்றோடொன்று இணைந்து கொள்வதைப் பற்றிய தெளிவைத் தருவது புணரியல் ஆகும்.

நிலைமொழி – வருமொழி.

சொற்கள் ஒன்றோடொன்று இணையும்போது இணைப்பை எதிர்பார்த்திருக்கும் சொல் நிலைமொழி என்றும் வந்து இணைகின்ற சொல் வருமொழி என்றும் இலக்கணநூல் இயம்பும். 

மரம் - வேர் ஆகிய சொற்களை எடுத்துக்கொண்டால் மரம் என்பது இணைப்பை எதிர்பார்த்திருக்கும் சொல்லாகையால் அது நிலைமொழி என்றாகிறது. 
வேர் இணைகின்ற சொல்லாகையால் வருமொழி எனவாகிறது.

இயல்புப் புணர்ச்சி.
இவ்வாறு இணையும் சொற்கள் இயல்பாக இணைவதுண்டு. இத்தகைய புணர்ச்சி இயல்புப் புணர்ச்சி என்று பெயர் பெறுகிறது. 

தம்பி + வந்தான் ஆகிய இருசொற்களையும் எடுத்துக்கொண்டால் அவை இணையும்போது எந்தவித மாற்றத்தையும் பெறுவதில்லை. தம்பி வந்தான் என்றே எழுத வேண்டியிருக்கிறது. 

எனவே இது இயல்புப் புணர்ச்சியின் பாற்படுகிறது. பூமரம், கலைவளம், கடல்வழி, பனைவெல்லம் என்பவையும் இயல்புப் புணர்ச்சியைச் சார்ந்தனவே.

இயல்புப் புணர்ச்சியில், நிலைமொழி ஈற்றில் மெய்யெழுத்து அமைந்து வருமொழியின் தொடக்க எழுத்து உயிராக வருமாயின் இரண்டின் இணைவால் உயிர்மெய் தோன்றும்.

ஆண் - உரிமை  - ஆணுரிமை.  (‘ண்’ ;உ; என்பன இணைந்து ‘ணு’கரம் தோன்றிற்று.)

தேன் - இனிமை -  தேனினிமை.  ( ன்-இ இணைந்து ‘னி’கரம் தோன்றிற்று.).

நோய் - உற்ற  -  நோயுற்ற    ( ய்-உ இணைந்து ‘யு’கரம் தோன்றுகிறது.

பகல் - இரவு  -   பகலிரவு.    ( ல்-இ இணைந்து ‘லி’கரம் தோன்றுகிறது)

மணம் - அற்றது – மணமற்றது.   ( ம்-அ இணைந்து ‘ம’கரம் தோன்றிற்று).

இதேபோல் அவனில்லை, மனமொத்து, விருப்பமில்லை, நேரொத்த முதலான புணர்பதங்களையும் உற்று நோக்கலாம்.   


விகாரப் புணர்ச்சி.

பனை – ஓலை ஆகிய சொற்கள் இணையும்போது இடையில் ‘ய’கரம் தோன்றி ‘ஓ’ ‘யோ’வாக மாறிப் பனையோலை எனப் புணர்கிறது. எனவே மாற்றத்துடன் புணர்ச்சி நிகழ்வதால் இது விகாரப் புணர்ச்சி எனப்படுகிறது.

விகாரப் புணர்ச்சி தோன்றல், திரிதல், கெடுதல் என மூன்று வகையின. தோன்றல், திரிதல், கெடுதல் ஆகிய இயல்புகள் தனித்தும் வரலாம்: ஒன்றுக்கும் மேற்பட்டவையாக சேர்ந்தும் வரலாம்.


தோன்றல்.

சில சொற்கள் இணையும்போது புதிய எழுத்துகள் தோற்றம் பெறுகின்றன. அப்புதிய எழுத்துகள் மூலமாகத்தான் இணைப்பு வளம் பெறுகிறது. 

பட்டு + பாதை இணைகையில் ‘ப்’ தோன்றி பட்டுப்பாதை ஆகிறது.

 இதேபோல் வாழை + காய் வாழைக்காய் ஆவதற்கு ‘க்’ உதவுகிறது. 

மூளை + சலவை மூளைச்சலவை எனவருவதற்கு ‘ச்’ துணை நிற்கின்றது

இவ்வாறு புதிய எழுத்துகள் தோன்றுவதால் இவ்வகைப் புணர்ச்சி தோன்றல் என்று வகைப்படுத்தப் படுகிறது.

அப்பகுதி, இந்தப்பெண், சுட்டிக்குழந்தை, பொதுச்சந்தை என்பவை தோன்றற் புணர்ச்சிக்குரிய எடுத்துக் காட்டுகளாகும்.


சுட்டெழுத்துகளுடனும், ‘எ’ வினாவெழுத்துடனும் வருமொழியின் உயிர்மெய் புணர்தல்.

