தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 5(2)


பதவியல் 5 (இரண்டாம் பகுதி)

வேற்றுமை.

நான்காம் வேற்றுமை.

நான்காம் வேற்றுமை உருபு “கு” என்பதாகும். கொடை நோக்கத்துக்காக இவ்வுருபு அதிகம் பயன்படுத்தப்படுவதால் இதனைக் கொடைவேற்றுமை எனவும் அழைப்பர்.

கொடை, பகை, நட்பு, தகவு, அதுவாதல், காரணம் முதலிய கருத்துகளுக்கு நான்காம்வேற்றுமை உருபு பயன்படுகிறது.

இவ்வுருபு இன், அன், அக்(கு), உக்(கு) ஆகிய சாரியைகளைப் பெற்றும், சாரியையெதுவும் பெறாமலும் தன்பணியைச் செய்யுமியல்புடையது.

  • வீட்டிற்கு, காட்டிற்கு என்பவற்றில் இன் சாரியை பெற்று வருகிறது.
  • எதற்கு, அதற்கு, இதற்கு என்பவற்றில் அன் சாரியை பெற்று நிற்கிறது.
  • நமக்கு, எமக்கு உனக்கு போன்ற இடங்களில் அக்(கு) சாரியை ஏற்கிறது
  • அண்ணாவுக்கு, மாமாவுக்கு, தாத்தாவுக்கு என வருமிடத்து உக்(கு) சாரியை பெறுகிறது.
  • வீட்டுக்கு, காட்டுக்கு, எதுக்கு, அதுக்கு, இதுக்கு என்பவற்றில் சாரியை ஏற்காமல் கருத்தைத் தருகிறது.



இனி நான்காம் வேற்றுமையுருபு எவ்வெப் பொருள்களில் பயன்படுகின்றது என்பதைப் பார்ப்போம்.

கொடைப்பொருள்:
  • அம்மா குழந்தைக்குப் பால் கொடுத்தார்.
  • செல்வந்தர் ஏழைகளுக்கு உணவிட்டார்.
  • அரசு மக்களுக்கு வசதிகளைச் செய்து கொடுத்தது.


பகைப்பொருள்:
  • பாம்புக்குக் கீரி எதிரி.
  • அண்ணனுக்குத் தம்பியைப் பிடிக்காது.
  • அவனுக்கு உன்மீது கோபம்.


நட்புப்பெருள்: அல்லது நேர்ச்சிப்பொருள்:
  • மாமாவுக்கு மணி உதவினான்.
  • எனக்கு நவசோதிராசா நண்பன்.
  • அவனுக்கு மகள்மேல் அதிகபாசம்.


முறைப்பொருள்:
  • அவர் என் அம்மாவுக்குத் தம்பி.
  • அப்பாவுக்குப் பிள்ளையாக நடந்துகொள்கிறான்.
  • அண்ணாவுக்கு மனைவியெனில் அவர் எனக்கு அண்ணி.


தகுதிப்பெருள்:
  • கற்றோர்க்கு அழகு பண்பு பேணல்.
  • அரசருக்கு உரிய சிம்மாசனம்.
  • புடிப்புக்கு ஏற்ற வேலை கிடைப்பது முயற் கொம்பாகிற்று.


முதற்காரணப்பொருள் அல்லது அதுவாதல்நிலை:
  • தாலிக்குப் பொன் உருக்கினார்கள்.
  • கறிக்கு வாங்கப்பட்ட மீன். 
  • சிற்பத்துக்கு ஏற்ற பாறை.


துணைக்காரணப்பொருள்:
  • கூலிக்கு வேலை செய்தான்.
  • குழந்தைக்குப் பால் வாங்கினாள்.
  • சுவருக்கு வர்ணம் பூசினர்.


இவற்றுடன் மேலதிகமாகப் பின்வரும் பொருள்களிலும் பயன்படுகின்றது. 

எல்லைப்பொருள்:
  • இந்தியாவுக்குத் தெற்கே இலங்கை அமைந்துள்ளது.
  • காணிக்கு வெளியே நில்லுங்கள்.
  • காட்டுக்கு அப்பால் ஊர்.


இடநகர்வுப்பொருள்:
  • நேற்று கொழும்புக்குப் போனேன்.
  • நண்பனின் வீட்டுக்குச் செல்வோம்.
  • இன்று மாதங்கி பாடசாலைக்கு வரவில்லை.


அனுபவப்பொருள்:
  • அவனுக்கு மாம்பழம் பிடிக்கும்.
  • கணபதிக்கு இருக்கும் முதிர்ச்சி உன்னிடமில்லை.
  • சித்திரத்தில் அவளுக்குத் தேர்ச்சி அதிகம்.


