தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 4
பதவியல் 4
இடைச் சொற்கள்.
இடைநிலை.
ஒரு பகுபதத்தில் பகுதி, விகுதி என்பவற்றுக்கு அடுத்தபடியாக முக்கிய இடம் வகிப்பவை இடைநிலைகளாகும். விகுதியானது திணை, பால் எண், இடம் என்பவற்றைக் காட்டுவதுபோல் வினைச் சொற்களுடன் இணைந்துவருகின்ற இடைநிலைகள் காலத்தைக் காட்டுகின்றன. பெயர்ச்சொற்களிடையே வருகின்ற இடைநிலைகள் காலங்காட்டுவதில்லை.
இவற்றின் தன்மையைக் கொண்டு அறிஞர்கள் மூவகைப் படுத்தியுள்ளனர். அவை பெயர் இடைநிலை, வினை இடைநிலை, எதிர்மறை இடைநிலை என்பவையாம்.
பெயர் இடைநிலை:
இவை பெயர்ச்சொற்களின் பகுதி, விகுதிகளுக்கு இடையே வருகின்றதெனினும் காலங்காட்டுவதில்லை. உதாரணமாக, அறிஞன், வலைஞன், சுவைஞன் என்பவற்றில் வருகின்ற ‘ஞ’கர மெய் இடைநிலை எனப்படுகிறது. அதேபோல் வலைச்சி என்ற பகுபதத்தில் வருகின்ற ‘ச்’, குறத்தி, வண்ணாத்தி ஆகிய பகுபதங்களிடையே வருகின்ற ‘த்’ என்பன இடைநிலைகளாகும்.
இவை உண்மையில் இடைநிலைச் சொற்கள்தாமா என்ற மயக்கம் எழுவதற்கும் வாய்ப்பு இல்லாமலில்லை. இவை தனியெழுத்தாக அமைவதும், உடம்படு மெய்போல் தோற்றமளிப்பதும் இத்தகைய மயக்கத்துக்கு ஏதுவாகின்றன. உடம்படு மெய் என்பது வேறு: இடைநிலை என்பது வேறு என்பதைத் தெளிவுற உணர்ந்தால் மயக்கம் தோன்றுதற்கு வாய்ப்பில்லை. இது புணரியல் தொடர்பான விதிகளைச் சார்ந்ததாகும்.
‘அறி’ எனும் பகுதியும் ‘அன்’ எனும் ஆண்பால் விகுதியும் இணையுமாயின், இலக்கணநூல் விதிப்படி ‘ய’கர மெய்யே தோன்றும். இதன்படி அறியன் என்றே இணைவு உருவாகும். இதேபோல் ஏனைய சொற்களும் வலையன், கலையன், சுவையன் என்றே தோற்றம்பெறும். இதேவழியில் வலைச்சி, குறத்தி, வண்ணாத்தி போன்ற பதங்களை எடுத்துக்கொண்டால் பெண்பால் விகுதியான ‘இ’ வந்து இணையுமிடத்து அச் சொற்கள் முறையே வலையி, குறவி வண்ணாயி என்றே மாற்றம் பெறும்.
ஆனால் பகுதியுடனோ விகுதியுடனோ எந்தத் தொடர்பும் இல்லாத ஞகரமெய், சகரமெய், தகரமெய் என்பவற்றை ஏற்று அவை இணைவதால், அவற்றால்; ஏற்கப்படுகின்ற எழுத்துளை இடைநிலைச் சொற்கள் என்பர் இலக்கணஅறிஞர்.
வினை இடைநிலைகள்:
வினை இடைநிலைகள் காலங்காட்டும் இயல்புடையன. இதற்கேற்ப இவற்றை இறந்தகாலவினை இடைநிலைகள், நிகழ்காலவினை இடைநிலைகள், எதிர்காலவினை இடைநிலைகள் என மூவகைப் படுத்தலாம்.
இறந்தகாலவினை இடைநிலைகள்:
இறந்தகால வினை இடைநிலைகளாக த், ட், ற், இன் என நான்கும் கொள்ளப்படுகின்றன. இவ்விடை நிலைகளை ஏற்பதனால் மட்டுமே வினைச்சொற்கள் இறந்தகாலத்தைத் தெரிவிக்கும் இயல்பைப் பெறுகின்றன.