சுட்டெழுத்துகளுடனும் ‘எ’ வினாவெழுத்துடனும் வருமொழியின் உயிர்மெய் புணரின் அதற்குரிய மெய் மிகுந்து தோன்றும். 

அ – பெண்  அப்பெண்,  அ – மாடு  அம்மாடு,  அ – சிலை  அச்சிலை

இ - புத்தகம்  இப்புத்தகம்,  இ - சந்தர்ப்பம்  இச்சந்தர்ப்பம்,  இ - வறுமை  இவ்வறுமை.

உ – நிலை  உந்நிலை,  உ – வாழ்வு  உவ்வாழ்வு,  உ – மலை உம்மலை. (‘உ’கரச் சுட்டுப் பயன்பாடு அருகி வருவதால் இச்சொற்கள் வித்தியாசமாகத் தோன்றக்கூடும். எனினும் இலக்கண மாணவர்கள் இவற்றையும் தெரிந்து கொள்ளல் நன்று) 

எ - பக்கம் -- எப்பக்கம்?   எ – நிலம் -- எந்நிலம்?   எ – வழக்கம் -- எவ்வழக்கம்?



சுட்டெழுத்துகளுடனும் ‘எ’ வினாஎழுத்துடனும் வருமொழியின் ‘ய’கரம் புணர்தல்.

சுட்டெழுத்துகளான அ, இ, உ என்பவற்றுடனும் வினாவெழுத்தான ‘எ’கரத்துடனும் ‘ய’கர உயிர்மெய் வருமொழியின் முதவெழுத்தாகிப் புணருமிடத்து அ, இ, உ, எ ஆகிய நிலைமொழி எழுத்துகளை வருமொழியின் முதலெழுத்தான ‘ய’கரத்துடன் இணைப்பதற்கு ‘வ’கரம் தோன்றுகிறது.

இவ்வாறு தோன்றும் ‘வ’கரம் நிலைமொழியின் ஈற்றெழுத்துக்கும் வருமொழியின் முதலெழுத்துக்கும் இடையில் உடன்பாட்டைத் தோற்றுவிப்பதால் இது உடம்படுமெய் என இலக்கண நூலோரால் அழைக்கப்படுகிறது.

அ – யானை    அவ்யானை.  

இ - யுத்தம்     இவ்யுத்தம்.

எ – யாழ்      எவ்யாழ்?



குறிலைத் தொடக்கமாகக் கொண்டு மெய்யெழுத்தில் நிறைவுறும் ஈரெழுத்துச் சொற்களுடன் உயிர் எழுத்துகள் புணர்தல்.

ஈரெழுத்துகளைக் கொண்டிருக்கும் நிலைமொழியின் முதலெழுத்துக் குறிலாகவும் ஈற்றெழுத்து மெய்யெழுத்தாகவும் அமைந்து, வருமொழியின் முதலெழுத்து உயிர்எழுத்தைக் கொண்டிருப்பின், நிலைமொழியின் ஈற்றெழுத்தின் வரிசையெழுத்துத் தோன்றும்.

பெண் - அழகு ---- பெண்ணழகு.   (‘ண’கரம் தோன்றிற்று)

கண் - இமை  ----   கண்ணிமை.

பொன் - ஆபரணம் ----   பொன்னாபரணம்.

மின் -  ஓட்டம்  ----    மின்னோட்டம்

இம் - என்றால் ----   இம்மென்றால்

மெய் – எழுத்து ----  மெய்யெழுத்து

பொய் - உரைத்தான் ----  பொய்யுரைத்தான்.

கல் - எறிந்தான் ----   கல்லெறிந்தான்.

வில் - உடைந்தது ----  வில்லுடைந்தது.

முள் - இல்லை ----   முள்ளில்லை.   எனவமைவதைக் காணலாம்.



திரிதல்.

நிலைமொழியின் ஈற்றெழுத்தும் வருமொழியின் முதலெழுத்தும் இணையும்போது அவை திரிபடைந்து புதிய எழுத்து உருவாகி புணர்ச்சி ஏற்படுகிறது. இது திரிதல் வகையைச்சாரும்.

கடல் - கரை இணைகையில் நிலைமொழியின் ஈற்றெழுத்தான ‘ல்’, வருமொழியின் முதலெழுத்தான ‘க’வுடன் இணைகையில் 'ற்’ ஆக மாற்றமடைந்து கடற்கரை ஆகிறது. இதேபோல் மண்-குடம், பொன்-பானை, கல்-பாறை, தன்-பெருமை, முள்-புதர் என்பவை புணருமிடத்து அவை முறையே மட்குடம், பொற்பானை, கற்பாறை, தற்பெருமை, முட்புதர் எனப் புணர்வதைக் காணலாம்.

