தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 7

பதவியல் 7


தமிழ்ச் சொற்களை இயற்சொல், திரிசொல். வடசொல், திசைச்சொல் என நான்கு வகையாகவும் பிரிப்பர் அறிஞர்.


இயற்சொல்.

தமிழ்மொழி பேசுகின்ற அனைவரும் விளங்கிக் கொள்ளக்கூடிய வகையில்  நாம் அன்றாடம் பயன்படுத்தும் சொற்கள் இயற்சொற்கள் எனப்படுகின்றன. ஆழமான முயற்சிகள் எதுவுமின்றிப் பாமரனும் படித்தவனும் இயற்சொற்களை விளங்கிக் கொள்ள இயலும்.

“நான் வந்தேன்.” “அவன் போனான்.” “அம்மா என்னை அழைத்தார்.” போன்ற வசனங்களில் வருகின்ற சொற்கள் அனைத்தும் எல்லோராலும் விளங்கிக் கொள்ளத்தக்கனவாக அமைந்தள்ளன. எனவே இவை இயற்சொற்கள் எனப்படுகின்றன.

ஆடு, மாடு, கோழி, தம்பி, அண்ணா, வானம், பூமி, காற்று ஆகிய பெயர்ச்சொற்களும், வா, நின்றான், படிப்பாள், சாப்பிடு, ஓடு, நட போன்ற வினைச்சொற்களும் இவ்வகையைச் சார்ந்தன. பயன்படுத்தப்படும் இடங்களில் சொல்லவந்த கருத்தை மயக்கமின்றித் தெளிவாகச் சொல்கின்ற தன்மை இயற்சொற்களுக்கு உண்டு.


திரிசொல்.

சாதாரண மக்களன்றிக் கல்வி அறிவுடைய மக்களால் மட்டும் விளங்கிக் கொள்ளக்கூடிய தமிழ்ச்சொற்கள் திரிசொல் எனும் பிரிவுக்குள் வருகின்றன.

“பேசினான்.” எனும் இயற்சொல்லை “நவின்றான், பகன்றான், செப்பினான், உரைத்தான், விளம்பினான்.” என ஒருவர் சொல்வாராயின் அவை திரிசொற்கள் ஆகின்றன. ஏனெனில் இப்பதங்களின் பொருளைப் படித்தவர்களால் மட்டுமே விளங்கிக் கொள்ளமுடியும்.

அதேபோல், கிளி எனும் சொல்லை தத்தை, அஞ்சுகம், கிள்ளை எனப் பகருமிடத்து, அவையும் திரிசொற்கள் எனப்படுகின்றன. 

திரிசொற்களை மொழியியல் அறிஞர்கள் இருவகைப்படுத்துவர். ஒன்று: ஒருசொல் பலபொருளைத் தருவது. மற்றது: பல சொற்கள் ஒரு பொருளைத் தருவது.
எடுத்துக்காட்டாக, கவி எனுஞ் சொல்லை எடுத்துக் கொண்டால் கவிதை, கவிஞர், குரங்கு, கவிதல் எனப் பலபொருளை அது தருகிறது. இது ஒருவகை.

தத்தை, அஞ்சுகம், கிள்ளை ஆகிய பலசொற்கள் கிளி எனும் ஒருபொருளையே கொண்டிருப்பது இரண்டாவது வகை.


வடசொல்.

வடமொழியிலிருந்து தமிழ்மொழி பெற்றுக்கொண்ட சொற்கள் வடசொற்கள் எனப்படுகின்றன. பண்டைக் கலந்தொட்டு வடமொழியும் தமிழ்மொழியும் நெருங்கிய உறவைக் கொண்டிருந்ததால் வடமொழிச் சொற்கள் தமிழில் தனியிடம் பெறுகின்றன.

தமிழ்மொழியுடன் வடமொழி கலந்து எழுதுகின்ற முறைமைகூட ஒருகாலத்திற் காணப்பட்டது. இம்முறைமைக்கு மணிப்பிரவாளம் எனப் பெயரிட்டனர். இது பெருமைமிக்க வசனநடையாகவும், எழுதுபவரின் மொழியாற்றலை மேம்படுத்திக் காட்டும் உத்தியாகவும் கருதப்பட்ட காலமும் இருந்தது. எவ்வாறெனினும் அந்நிலை இன்று அருகிவிட்டது.

எனினும் வடசொற்கள் தமிழில் நிலைத்து நிற்கின்றன. அடையாளங் காணத் தக்கனவாகவும், அடையாளங் காண முடியாதனவாகவும் அவை தமிழ்மொழியில் வழங்கி வருகின்றன.

