தமிழ் இலக்கணம் அறிவோம். - இயல் 02 - பகுதி 11-1

பதவியல் 2 பகுதி 11 - 1

ஆகுபெயர்.


ஒரு பெயர்ச்சொல் தான் தாங்கிவரும் பொருளை உணர்த்துவதற்குப் பதிலாகத் தன்னோடு தொடர்புடைய பிறிதொரு பொருளைத் தருமிடத்து அது ஆகுபெயர் எனப்படுகிறது.

வெள்ளைப் பசு பாய்ந்து வந்தது என்ற வாக்கியத்தை எடுத்துக்கொண்டால் வெள்ளை என்பது நிறத்தைக் குறிக்கிறது. அப் பெயர்ச்சொல்லின் நோக்கமும் அதுதான். ஆனால் வீட்டுக்கு வெள்ளை யடித்தனர் என்ற வாக்கியத்தில் வருகின்ற வெள்ளை எனும்பதம் நிறத்தைக் குறிப்பதன்று. பதிலாக வெள்ளை நிறமுடைய சுண்ணாம்பையே குறிக்கிறது. வண்ணச் சுண்ணாம்பு பூசினாலும் வெள்ளையடித்தல் என்பதற்குள் அடங்கி விடுகிறது.

இங்குபசுவின் வண்ணத்தைக் குறிக்கும் வெள்ளை பண்புப் பெயர் அல்லது குணப்பெயர் என்ற வகுதிக்குள் வருகின்றது. சுண்ணாம்பைக் குறிக்கும் வெள்ளை தன் பண்பைச் சுட்டாமல் அந்நிறத்தைக் கொண்டிருக்கும் சுண்ணாம்பைச் சுட்டுகின்றது. அதாவது கட்டடத்துக்குப் பூசப்படுகின்ற சுண்ணாம்புக்கு ஆகி வருவதால் அது ஆகுபெயர் எனப்படுகிறது. வெண்மை என்ற நிறத்தொடர்பு காரணமாக வெள்ளைநிறம் சுண்ணாம்புக்கு ஆகி சுண்ணாம்பு பூசுகின்ற செயலுக்கும் ஆகி நிற்கின்றது.
இதனடிப்படையிலேயே எல்லா ஆகுபெயர்களும் அமைகின்றன.

இவ்வாறான ஆகுபெயர்களை இலக்கண அறிஞர்கள் பதினாறு வகைப்படுத்தியுள்ளனர். அவையாவன: பொருளாகுபெயர்,  இடவாகுபெயர்காலவாகுபெயர்சினையாகுபெயர்குணவாகுபெயர் (அல்லது பண்பாகுபெயர்), தொழிலாகுபெயர்நீட்டலளவையாகுபெயர்நிறத்தலளவாகுபெயர்முகத்தலளவாகுபெயர்எண்ணளவாகுபெயர்கருவியாகுபெயர்காரியவாகுபெயர்கருத்தாவாகுபெயர்தானியாகுபெயர்சொல்லாகுபெயர்,  உவமையாகுபெயர் என்பனவாம்.

எவ்வாறு ஆகுபெயர்கள் அடையாளம் பெறுகின்றன எனப் பார்ப்போம்.

1.பொருளாகு பெயர்.

ஒரு முழுப்பொருள் அதன் பகுதிக்கும் பொருந்திவரும் வகையில் வாக்கியம் அமைந்தால் அதற்காகப் பயன்படுத்தப்படும் பெயர்ச்சொல் பொருளாகு பெயர் எனப்படுகிறது.

1.       மல்லிகை சூடி மங்கை வந்தாள்.
2.       தாமரையில் உணவு பரிமாறப்பட்டது.
3.       தாமரை சொரிந்து இறைவனை வழிபட்டாள்.
4.       வில்வத்தால் சிவனை அர்ச்சனை செய்தாள்

இவ்வாக்கியங்களை எடுத்துக்கொண்டால்மல்லிகை என்பது ஒரு பூச்செடியின் பெயர் என்பதை நன்கறிந்திருந்தும்,  மங்கை பூச்செடியைச் சூடி வந்ததாக யாரும் பொருள் கொள்வதில்லை. மாறாக அச்செடியிற் பூக்கும் மலரைத் தலையில் அணிந்துவந்தாள் என்றே பொருள் கொள்ளப்படுகிறது. எனவே மல்லிகைச்செடி எனும் (முழுப்) பொருள் அதன் ஒருபகுதியான பூவுக்கு ஆகி நிற்பதால் பொருளாகு பெயர் எனப்படுகிறது.