தன்-துணிபு, கல்-தூண் பொன்-தகடு, முள்-தளை, எள்-துணை என்பவை புணரும்போது தற்றுணிபு, கற்றூண், பொற்றகடு, முட்டளை, எட்டுணை எனவமைவதை நோக்குக. இங்கு நிலைமொழியின் ஈற்றெழுத்தும் வருமொழியின் முதலெழுத்தும் திரிபடைகின்றன.

‘ண’கர ‘ள’கர மெய் நிலைமொழியின் ஈற்றெழுத்தாக அமையுமிடத்து வருமொழியின் முதலெழுத்து வல்லினமாக வரின் ‘ண்’ ‘ள்’ என்பவை ‘ட்’ ஆகவும்,
‘ல’கர, ‘ன’ளகர மெய்கள் நிலைமொழியின் ஈற்றெழுத்தாகி வருமொழியின் முதலெழுத்து வல்லினமாக அமையின் ‘ல்’ ‘ன்’ என்பவை ‘ற்’ ஆகவும் மாற்றமடைகின்றன என்பதை நினைவிற் கொள்ளல் நன்று.



கெடுதல்.

சில இடங்களில் வருமொழி இணையும்போது நிலைமொழியின் ஈறு கெட்டுப்போவதுண்டு. மனம்-நோய், அகம்-வளம், மறம்-வினை, நிலம்-வேம்பு, மரம்-வேர், மரம்-வேலை ஆகிய சொற்கள் இணையும்போது நிலைமொழி ஈறான மகரமெய் கெட்டு, அவை முறையே மனநோய், அகவளம், மறவினை, நிலவேம்பு, மரவேர், மரவேலை என அமைகின்றன. இங்கு நிலைமொழியின் ஈற்றெழுத்தான் ‘ம’கர மெய் கெட்டுப் புணர்ச்சி நிகழ்கிறது. இந்நிலை கெடுதல் விகாரப் புணர்ச்சி எனப்படுகின்றது.



கெடுதல், தோன்றல்.

சொற்கள் இணையும்போது நிலைமொழியின் ஈற்றெழுத்து கெட்டு வருமொழியின் வல்லெழுத்து இடையே தோன்றுவதுமுண்டு.

மரம் + பலகை. = மரப்பலகை (இங்கே நிலைமொழியின் ஈறு ‘ம’கரம் கெட்டு வருமொழி      முதலெழுத்து வல்லினமெய் தோன்றுகிறது.)

இதேபோல் நிலம்  + சரிவு =  நிலச்சரிவு,  வலம் + பக்கம் = வலப்பக்கம், குணம் +  சிறப்பு = குணச்சிறப்பு,  பலம் +  பரீட்சை =  பலப்பரீட்சை என்பவற்றையும் நோக்கலாம்.
(வலதுபக்கம், இடதுபக்கம் என்றோ, வலதுபுறம், இடதுபுறம் என்றோ எழுதுதல் முறையன்று. வலப்பக்கம், இடப்புறம் என எழுதுவதே சரியான முறையாகும்.)



கெடுதல், தோன்றல்  திரிதல்.

வேம்பு – காய், புளி – பழம், தெங்கு – காய், கரும்பு – சாறு, பனை – காய் ஆகிய சொற்கள் புணரும்போது முறையே வேப்பங்காய், புளியம்பழம், தேங்காய், கருப்பஞ்சாறு, பனங்காய் என வருகின்றன. இதன்போது கெடுதல், தோன்றல், திரிதல் ஆகிய மூவகை விகாரங்களும் இடம்பெற்றிருப்பதைக் காணலாம்.

வேப்பங்காய் என்பதில் ‘ம’கரமெய் கெடுகிறது: ‘அம்’ சாரியை தோன்றுகிறது: சாரியையின் ‘ம’கரமெய், ‘ங’கர மெய்யாகத் திரிகிறது.

தேங்காய் என்பதில் ‘கு’கரம் கெடுகிறது: ‘தெ’கரம் ‘தே’காரமாகத் திரிகிறது.

கருப்பஞ்சாறு என்பதில் ‘ம’கரம் கெடுகிறது:  'அம்’ சாரிகை தோன்றுகிறது: சாரியையின் ‘ம’கரமெய் ‘ஞ’கர மெய்யாகிறது.

பனங்காய் என்பதில் ‘னை’காரம் ‘ன’கரமாகிறது: ‘அம்’ சாரியை தோன்றுகிறது: சாரியையின் ‘ம’கரமெய்  ‘ங’கர மெய்யாகிறது.

பல-பல,   சில-சில.

பல – பல,   சில – சில ஆகிய சொற்கள் புணரும்போது,
பலபல  சிலசில என்று இயல்பாகவும்,
பலப்பல  சிலச்சில என்று தோன்றல் விகாரத்துடனும்,
பற்பல  சிற்சில என்று கெடுதல் திரிதல் விகாரத்துடனும்  புணரும் என்பதை நினைவிலிருத்தல் நன்று.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 4

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 09

தமிழ் இலக்கணம் அறிவோம் எழுத்தியல்- பகுதி 5