இவற்றை மொழிநூலார் இருவகையாகக் காட்டுவர்.  வடமொழிக்குரிய எழுத்துகளைத் தமிழ்மொழிக்கேற்ப எழுதுமிடத்து அது தற்பவம் எனவும், இயல்பாகத் தமிழ்எழுத்துகளால் எழுதத்தக்கனவாக வடமொழியில் அமையும் சொற்களைத் தமிழில் எழுதுமிடத்து தற்சமம் எனவும் உரைப்பர்.

எடுத்துக் காட்டுகள்: 
தற்பவம்.
பங்கஜம் ---  பங்கயம்
ரிஷபம்  ----  இடபம்
ஜடம்      ----  சடம்
ஸரஸ்வதி --- சரசுவதி 

தற்சமம்

நியாயம், அசுத்தம், வியாக்கியானம், கமலம் என்பவை தற்சம வகையைச் சாரும். வடமொழி உச்சரிப்பை அப்படியே தமிழில் எழுதும்முறை இது.


திசைச்சொற்கள்.

வடமொழி தவிர்ந்த ஏனைய மொழிகளிலிருந்து தமிழ்மொழியாற் பெற்றுக்கொள்ளப்பட்ட  அனைத்துச் சொற்களும் திசைச்சொற்கள் எனப்படுகின்றன.

அசல் (முதல்), அண்டா (பெரிய பாத்திரம்), அந்தஸ்து, அமுல், ஆசாமி, இனாம், உஷார், கலால், கில்லாடி, கசாப்புக்கடை, கஜானா, குஷி, சிப்பாய், தரப்பு, மஹால், மிட்டாய் போன்ற இந்துஸ்தானிச் (இந்தியும் உருதும் கலந்த)  சொற்களும்,

அச்சாறு, அட்டாளை (காவற் கோபுரம்), அலுமாரி, இலேஞ்சு, குசினி, கோப்பை, சக்கிடுத்தார் (செயலர்), வரோணிக்கம் (பதக்கம்) போன்ற போர்த்துக்கீசச் சொற்களும்,

சிங்களம் உட்படத் தமிழுக்கு அயல்மொழிகளான தென்னிந்திய மொழிச்சொற்களும் வியாபாரமுறையிற் கலந்த அரேபியச்சொற்களும்,
அறிவியல் வழியிற்கலந்த ஆங்கிலமொழிச் சொற்களும் திசைச்சொற்களாகும்.


இடுகுறிச்சொற்கள், காரணச்சொற்கள், காரணஇடுகுறிச் சொற்கள். 

சொற்கள் தோற்றம் பெறுவதனடிப்படையில் இடுகுறிச்சொற்கள், காரணச்சொற்கள், காரண இடுகுறிச்சொற்கள் என மூவகைப்படுகின்றன.

இடுகுறிச் சொற்கள்.

இவ்வகைச் சொற்கள் எவ்வித காரணமுமின்றித் தோற்றம் பெறுகின்றன. மனிதர்கள் தங்கள் எண்ணத்தை அல்லது கருத்தை வெளிப்படுத்துவதற்காக ஏற்படுத்திக்கொண்ட அடையாள ஒலிக்கூட்டே இடுகுறிகளாகின்றன. மரம், மண், வானம், நாய், பூனை போன்ற சொற்கள் இவ்வகையைச் சாரும். இப்பெயர்கள் சூட்டப்பட்டதற்கு அடையாளப்படுத்தல் ஒன்றைத் தவிர வேறு காரணங்கள் இல்லை எனலாம்.

எனவே இவை இடுகுறிச்சொற்கள் அல்லது இடுகுறிப்பெயர்கள் எனப்படுகின்றன.

இடுகுறிச் சொற்களில் பொது, சிறப்பு என இருவகையை நாம் அவதானிக்கலாம்.

இடுகுறிப் பொதுச்சொற்கள்.
மரம், விலங்கு, நிலம், மலை என்பவை பொதுவான இடுகுறிச் சொற்களாகும். இவை அனைத்து மரங்களுக்கும், விலங்குகளுக்கும், நிலப்பகுதிக்கும், மலைகளுக்கும் பொருந்துவன.


இடுகுறிச் சிறப்புச்சொற்கள்.
மா, பலா, விளா, தென்னை, பனை, முதிரை, தேக்கு என்பவையும் மரங்களையே குறிப்பனவாயினும், அவை மரங்களிற் சில வகையைச் சிறப்பித்து அடையாளப்படுத்துகின்றன.

நாய், கழுதை, பசு, மான், மரை, புலி, கரடி, சிங்கம் ஆகியவை யாவும் விலங்குகளையே சுட்டுவனவாயினும் விலங்குகளில் வெவ்வேறு வகையை அடையாளப்படுத்துவதற்கான சிறப்புச் சொற்களாக அவை அமைகின்றன.