அதேபோல்தாமரை என்பது நீரில் வளரும் கொடித்தாவரம். எனினும் இரண்டாவது சொற்றொடரில் அச்சொல் தாமரை இலையை மட்டுமே குறிக்கிறது. மூன்றாவது தொடரில் வருகின்ற தாமரை எனுஞ்சொல்  கொடியையோ அதன் இலையையோ குறிக்கவில்லை. மாறாக மலரைக்குறிக்கிறது. நான்காவது வாக்கியத்தில் வரும் வில்வம் என்றசொல் வளர்ந்துநிற்கும் மரத்தையோ அதன் கனியையோ குறிப்பிடாமல் இலையையே குறிப்பிடுகிறது. எனவே இவை தமது முழுமையைச் சுட்டாமல் யாதாயினும் ஒருபகுதியைச் சுட்டி நிற்பதால் பொருளாகு பெயர் எனப்படுகிறது. முழுமையான பொருள் (அதன் பகுதிக்கு உரித்து)ஆகி நிற்கிறது என்பதை மனத்திருத்தினால் விளங்கிக் கொள்வது இலகுவாக அமையும்.

2. இடவாகு பெயர்.

1.       எல்லையில் இந்தியாவும் பாகிஸ்தானும் பயங்கரமாக மோதிக்கொண்டன.
2.       இன்று இலங்கையை எதிர்த்து இந்தியா களமிறங்குகிறது.
3.       தன் மைந்தர்களால் திருக்கோணமலைமண் பெருமையடைந்தது.
4.       இந்துவும் வளனாரும் இறுதிச் சுற்றுக்குத் தயாராகி வருகின்றன.

முதலாவது வாக்கியத்தில் இந்தியா பாகிஸ்தான் என்ற சொற்கள் அவற்றின் இராணுவத்தைக் குறிப்பிடுகின்றன.

இரண்டாவது வாக்கியத்தில் இலங்கைஇந்தியா என்பவை அந்தந்த நாட்டின் சார்பாக விளையாட்டுப் போட்டியிற் கலந்து கொள்கின்ற வீரர்களையோ அணிகளையோதாம் குறிப்பிடுகின்றன.

மூன்றாவது தொடரில் திருக்கோணமலை மண் என்பது உண்மையான மண்ணைக் குறிப்பிடவில்லை. மாறாக,  அங்கு வாழ்கின்ற மக்களைத் தான் குறிக்கிறது.

நான்காவது வசனத்தில் இந்துவளனார் என்பவை பாடசாலைகளைக் குறிக்கும் சொற்களாக இருந்தபோதிலும்பாடசாலைகளின் சார்பாகப் போட்டிக்குத் தயாராகும் மாணவர்களையே சுட்டுகின்றன.

எனவேஇடப்பெயர்களைக் கொண்டிருந்தும் அவை தம்மைச் சுட்டாது தம்மிடத்தைச் சேர்ந்த இராணுவத்தையும்விளையாட்டு வீரர்களையும்மண்ணில் வாழ்கின்ற மக்களையும்கல்வி பயில்கின்ற மாணவர்களையும் சுட்டி நிற்பதால் இவை இடவாகு பெயர் எனப் பெயர் பெறுகின்றன.

ஊர் வாயை மூடமுடியாதுஊர் சிரிக்க வாழாதேநாடு சோகத்தில் மூழ்கியது ஆகிய வாக்கியங்களையும் கருத்திற் கொள்க.

3. காலவாகு பெயர்.

காலத்தின் பெயர் அக்காலத்தை யொட்டிய பிறிதொன்றுக்காகப் பயன்படுத்தப்படுமிடத்து அது காலவாகு பெயர் எனப்படுகிறது.

கார் அறுத்தான்மானாவாரி செய்தனர் போன்ற வாக்கியங்களில் வருகின்ற கார்மானாவாரி போன்ற சொற்கள் மழையையோ அக்காலத்தையோ குறிப்பிடாது அதன்போது விளையும் பயிரைக் குறிப்பதால் காலவாகு பெயராகின்றது.

பதினொன்றான் வந்து போயிற்றா?” என்ற கேள்வியில் பதினொன்று என்பது நேரத்தைக் குறிக்காமல் அந்த நேரத்துக்கு வருகின்ற பேருந்தைக் குறிப்பதால் அதுவும் காலவாகு பெயராகிறது.

அவன் அமாவாசை பிடிக்கிறான் என்ற வசனத்தில் வருகின்ற அமாவாசை காலத்தைக் குறிப்பிடாமல் அக்காலத்தில் இறந்த தந்தைக்காகக் கடைப்பிடிக்கப்படும் விரதத்தைக் குறிப்பதால் இது காலவாகு பெயர் எனப்படுகிறது.

4. சினையாகு பெயர்.

ஒரு முழுப்பொருள் அதன் பகுதிக்காகி வருவது பொருளாகு பெயர் என்பதுபோல்பொருளொன்றின் பகுதி (அல்லது சினை) முழுப்பொருளுக்கும் ஆகிவரும்போது அது சினையாகு பெயர் எனப்படுகிறது.

தலைக்கு ஐந்துரூபா கொடுத்தாற்றான் உள்ளே போக முடியும்.” என்ற வசனத்தில் தலைக்கு என்பது ஓராளுக்கு எனப் பொருள்தருகிறது. எனவே அது சினையாகு பெயர் எனப்படுகிறது.

பாண்டியன் முடி சாய்ந்தது என்ற வசனத்தில் முடி என்பது அரசர் தலையிலணியும் கௌரவ அலங்காரமெனினும் இவ்விடத்தில் முடியைக் கருதாமல் ஆட்சியைக் குறிப்பதால் அச்சொல் சினையாகு பெயர் என்ற வகுதிக்குள் வருகிறது.

