இந்துசமயவிளக்கம் 8.


கடவுளர் சிலைகளையும் மனிதர்கள்தாமே ஆக்குகின்றார்கள். மனிதர்களால் ஆக்கப்பட்ட சிலைகளை வழிபடுவதிற் பயனுண்டா?

எங்கள் நாட்டின் தலைவரை நாங்கள்தாம் வாக்களிப்பின்மூலம் உருவாக்குகிறோம் என்பதற்காக அவருக்கு மரியாதை கொடுக்காமல் இருக்கலாமா? சாதாரண மனிதர் ஒருவர் வாக்குகளைப் பெற்று ஜனாதிபதி ஆகின்றார் என்று வைத்துக்கோள்வோம். தேர்தலுக்கு நிற்கின்றபோதே அவருக்கு ஒரு கம்பீரம் சேர்ந்து விடுகிறது. வாக்கு முடிவுகள் வெளியானதும் அவருக்கு மரியாதை சேர்ந்து விடுகிறது. பதவிப்பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர், அவருக்க அதிகாரம் சேர்ந்து விடுகிறது.

சாதாரண மனிதராகத் தெருவில் நடந்து சென்றபோது அவரைக் கண்டுகொள்ளாத மக்கள், ஜனாதிபதியாகி ஊருக்கு வருகிறார் என்றதும் வீதி இருமருங்கிலும் நின்று வரவேற்புக் கொடுப்பதில்லையா? அவருடன் பேசத் துடிப்பதில்லையா? அவர் கண்களிற் படுவதைப் பெருமையாகக் கருதுவதில்லையா? நாம்தானே ஜனாதிபதியை ஆக்கினோம் என்று எவரும் அலட்சியம் காட்டுவதில்லையே!

இதேபோல்தான் கடவுளர் சிலைகளும். வெறும் கல்லாக இருக்கும்போது அதற்கு விசேச மதிப்பு எதுவும் இருப்பதில்லை. சிற்பாச்சாரியாரால் கடவுள்சிலை செய்வதற்குப் பொருத்தமானது எனத் தேர்ந்தெடுக்கப்படும்போது, அதற்கு ஒரு கம்பீரம் வந்துவிடுகிறது. சிற்பமானதும் அது மரியாதைக்கு உரியதாகி விடுகிறது. ஆலயத்தில் பிரதிஸ்டை செய்யப்பட்டதும், பதவிப்பிரமாணம் செய்து கொண்ட ஜனாதிபதியைப்போல், சகல சக்திகளையும் அது பெற்று விடுகிறது: வழிபாட்டுக்கும் உரியதாகி விடுகிறது.

கடவுள் வழிபாட்டுக்கு மனஒருப்பாடு அவசியம். கோயிலில் காணப்படும் சிலைகள் கடவுள் அல்ல. ஆனால் நம்பிக்கையும், ஒருப்பட்ட மனவழிபாடும் அவற்றைக் கடவுளாகவோ, கடவுளின் தோற்றமாகவோ ஏற்றுக் கொள்கிறது. எனவே, வழிபாடும் பயனுடையதாகின்றது.


கடவுள் வழிபாடு எவ்வாறு அமைய வேண்டுமென இந்துமதம் போதிக்கிறது?

இறைவனை மனத்திருத்தி வழிபட வேண்டும் என்றே இந்துமதம் எதிர்பார்க்கிறது. ஏனைய புறக்காரியங்களை அது இரண்டாம்பட்சமாகவே கருதுகிறது.

உலகில் எப்போதும் ஒருசிலரைத் தவிர, ஏனையோர் சாதாரண மக்களாகவே இருக்கிறார்கள். இங்கு சாதாரண மக்கள் எனக் கருதப்படுவது அவர்களின் புறவாழ்க்கை முறையை நோக்கியன்று. அகவாழ்வு நோக்கியேயாகும். மக்களின் அகவாழ்வு நேர்மை பெறும்பொருட்டே ஆலயங்கள், சடங்குகள் என்பவை அமைக்கப்பட்டுள்ளன. எனவே சாதாரணமக்கள் இறையுணர்வைப் பெறும்பொருட்டு ஆலய வழிபாட்டை இந்துமதம் பெரிதும் ஊக்குவிக்கிறது.

ஒருவர் தினமும் ஆலயம் சென்று இறைவழிபாடியற்றி வருவது விசேடமான நிலையாகும். முடியாதவர்கள் வாரத்தில் சிலநாட்களிலோ விசேட தினங்களிலோ ஆலயம் சென்று வழிபாடு செய்வதை ஏற்றுக் கொள்ளலாம். ஆகக் குறைந்தது, புண்ணியதினங்களிலோ, உற்சவத் தினங்களிலோ ஆலயஞ் சென்று வருதல் சாதாரணநிலை மாந்தருக்கம் நன்மை பயக்கும் காரியமாகும். ஆயினும், ஆலயம்சென்று கடவுளை வழிபடுபவர் மாத்திரம்தான் கடவுளின் அன்புக்கு உள்ளாவார் என்று இந்துமதம் என்றுமே வலியுறுத்தியதில்லை.

ஏனெனில், இறைவணக்கம் என்பது உள்ளத்திலிருந்து வந்தாற்றான் பயனுண்டு. அதைவிடுத்துக் கட்டாயமாகக் கோயிலுக்குத் தினமும் வந்துதானாக வேண்டும் என்று மனிதர்களைக் கட்டுப்படுத்த முனைந்தால், சர்வாதிகாரியொருவர் முன்னால், உள்ளத்தில் வெறுப்பை வைத்துக்கொண்டு மண்டியிட்டு மரியாதை செய்யும் ஓர் அடிமை போன்ற நிலைதான் மனிதர்களிடையே தோன்றும். இது பார்ப்பதற்கு வழிபாடாக இருக்கலாம். ஆனால், உள்ளத்தில் உண்மையொளியைத் தோற்றுவிக்கப் போவதில்லை: பயன்தரப் போவதுமில்லை.

மனதாலும், வாக்காலும், செய்கையாலும் ஒருவர் மற்றையோருக்குத் தீங்கற்ற நல்வழியைக் கடைப்பிடித்து வாழ்வாராயின், அத்தகைய வாழ்க்கைகூட இறைவழிபாடாகவே ஏற்கப்படுகிறது. பிற உயிர்களுக்கு உதவும்படியான வாழ்க்கை முறையொன்றை ஒருவர் அமைத்துக்கொண்டால் அது “மகேசுரபூசை” என வர்ணிக்கப்படுகிறது.

ஆனால், இத்தகைய உயர்வாழ்க்கைமுறை எல்லோருக்கும் கைவரப்பெறாது. எனவே, ஆலய வழிபாடுகள்மூலம் இத்தகைய உயர்நிலையை அடைய முயற்சி செய்வதே சாலச் சிறந்ததாகும்.






கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 09

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 03 - பகுதி 02

தமிழ் இலக்கணம் அறிவோம். (3) புணரியல் 4