காலவரையறைப்பொருள்:
  • புதியவர்கள் இருவாரகாலத்துக்குப் பயிற்சி பெறவேண்டும்.
  • மாலை நான்கு மணிக்கு வந்துவிடுவேன்.
  • ஒருநாளைக்கு மூன்றுவேளை மாத்திரை போடவேண்டும்.


வீதப்பொருள்:
  • நாலுக்கு மூன்றுபங்கு தரவேண்டும்.
  • ஆறுக்கு ஒன்று எனக் கலவை போடு.
  • நூற்றுக்குப் பத்துப்பேர் கூடத் தேறவில்லை.


இவற்றைவிட, பேச்சுக்குப்பேச்சு, பாட்டுக்குப்பாட்டு, அடிக்குஅடி, வீட்டுக்குவீடு, ஊருக்குஊர், ஒருவனுக்குஒருத்தி என்ற தொடர்களிலும் நான்காம்வேற்றுமை உருபு சிறப்புடன் செயலாற்றுகிறது.


ஐந்தாம் வேற்றுமை.

இன், இல் ஆகிய உருபுகள் ஐந்தாம்வேற்றுமைக்கு உரியவையாம். இவ்வுருபுகள், நீக்கப்பொருள், ஒப்புப்பொருள், எல்லைப்பொருள், ஏதுப்பொருள் ஆகிய கருத்துகளைத் தரவல்லனவாக அமைகின்றன. அவற்றைப் பார்ப்போம்.

நீக்கப்பொருள்:
“தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்
 நிலையின் இழிந்த கடை.”   
எனுந் திருக்குறள் நீக்கப்பொருளுக்குச் சிறந்த உதாரணமாகும். இங்கு தலையின், நிலையின் என ஈரிடங்களில் இன் உருபு பயன்படுத்தப்பட்டிருக்கிறது. எனினும் தற்காலத் தமிழ்வழக்கில் இன் உருபின் பயன்பாடு அருகி விட்டதெனலாம். 

எனவே இல் உருபே பயன்பாட்டில் அதிகமாக வருகிறது என்பதுடன், ‘இல்’ உடன் இணைந்து ‘இருந்து’ எனும் பதமும் ‘இன்’ வருங்கால் அதனுடன் இணைந்து ‘நின்று’ என்ற பதமும் வருகின்றன என்பதையம்  புரிந்துவைத்தல் நலம்.

நீக்கப்பொருள் இருவகையில் அமையலாம் எனப் பேராசிரியர் எம்.ஏ.நுஃமான் கூறுகிறார். அதன்படி நீக்கப்பொருள். பருப்பொருள் சார்ந்தநீக்கம், பருப்பொருள் சாராநீக்கம் என வகைப்படுகின்றன.

பருப்பொருள் சார்ந்த நீக்கப்பொருள்.
  • கொழும்பிலிருந்து தம்பி வந்தான். (கொழும்பு-இல்-இருந்து).
  • மரத்திலிருந்து விழுந்தவனை மாடேறி மிதித்தாற்போல. (மரம்-(அத்துசாரியை)-இல்-இருந்து).
  • வில்லிலிருந்து புறப்பட்ட அம்பு. (வில்-இல்-இருந்து). இதனை, “வில்லினின்று புறப்பட்ட அம்பு.” எனவும் எழுதலாம். (இதில் ‘இன்’ உருபுடன் ‘நின்று’ எனும்பதமும் இணைந்து வருகிறது.)


பருப்பொருள் சாராநீக்கப்பொருள். 
  • துக்கத்தினின்று விடுதலை பெற்றான். (துக்கம்-(அத்துசாரியை)-இன்-நின்று).
  • தூக்கத்திலிருந்து விழித்தாள். (தூக்கம்-(அத்துசாரியை)-இல்-இருந்து)
  • கவலையிலிருந்து மீண்டனர். (கவலை-இல்-இருந்து)

‘இருந்து’ எனுமுருபு. மேலிருந்து, கீழிருந்து, உயரத்திலிருந்து, அங்கிருந்து, எங்கிருந்து என வருதலையும், 

‘இடமிருந்து’ எனுமுருபு அப்பாவிடமிருந்து பணம் பெற்றேன், பாம்பிடமிருந்து தவளை தப்பியது, பூனையிடமிருந்து எலி விடுபட்டது, என வருதலையும் அவதானிக்கலாம்.

இவை, இன், இல் ஆகிய உருபுகளுக்குப் பதிலாக தற்காலத் தமிழிற் பயன்படுன்றதன் காரணமாக இவையயும் ஐந்தாம்வேற்றுமை உருபுகளாகக் கொள்ளப்படுகின்றன.

