தமிழ் இலக்கணம் அறிவோம். - இயல் 02 - பகுதி 10


பதவியல்  02   பகுதி  10

தொகாநிலைத்தொடர்.

தொகாநிலைத் தொடர் என்பது வேற்றுமையுருபு முதலிய இடைச்சொற்கள் வெளிப்பட்டு நிற்கும் இயல்புடைய சொற்களின் கூட்டாகும்.

தொகைநிலைத் தொடர் எனப்படுமிடத்து வேற்றுமையுருபு முதலாக உருபுகள் மறைந்துநின்று பொருள் தருகின்ற அதேவேளையில் தொகாநிலைத் தொடரில் வெளிப்பட்டு நிற்கின்றன. தொகாநிலை என்பதன் பொருள் மறைவற்றநிலை அல்லது வெளிப்படையான தன்மை எனலாம்.

தொகாநிலைத் தொடரானது எழுவாய்த்தொடர், விளித்தொடர், வேற்றுமைத்தொடர், பெயரெச்சத்தொடர், வினையெச்சத்தொடர், தெரிநிலை வினைமுற்றுத்தொடர், குறிப்புமுற்றுத்தொடர், இடைச்சொற்றொடர், உரிச்சொற்றொடர், அடுக்குத்தொடர் எனப் பத்து வகைப்படுகின்றன.

எழுவாய்த்தொடர்:

எழுவாய்த் தொடரை முதல்வேற்றுமைத் தொடர் எனவும் குறிப்பிடலாம். முதல்வேற்றுமைக்கு உருபுகள் எவையுங் கிடையா. எனவே முதலாம் வேற்றுமையாகிய எழுவாய் பிறிதொரு பதத்துடன் இணையும்போது இத்தொடர் தோன்றுகிறது.

முதல்வேற்றுமை அல்லது எழுவாய்ச் சொற்கள்: கணபதி, மரம், ஆறு என்பன.
இதன்படி, கணபதி வந்தான். மரம் வீழ்ந்தது. ஆறு பெருகியது. என இணையும்போது எழுவாய்த்தொடர் தோன்றுகிறது.


விளித்தொடர்.

விளித்தொடரை எட்டாம் வேற்றுமைத் தொடர் எவும் அழைக்கலாம். ஒருவரை விளித்துப் பேசுவது அல்லது ஏவல் இடுவது என்பவை இதன் பண்புகளாகும். 

எட்டாம்வேற்றுமை அல்லது விளிவேற்றுமை எப்போதும் முன்னிலை எழுவாயையே கொண்டிருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வேற்றுமைக்கும் உருபுகள் கிடையா. எனினும் பெயர்ச்சொல்லின் ஈற்றெழுத்துக் கெடுந்தன்மையும், ஈற்றயல் எழுத்து நீட்சிபெறுந்தன்மையும் இதற்குண்டு. உதாரணமாக, முருகன் என்ற எழுவாய்ப்பெயர் ஈற்றெழுத்து (ன்) கெட்டு ஈற்றயல் எழுத்தான ‘க’  ‘கா’ என நீட்சி பெறுதலையும் காண்க.

அதேபோல, ஈற்றெழுத்து நீட்சிபெறுதலும் உண்டு. உதாரணம், தம்பி என்ற எழுவாயின் ஈற்றெழுத்து நீண்டு தம்பீ என வருதலை நோக்குக.
முருகா வா, தம்பீ ஓடு, பக்தா உனை மெச்சினேன். போன்ற தொடர்கள் விளித்தொடருக்கு உதாரணங்களாம்.


வேற்றுமைத்தொடர்.

இரண்டு தொடக்கம் ஏழு வரையிலான வேற்றுமைகள் வெளிப்பட்டுநிற்க அமையுந்தொடர்கள்; வேற்றுமைத் தொடர்கள் எனப்படுகின்றன. முதல்வேற்றுமை எழுவாய்த்தொடர் எனவும் எட்டாம்வேற்றுமை விளித்தொடர் எனவும் அடையாளம் பெற்றுள்ளதை மேலே பார்த்தோம். எனவே. வேற்றுமைத்தொடர் எனப் பொது அடையாளம்பெறும் ஏனைய தொடர்களைப் பார்ப்போம்.

இரண்டாம் வேற்றுமை (உருபு – ஐ)
எதிரியை வீழ்த்தினான், கடிதத்தைப் படித்தான் போன்ற தொடர்களில் எதிரி-ஐ, கடிதம்(அத்து)-ஐ என இரண்டாம் வேற்றுமையுருபு வெளிப்பட்டு நிற்பதனால் இவை இரண்டாம் வேற்றுமைத்தொடர்கள் எனப்படுகின்றன.

மூன்றாம் வேற்றுமை( உருபு - ஆல்).
பேனாவால் எழுதினாள், வாளால் அரிந்தான் எனுந்தொடர்களில் பேனா-ஆல், வாள்-ஆல் என மூன்றாம் வேற்றுமையுருபு வெளிப்பட்டு நிற்பதனால் இவை மூன்றாம் வேற்றுமைத்தொடர்கள் எனப்படுகின்றன.