நாடு, நகரம், காடு, ஊர், மேடு பள்ளம்,  என்பவை நிலத்தையே சுட்டுகின்றனவாயினும், நில அமைப்பிற் தெரிகின்ற வேறுபாடுகளைச் சிறப்பித்துக் குறிக்கப் பயன்படுவதால் அவை இடுகுறிச் சிறப்புகளாகின்றன.

குன்று, பாறை, சிகரம் வரை, விந்தியம், பொதிகை, சிவனொளிபாதம் என்பவை மலைகளின் இயல்புகளையும் இடஅமைவுகளையும் வேறுபடுத்தி அடையாளங்காண உதவுவதால் இவையும் இடுகுறிச் சிறப்புப் பெயர்களாகின்றன.


காரணப்பெயர்.

மைனா, குருவி, காகம் என்பவை இடுகுறிப்பெயர்களாயினும் பறக்கும் இயல்புடையனவாக அவை காணப்பட்டதால் பறவை எனப் பெயர் பெற்றன. எனவே பறவை என்பது காரணப்பெயராகும்.

பாம்பு, மரவட்டை, பல்லி போன்றவை நிலத்தில் ஊர்ந்து செல்வதன் காரணமாக ஊர்வன எனக் காரணப்பெயரைப் பெறுகின்றன. இவற்றுள் பாம்பு, பல்லி என்பவை இடுகுறிப் பெயர்களேயாயினும், மரங்களில் ஊர்ந்து திரிவதன் காரணமாக மரவட்டை என்பதும் காரணப்பெயர் என்பதை அறிக.

இவ்வாறே, மூன்று கால்களையுடையது முக்காலி எனவும், நான்கு கால்களைக் கொண்டிருப்பதால் நாற்காலி எனவும் புகையைக் கக்கிக்கொண்டு செல்வதால் புகையிரதம் எனவும், மூன்று கண்களை உடையவர் முக்கண்ணன் எனவும், ஒட்டகம் போன்று உயர்ந்து காணப்பட்டதால் அம்மிருகம் ஒட்டகச்சிவிங்கி எனவும், பொன்னை நிகர்த்தவன் என்பதால் பொன்னன் எனவும், கரிய வண்ணத்திலிருப்பதால் கறுவல் எனவும், திண்ணியனாக அமைந்ததால் திண்ணன் எனவும் காரணப் பெயர்கள் அமைகின்றன என்பதை உணர்க.


காரணஇடுகுறிப் பெயர்.
நாவலர் எனுங் காரணப்பெயர் நாவன்மை நிறைந்த அனைவருக்கும் பொதுவானதெனினும் எமது நினைவுக்குச் சட்டென வருபவர் ஆறுமுக நாவலர். எனவே நாவன்மை காரணமாகத் தோன்றிய காரணப்பெயர், அன்னாரைக் குறிக்கும் இடுகுறிப்பெயர் போன்றமைவதால் அது காரணஇடுகுறிப் பெயர் எனப்படுகிறது. இதன் கருத்து யாதெனில் காரணப்பெயரான போதிலும் சிறப்பாக ஒருவரை அடையாளங் காட்டும் இயல்பு பெற்றிருக்கிறது என்பதாகும்.

இதேபோல், முள்ளி என்பது அனைத்து முள் மரங்களையும் குறிக்கின்ற போதிலும் தனியொரு தாவரத்துக்கும் பெயராக அமைவதால் அத்தாவரத்தைக் குறிக்குமிடத்து காரணஇடுகுறிப் பெயராகின்றது.

மூன்று கண்களையுடையவர் முக்கண்ணன் என்றான போதிலும் சிவனை மாத்திரம் சுட்டிநிற்பதால் அது காரணஇடுகுறிப் பெயர் எனப்படுகிறது.

ஆறுமுகம் என்ற பெயரை எடுத்துக்கொண்டால், அது முருகனைக் குறிக்கையில் காரணப்பெயராகின்றது. ஆனால் அப்பெயரைச் சூடியுள்ள ஒரு மனிதனைக் குறிக்கையில் இடுகுறிப்பெயர் எனப்படுகிறது என்பதையும் மனதிற் கொள்க.





கருத்துகள்

  1. ஆறுமுகம் முருகனைக் குறிக்கும் போது முக்கண்ணன் சிவனைக் குறிக்கும்தானே...காரணப்பெயர்தானே

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 4

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 09

தமிழ் இலக்கணம் அறிவோம் எழுத்தியல்- பகுதி 5