எல்லைப்பொருள்:
  • வீட்டின் பின்னே தென்னை.(இன் உருபு)
  • வவுனியா மாவட்டத்தின் வடக்கே கிளிநொச்சி அமைந்திருக்கிறது. (இன் உருபு) இதனை, ‘வவுனியா மாவட்டத்துக்கு வடக்கே கிளிநொச்சி அமைந்திருக்கிறது.’எனவும் எழுதலாம். இங்கே இன் உருபுக்குப்பதிலாக நான்காம் வேற்றுமை உருபான ‘கு’ பயன்படுவதைக் காணலாம்.


ஏதுப்பொருள் அல்லது காரணப்பொருள்.
  • கல்வியிற் பெரியன் கம்பன். (இல்உருபு).
  • வில்லிற் சிறந்தோன் அருச்சுனன். (இல்உருபு).
  • அறிவிற் பெரியோரைக் கனம் பண்ணுவோம். (இல்உருபு).



ஆறாம்வேற்றுமை.

இதனை உடைமைவேற்றுமை எனவும் அழைப்பர். இதன் உருபுகள் அது, இன், ஆது, அ, உடைய என்பவையாம்.
எனினும் ஆது, அ ஆகிய உருபுகள் தற்காலப் பயன்பாட்டனின்றும் நீங்கிவிட்டன எனலாம். அது, இன், உடைய ஆகிய உருபுகளே உடைமைக் கருத்திற் பயன்படுத்தப்படுகின்றன.

  • அவனது திறமை,    வேலனது கைவேல்,  (அது)
  • கம்பனின் பெருமை,  அம்மாவின் மகிழ்ச்சி. (இன்)
  • தம்பியுடைய இயல்பு, பாலனுடைய புத்தகம். (உடைய)

என்பவற்றை உதாரணங்களாகக் கொள்ளலாம்.

மேலே தரப்பட்ட வாக்கியங்களை, வேலனினது கைவேல், (இன்-அது) 
தம்பியினுடைய இயல்பு (இன்-உடைய) எனவும் எழுதலாம்.

“இன்” உருபு இணைக்கப்படாமல், அது, உடைய உருபுகள் இவ்வாக்கியங்களில் முழுமையான பொருளைத் தருவதால், இவ்விடங்களில் இன் உருபாகப் பயன்படாமல் சாரியையாக அமைகிறது என்பர் இலக்கணஅறிஞர்.

ஏழாம்வேற்றுமை:

ஏழாம் வேற்றுமை, இடந்தொடர்பான தெளிவுகளைத் தருவதால் இதனை இடவேற்றுமை எனவும் அழைப்பர். இதன் உருபுகள் இல், இன் என்பவையாம். இவை பருப்பொருள் சார்ந்த இடத்தையும் பருப்பொருள்சாரா இடத்தையும் சுட்ட உதவுகின்றன.

பருப்பொருள்சார் இடம்:
  • காகம் மரத்தில் நிற்கின்றது.   (மரத்தில்)
  • குழந்தை தொட்டிலில் நித்திரை செய்கிறது.   (தொட்டிலில்)
  • புத்தகம் மேசையில் இருக்கிறது.   (மேசையில்)


பருப்பொருள்சாரா இடம்:
  • கவலைகள் நிறைந்த மனதில் மகிழ்ச்சி ஏது?   (மனதில்)
  • மனதின் துயரங்களை மறந்து விடவேண்டும்.    (மனதின்)
  • அது வாழ்வில் மறக்கக் கூடிய சம்பவமன்று.   (வாழ்வில்)
  • இசையில் மயங்காதாரும் உளரோ?     (இசையில்)



எட்டாம் வேற்றுமை:

எட்டாம் வேற்றுமை படர்க்கைப் பெயரை விளித்துப் பேசுவதால் இதனை விளிவேற்றுமை எனவும் அழைப்பர்.

ஒன்று தொடக்கம் ஏழு வரையிலான வேற்றுமைசார்ந்த பெயர்ச்சொற்கள் எழுவாயாகவோ, செயப்படு பொருளாகவோ வசனத்தில் அமைவதை அவதானித்திருக்கலாம். ஆனால், எட்டாம்வேற்றுமைப் பெயர்ச்சொல் எப்போதும் வசனத்தின் வெளியேதான் நின்று செயல்படும். அது எழுவாயாகவோ, செயப்படு பொருளாகவோ ஒருபோதும் மாற்றமடையாது. இது எட்டாம் வேற்றமைக்குரிய சிறப்பு. 