உதாரணமாக:
செய் - த் - ஆன், கொய் - த் - ஆள் என்பவற்றை நோக்கினால், செய், கொய் என்பவை பகுதிகளாகவும், ஆன், ஆள் என்பவை ஆண்பால், பெண்பால் விகுதிகளாகவும் அமைய இவற்றை இணைத்துக் காலங்காட்டும் இடைநிலையாக ‘த்’ செயற்பட்டிருக்கிறது.
உண் -ட் - ஆன், கண் - ட் - ஆன் ஆகிய சொற்கள் முறையே உண்டான், கண்டான் என உருவாகி இறந்தகாலத்தைத் தருவதற்கு ‘ட்’ காலங்காட்டும் இடைநிலையாகச் செயற்பட்டிருக்கிறது.
இதேபோல், தின்றான் என்ற பகுபதத்தில் தின்-ற்-ஆன் என ‘ற்’ இடைநிலையாகவும், பாடினான், ஓடினான் போன்ற சொற்களில் பாடு-இன்-ஆன், ஓடு-இன்-ஆன் என ‘இன்’ இடைநிலையாகவும் நின்று காலங்காட்டுகின்றன.
போனான் (போ-ன்-ஆன்) என்ற பதத்தில் ‘இன்’ இடைநிலைக்கு இகரம் குறைந்து ‘ன்’ என்பது மட்டுமே இடைநிலையாகிறது. அதேபோல் போயது என்ற இறந்தகாலம் காட்டும் பதத்தில் ‘ய்’ இடைநிலையாகச் செயல்படுவதையும் அவதானிக்கலாம். எனினும் இவை அரிதான நடைமுறைகள் என்பது கவனிக்கத்தக்கன.
நிகழ்கால வினை இடைநிலைகள்:
கின்று, கிறு, ஆநின்று எனமூன்றும் நிகழ்கால வினை இடைநிலைகளாம்.
வருகின்றான், போகின்றான், நிற்கின்றாள், செல்கின்றது, மேய்கின்றன போன்ற நிகழ்காலச் சொற்களில் ‘கின்று’ இடைநிலையாக நிற்பதை உணரலாம். (வரு-கின்று-ஆன். போ-கின்று- ஆன்.)
வருகிறது, போகிறது, உணர்கிறாள், பாய்கிறான் ஆகிய பதங்களில் ‘கிறு’ இடைநிலையாக நின்று நிகழ்காலங் காட்டுவதை அறியலாம். (வரு-கிறு-அது. உணர்-கிறு- ஆள்.)
நடவாநின்றான், செல்லாநின்றாள் ஆகிய பதங்களில் ‘ஆநின்று’ இடைநிலைகளாக இயங்கி நிகழ்காலங் காட்டுவதைத் தெரிந்து கொள்ளலாம். (நட- ஆநின்று-ஆன். செல்-ஆநின்று-ஆள்.).
எதிர்கால வினை இடைநிலைகள்:
‘ப்’ ‘வ்’ ஆகிய இரண்டும் எதிர்கால வினைக்குரிய இடைநிலைகளாகச் செயல்படுகின்றன. நடப்பான், இருப்பான், செல்வாள், தருவான் எனுஞ் சொற்களைக் கொண்டு இதனை அறியலாம்.
நட-ப்-ப்-ஆன், தரு-வ்-ஆள் எனப் பிரித்தறிந்து எதிர்கால வினை இடைநிலைகளை உணரலாம்.
முக்கிய குறிப்பு: வருக, கொணர்க, செல்க, வருமின், கொணர்மின், செல்மின், எழுமின் ஆகியன எதிர்கால வினைகளாயினும் இவற்றில் இடைநிலைகள் காணப்படுவதில்லை. பகுதி, விகுதி ஆகிய இரண்டுமே இப்பகுபதங்களில் காணப்படுகின்றன. கொணர்-க, வரு-மின் என்பவற்றை நோக்குக. எனினும் இப்பதங்களில் காலங்காட்டும் பொறுப்பை விகுதிகளான ‘க’, ‘மின்’ என்பவை ஏற்றிருப்பது கவனிக்கத்தக்க அம்சமாகும்.