வெற்றிலை நட்டான்நெல் விளைந்தது போன்ற வாக்கியங்களில் வெற்றிலை இலையைக் குறிக்காமல் கொடியைக் குறிப்பதுபோல்நெல் என்பதும் நெல்மணியைக் குறிக்காமல் அதுசார்ந்த பயிரைக் குறிப்பதால் இவையிரண்டும் சினையாகு பெயர் எனப்படுகின்றன.

அதேபோல் ஆறுவிரல் வந்தான்.எனும்போது அது விரல்களைக் குறிப்பிடாது ஆறுவிரல்களைக் கொண்ட மனிதனைக் குறிப்பதால் அதுவும் சினையாகு பெயர் ஆகிறது.

5. குணவாகு பெயர் அல்லது பண்பாகு பெயர்.

ஒரு குணத்தை அல்லது பண்பைத் தாங்கி நிற்கும் பொருள் அக்குணத்தின் பேரால் அல்லது பண்பின் பேரால் சுட்டப்படுகையில் அது குணவாகு பெயர் அல்லது பண்பாகு பெயர் எனப்படுகிறது.

சத்தம் போடாதேசிடுமூஞ்சி வருகிறதுமுரடு இன்று சிரிக்கிறதுவெண்கலக்கடை யானை போகிறது.” ஆகிய வாக்கியங்கள் சில பண்புகளை அல்லது குணங்களைச் சுட்டுவதன்மூலம் அப் பண்புகளைத் தாங்கிய மனிதர்களை எமக்குணர்த்துவதால் அவை பண்பாகு பெயர் அல்லது குணவாகு பெயர் எனப்படுகிறது.

சிடுமூஞ்சி என்பது எப்போது நோக்கினும் இறுக்கமாக முகத்தை வைத்துக் கொண்டிருக்கும் ஒரு மனிதனைக் குறிப்பிடுகிறது. முரடு என்பது முரட்டுத்தனமாகப் பழகும் ஒருவரைக் குறிக்கிறது. வெண்கலக்கடை யானை என்ற பதம்ஒழுங்கு முறைமைகளைக் குழப்பிவிடக்கூடிய மனிதரைச் சுட்டுகிறது.

அதேபோல்ஆசிரியர் ஒருவர் பிள்ளைகளை விளித்து சதுரத்தை வலக்கையிலும் செவ்வகத்தை இடக்கையிலும் எடுத்து உயர்த்தும்படி கேட்குமிடத்து சதுரம்செவ்வகம் ஆகிய பண்புகளைக் (வடிவங்களை) கொண்டிருக்கும் பொருள்கைளைக் குறிப்பதால் அவையும் பண்பாகு பெயர் எனப்படுகின்றன.

முள்முருங்கையுடன் வெள்ளையைச் சேர்த்துக் கசக்கிக் கட்டு.” எனவருகின்ற வாக்கியத்தில் (முள்முருங்கை என்றசொல் மரத்தைக் குறிக்காமல் அதன் இலையையே குறிப்பிடுவதால் பொருளாகு பெயராகிறது.) வெள்ளை எனுஞ்சொல் வெள்ளை நிறமுடைய சுண்ணாம்பைச் சுட்டுவதால் குணவாகு பெயராகிறது. வீட்டுக்கு வெள்ளையடித்தேன்.” எனும்போதும் வெள்ளை குணவாகு பெயரின் பாற்படுகிறது.

மஞ்சள் அரைத்தாள்.” எனுமிடத்து அச்சொல் மஞ்சள் நிறமுடைய கிழங்கைச் சுட்டுவதால் மஞ்சள் குணவாகு பெயர் எனப்படுகிறது.

6. தொழிலாகு பெயர்.

கிழங்கைப் பதப்படுத்தி விற்கின்ற ஒருவனிடம் சென்று ஐம்பது ரூபாய்க்குப் பொரியல் தா எனக் கேட்டால் அவன் பொரித்த கிழங்கைப் பொதி செய்து தருவான். அதே போல் அவியல் தா என்று கேட்டால் அவித்த கிழங்கைத் தருவான்.

இங்கு பொரியல் என்பதும் அவியல் என்பதும் தொழிற்பெயர்கள். ஆயினும் அப்பெயர்கள் இவ்விடத்தில் கிழங்குக்கு ஆகி நிற்பதால் தொழிலாகுபெயர் எனப்படுகிறது.

இதேபோல் வறுவல் சுவையாக இருந்தது. கரைசலைக் கொண்டுவாபொங்கல் முடிந்ததா? ”  என்பவைபோன்ற வாக்கியங்களில் வருகின்ற வறுவல்கரைசல்பொங்கல் என்பவையும் தொழிலாகு பெயர்களே.

(ஆகுபெயர் பற்றிய விளக்கங்கள் தொடரும்….)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 4

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 09

தமிழ் இலக்கணம் அறிவோம் எழுத்தியல்- பகுதி 5