படர்க்கைப் பெயரை முன்னிலைப்படுத்திச் செயல்படும் ஆற்றல் இவ்வேற்றுமைக்கு உண்டு. நான், நாங்கள், நீ, நீங்கள், போன்ற தன்மை முன்னிலைப் பெயர்களையும் அவன், அவர்கள் ஆகிய படர்க்கைப் பெயர்களையும் எட்டாம்வேற்றுமையின் ஆளுகைக்கு உட்படுத்து முடியாது. ஆயினும் இவை எட்டாம் வேற்றுமையைத் தாங்கி வருகின்ற வாக்கியங்களில் எழுவாயாகச் செயல்படுகின்றன என்பதையும் அவதானிக்கலாம்.

இவ்வேற்றுமைக்கு உருபுகளென எவையும் இல்லாதபோதிலும் விளிப்பதற்குப் பயன்படுத்தப்படும் அசைநிலை, திரிபு என்பவற்றை இதனுருபுகளாகக் கொள்ளமுடியம். எனினும் இலக்கண அறிஞர்களின் கூற்றுப்படி இதற்கு உருபுகள் இல்லையென்பதே முடிபு.

பெயர்ச்சொல் எட்டாம்வேற்றுமைக்கு உட்படும்போது அல்லது விளிப்புக்கு உள்ளாகும்போது. இயல்பு கெடாமலும், அதன் ஈற்றெழுத்து மிகுந்தும், ஈற்றெழுத்து குறைந்தும், ஈற்றயலெழுத்து திரிபடைந்தும் வருவதுண்டு. 

இயல்பு கெடாமல்.
  • அம்மா, நீங்கள் எங்கே போயிருந்தீர்கள்?  
  • அண்ணா, என்னுடன் விளையாட வரமாட்டீர்களா?
  • அய்யா, மெதுவாக எழுந்திருங்கள். 

மேலே தரப்பட்ட வாக்கியங்களில் வருகின்ற விளிப்புப் பெயர்களான அம்மா, அண்ணா, அய்யா ஆகியவை எவ்வித மாறுதலுக்கும் உள்ளாகவில்லை என்பது கவனிக்கத்தக்கது. முதல் வசனத்தில் எழுவாய் (நீங்கள்) தெளிவாகத் தெரிகின்றது. அடுத்துவரும் வசனங்களில் எழுவாய் (நீங்கள்) மறைந்து நிற்கிறது.

ஈற்றெழுத்து மிகுதல்:
  • தம்பீ, உன்னை நம்பித்தான் நான் காரியங்களில் துணிவுடன் இறங்குகிறேன்.
  • மகளே, அம்மாவுக்கு உதவி செய்வாயாக.
  • எந்தையே, சிவனே. நின் பாத பங்கயங்கள் போற்றி.

இவ்வாக்கியங்களில் தம்பி, மகள், எந்தை, சிவன் ஆகிய சொற்கள், முறையே தம்பீ, மகளே, எந்தையே, சிவனே என ஈற்றெழுத்து அசைபெற்று மிகுந்தன.

ஈற்றெழுத்து குறைதல்:
  • ஐய, உங்களை நம்பித்தான் வந்தோம்.
  • தோழ, நின் துணை எனக்குத் தேவை.
  • நண்ப, உன் நட்பே நட்பு

இவற்றில் ஐயன், தோழன், நண்பன் என்பவை ஈறுகுறைந்து ஐய, தோழ, நண்ப என வருதலைக் காணலாம்
.
ஈற்றயல் திரிபடைதல்:
  • மன்னா, கேள்.
  • புலவீர்காள், உயர்ந்த இலக்கியங்களைப் படைப்பீர்களாக.
  • மக்காள், நான் சொல்வதைக் கேளுங்கள்.

இவ்வசனங்களில் மன்னன் என்பது மன்னா என்றும். புலவர்கள் என்பது புலவீர்காள் எனவும், மக்கள் என்பது மக்காள் எனவும் மாறுபட்டிருப்பதைக் காணலாம்.

முக்கிய குறிப்பு:
வேற்றுமைகளையும் அவற்றின் உருபுகளையும் கண்டு யாரும் மலைக்க வேண்டியதில்லை. தமிழில் பெயர்ச்சொல் ஒன்றை வாக்கியத்திற் சேர்க்கும்போது எட்டுவகையாக அதனைக் கையாளலாம் என்பதன் விளக்கமே இவை. ஒரே உருபு வெவ்வேறு வேற்றுமைகளுள் வருவதும், இங்கே காட்டப்படாத பல உருபுகள்  ஊர்வழக்கில் இருப்பதையும் எண்ணிக் குழம்பவேண்டியதில்லை. உருபு எதுவாயினும். அது எந்த வேற்றுமைக்குரிய பொருளைக் கொள்ளப் பயன்படுகிறதோ, அவ்வுருபு அந்த வேற்றுமையைச் சார்ந்துவிடும் என்பதை மனதிற்கொள்க.



























கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 4

தமிழ் இலக்கணம் அறிவோம் எழுத்தியல்- பகுதி 5

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 : பகுதி 02