நான்காம் வேற்றுமை (உருபு – கு)
வறியவர்க்கு உதவினார்கள், சீடனுக்கு வழிகாட்டினார் போன்ற தொடர்களில் வறியவர்-கு, சீடன்-கு என வேற்றுமையுருபு தெளிவாகத் தெரிவதனால் இவை நான்காம் வேற்றுமைத் தொடர்கள் எனப்படுகின்றன.

ஐந்தாம் வேற்றுமை (உருபு இன், இல், நின்று, இருந்து).
மலையின் அருவி, ஊரினின்று புறப்பட்டான், துன்பத்திலிருந்து விடுபட்டான் ஆகிய தொடர்களில் வேற்றுமையுருபுகள் வெளிப்பட்டு நிற்கின்றன. 
மலை-இன்-அருவி --- மலையின் அருவி,
ஊர்-இன்-நின்று புறப்பட்டான்.-----ஊரினின்று புறப்பட்டான்.
துன்பம் (அத்து)-இல்-இருந்து ------ துன்பத்திலிருந்து விடுபட்டான். என வருதலால் இவை ஐந்தாம் வேற்றுமைசார்ந்த தொகாநிலைத் தொடராகின்றன.

ஆறாம் வேற்றுமை. (உருபு அது, உடைய )
அவனது திறமை, கம்பனது பெருமை, கண்ணனுடைய பொருள், ஆகிய வாக்கியங்களில் ஆறாம் வேற்றுமையுருபுகள் தெள்ளெனத் தெரிகின்றன. எனவே இவை ஆறாம் வேற்றுமைசார் தொகாநிலைத் தொடர்களாகும். 

ஏழாம் வேற்றுமை. (உருபு கண்)
காட்டின்கண் தீ, மணியின்கண் ஓசை எனவருந் தொடர்கள் ஏழாம் வேற்றுமைத் தொடர்களாகும். இரு வாக்கியங்களிலும் வேற்றுமையுருபு தெளிவாக வெளிப்படுகின்றமை கண்கூடு.


பெயரெச்சத் தொடர்.

பெயரெச்சத்தை யடுத்து பெயர்ச்சொல்லொன்று பொருள்பட இணையும்போது பெயரெச்சத் தொடர் தோன்றுகிறது. வந்த மாடு, நடந்த மனிதன், காய்ந்த சருகு போன்ற தொடர்களில் பெயரெச்சமும் அதனையடுத்து பெயர்ச்சொல்லும் இணைந்திருப்பதால் இவை பெயரெச்சத்தொடர் எனப்படுகின்றன.


வினையெச்சத் தொடர்.

வினையெச்சத்தை யடுத்துப் வினைச்சொல் பொருளுடன் இணையும்போது வினையெச்சத் தொடர் தோன்றுகிறது. 
உதாரணமாக,
வந்து சென்றான், நிலைத்து நின்றது, போய்ப் பேசினாள் முதலான தொடர்களைக் கொள்ளலாம்.

தெரிநிலை வினைமுற்றுத்தொடர்.

தெரிநிலை வினைமுற்றைத் (காலத்தைத் தெளிவாகக் காட்டுகின்ற வினைமுற்று. உதாரணம் வந்தான், சென்றாள். ) தொடக்கமாகக் கொண்டு உருவாகும் தொடர் தெரிநிலை வினைமுற்றுத் தொடர் எனப் பெயர் பெறுகிறது.

வந்தான் கணபதி,
ஆடினாள் நர்த்தகி, 
சிரித்தாள் தங்கப்பதுமை…  போன்றவை உதாரணங்களாம்.

குறிப்புமுற்றுத் தொடர்.

குறிப்பு முற்றுகளைக் கொண்டு தொடங்கும் தொடர் குறிப்புமுற்றுத் தொடர் எனப்படுகிறது. (குறிப்பு(வினை)முற்று என்பது காலத்தை வெளிப்படையாக உணர்த்தாது முக்காலத்துக்கும் பொருந்திவரும் வினைமுற்று என்பதை மனதிற் கொள்க.)
பொன்னன் வந்தான்,
பெரியன் மகிழ்ந்தான். என்பவை பொருத்தமான எடுத்துக் காட்டுகளாகும்.


இடைச்சொற்றொடர்.

இடைச்சொற்கள் வேறு பதங்களுடன் இணையும்போது இடைச்சொற்றொடர் உருவாகிறது.
மற்றொன்று, இன்னபிற போன்றவை இடைச்சொற்றொடருக்கு உதாரணங்களாம்.




உரிச்சொற்றொடர்.

உரிச்சொற்கள் வேறுசொற்களுடன் இணைந்து உருவாகும் சொற்றொடரே உரிச்சொற்றொடர் எனப்படுகிறது.
நனிபேதை, மாமுனி போன்றவற்றை  உரிச்சொற்றொடருக்கான உதாரணமாகக் கொள்ளலாம்.

அடுக்குத்தொடர்.

உணர்ச்சி மேலீட்டால் சில சொற்களை இருதடவைகள் தொடர்ந்து ஒலிக்கும்போது அது அடுக்குத்தொடர் எனப்படுகிறது.
‘பாம்பு பாம்பு’, ‘ஆபத்து ஆபத்து’ என்பவை உதாரணங்களாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 09

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 4

தமிழ் இலக்கணம் அறிவோம் எழுத்தியல்- பகுதி 5