வெருகற்பத்து 02 - வேலனுக்கு அரோகரா.....
வேலனுக்கு அரோகரா..
வேலனுக்கு அரோகரா சொல்லுங்கள் -- அவன்வேண்டுகின்ற வரம்தருவான் நம்புங்கள்
கோலமயில் வாகனனைப் பாடுங்கள் -- சேவல்
கொடியுடனே துணைவருவான் பாருங்கள்.
கானமயில் ஏறிக்கந்தன் வந்திடுவான் -- நாங்கள்
காணும்வண்ணம் எங்கள்முன்னே நடந்திடுவான்
பானைவயிற்றுக் கணபதியும் துணைவருவான் -- காட்டுப்
பாதையிலே துயர்வராமற் காத்திடுவான்.
வெருகலாற்றங் கரைதனிலே அமர்ந்திருப்பான் -- முருகன்
வில்லூன்றிக் கந்தனாக வடிவெடுப்பான்
அருள்பொழியச் சந்நிதியைத் தேர்ந்தெடுப்பான் -- அங்கு
அன்னதானக் கந்தனாக மகிழ்ந்திருப்பான்
ஆறுமுகக் கடவுளாக உரு வெடுப்பான் -- எங்கள்
அவ்வைக்காகச் சிறுவனாகித் தமிழ் வளர்ப்பான்
மாறுபடு சூரனையே வதைத் திருப்பான் -- எங்கள்
மாவலியாள் தீரத்திலே கொலு விருப்பான்.
கருத்துகள்
கருத்துரையிடுக