எதிர்மறை இடைநிலைகள்:
“தனது கடமைகளை அவன் செய்யாது காலங்கடத்தினான்.” எனவரும் வாக்கியத்தில் வருகின்ற செய்யாது என்ற பதம் செய்-ஆ-து என வகுக்கப்படுவதனால் ‘ஆ’ எதிர்மறை இடைநிலையாகக் கொள்ளப்படுகிறது.
அதேபோல் வரமாட்டாள், செய்யமாட்டாள் ஆகிய பதங்களில் வருகின்ற மாட்டு(-ஆள்) என்பதும் எதிர்மறை இடைநிலை என்பர் இலக்கணஅறிஞர்.
சாரியை:
பகுபதமொன்றில் பகுதி, விகுதி, இடைநிலை என்பவற்றுக்கு அடுத்தடியாக முக்கியத்துவம் பெறுவது சாரியை ஆகும்.
பண்டைய தமிழ்வழக்கில் ஏறத்தாழ இருபது வகையான சாரியைகள் கையாளப்பட்டிருந்தன என்பர் அறிஞர். எனினும் இன்றைய வழக்கில் அன், அம், அத்து, அற்று, இன் எனக் குறைவான எண்ணிக்கைச் சாரியைகளே வழக்கிலிருக்கின்றன.
சாரியையை இலகுவாக அடையாளங் கண்டுகொள்ளலாம். புளி + பழம் = புளிப்பழம் என்றே இணைந்திருக்க வேண்டும். ஆனால் மரபுரீதியாக புளியம்பழம் என்றே சொல்கிறோம். புளிப்பழம் என்று சொன்னால் அது வேடிக்கையாகி விடும்.
ஆறு + கரை இணைவை ஆற்றுக்கரை என்று சொல்வதில்லை. ஆற்றங்கரை என்றே சொல்கிறோம்.
ஆற்றுக்கரை ஆற்றங்கரை (ஆறு-அம்-கரை ஆ-ற்-று-அம்-கரை) ஆவதற்கும், புளிப்பழம் புளியம்பழம் (புளி-அம்-பழம்) ஆவதற்குமான காரணம் இச்சொற்கள் இணையும்போது ‘அம்’ என்பது இடையிற் புகுவதுதான். இதனைச் சாரியை என அழைப்பர்.
மரமை வெட்டினார்கள் என்று கூறாமல் மரத்தை (மரம்-அத்து-ஐ) வெட்டினார்கள் எனக் கூறுவதன் காரணம் ‘அத்து’ சாரியை இணைவதுதான்.
இதேபோல், குடத்தை உடைத்தாள், பணத்தை எடுத்தார், தனத்தைக் கொடுத்தான், சிரத்தைச் சீவினான், குணத்தால் உயர்ந்தவன் போன்றவற்றில் காணப்படும் குடத்தை, பணத்தை, தனத்தை, சிரத்தை, குணத்தால் என்பவையும் ‘அத்து’ சாரியை பெற்ற சொற்களே.
சில-ஐ, சில-அற்று-ஐ ஆகி சிலவற்றை எனவாவதற்கும், பல-ஐ, பல-அற்று-ஐ ஆகிப் பலவற்றை என உருவாவதற்கும் ‘அற்று’ சாரியை துணை நிற்கிறது.
நடந்தாள், வந்தான் ஆகிய சொற்கள் நடந்தனள், வந்தனள் என்றும் வழங்குமிடத்து ‘அன்’ சாரியை உதவுகிறது. நட-ந்-த்-அன்-அள் என்பவற்றின் இணைவே நடந்தனள் என்ற பதத்தைத் தருகிறது என்பதைத் தெரிந்து கொண்டால் ‘அன்’ சாரியையின் பயன் விளங்கும்.
வீடு-கு வீட்டுக்கு என வருவதுண்டு. அதேவேளை வீடு-இன்-கு என ‘இன்’ சாரியை பெற்று வீட்டிற்கு என இணைவதுமுண்டு. சிறப்பு-ஐ சிறப்பை என அமையும். அதேபோல் சிறப்பு-இன்-ஐ எனவந்து சிறப்பினை எனவும் அமையும். இவை ‘இன்’ சாரியையால் விளையும் மாற்றங்கள். இவ்வாறே, சிறப்புக்குரிய என்பது இன்சாரியை பெற்று சிறப்பிற்குரிய என்றும், கல்வியை என்பது கல்வியினை எனவும் எழுதப்படுவதுண்டு.
சந்தி:
பகுதி, விகுதி, இடைநிலை ஆகிய உறுப்புகள் இணையும்போதும் இரு சொற்கள் இணையும்போதும் தோன்றுகின்ற எழுத்து சந்தி எனப்படும் எனப் பேராசிரியர் எம்.ஏ.நுஃமான் கூறுகிறார்.
ஆறுமுகநாவலர் அவர்களோ, சந்தி என்பது புணரியலிற் சொல்லப்படுவனவாகிய தோன்றல் முதலிய புணர்ச்சி விகாரங்களாம் என்கிறார்.
இகரத்துடன் ஐகாரம் இணையும்போது தோன்றும் யகரமும், (குருவி-ஐ-- குருவியை) உகரத்துடன் ஐகாரம் இணையுமிடத்துத் தோன்றும் வகரமும் (பசு-ஐ---- பசுவை) வல்லினம் வருமொழியின் முதலெழுத்தாகுமிடத்துத் தோன்றும் வல்லின மெய்யும் (பாடி-ச்-செல், கை-ப்-பிடி) சந்திகளே என்கிறார் பேராசிரியர் எம்.ஏ.நுஃமான்.
பண்டைய அறிஞர்களின் கூற்றுப்படி (பிடி-த்-த்-அன்-அன்) பிடித்தனன் எனுஞ்சொல்லில் தகர மெய்களில் இரண்டாவதாக வருகின்ற தகரமெய் சந்தி எனப்படுகிறது. எனவே இவை அனைத்தையும் அறிந்திருப்பது தமிழிலக்கண வளத்துக்குச் சிறப்பாகும்.
விகாரம்:
விகாரம் என்பது சொற்களின் இணைவின்போது நிலைமொழியின் எழுத்துகளில் ஏற்படுகின்ற மாற்றங்கள் எனலாம். இம்மாற்றம் தோன்றல், திரிதல், கெடுதல் என மூவகைப்படும்.
தோன்றல்:
இரு பதங்கள் இணையும்போது இடையில் எழுத்து தோன்றுமாயின் அது தோன்றல்வகை விகாரமாகும்.
கடை-தெரு கடைத்தெரு எனவமையும்போது ‘த்’ தோன்றுகிறது. புரட்சி-பெண் என்பது புரட்சிப்பெண் எனவாகுமிடத்து ‘ப்’ தோன்றுகிறது.
திரிதல்:
மொழிகள் இணையுமிடத்து ஓரெழுத்து வேறோர் எழுத்தாக மாறுமாயின் அது திரிதல்; வகாரம் எனப்படுகிறது.
உதாரணம்: மரம்-கொத்தி புணரும்போது மகரமெய் ஙகரமெய்யாகத் திரிபடைந்து மரங்கொத்தி என்றாதலைக் காண்க. பனங்காய், மனங்கள், தீஞ்சுவை போன்ற சொற்களையும் எடுத்துக் கொள்ளலாம்.
கெடுதல்:
மரம்-வேர் இணையும்போது மகரமெய் அற்றுப்போய்; மரவேர் எனவாதலை உதாரணமாகக் கொள்ளலாம்.
.
பிடித்தனன் என்ற சொல்லில் இரண்டாவதாக வரும் தகர மெய் இறந்த கால இடைநிலை யாகவும் முதலில் வரும் தகர மெய் சந்தியாவும் கொள்ளுதலே பொருத்தமானது.
பதிலளிநீக்குபறந்தனன் என்பதில் வரும் தகர மெய் இடைநிலை. நகர மெய் சந்தி விகாரம் என்பது கவனிக்கத்தக்கது.