தமிழ் இலக்கணம் அறிவோம்- எழுத்தியல் -பகுதி 02

பகுதி 2


உயிர் எழுத்து

“அ” முதல் “ஓள” வரை உயிரெழுத்துகள் பன்னிரண்டாகும். இவை உயிர் எழுத்துகள் என அழைக்கப்படும் காரணம் என்ன என்பதை நோக்குவோம்.
ஒரு மனிதன் தான் உள்ளிழுத்த மூச்சுக்காற்றை வாயினூடாக வெளிப்படுத்தும்போது எழுகின்ற முதல் ஓசைதான் உயிரோசை. இத்தகைய உயிரோசை வெளிவரும்போது, வாயின் வடிவத்தை மாற்றுவதன் மூலம் கிடைத்த ஓசைகளின் வடிவங்களே பன்னிரண்டாக வகுக்கப்பட்டு உயிர் எழுத்துகள் ஆயின.
இப்பன்னிரண்டு ஒலிப்பு வடிவங்களும் நாவுடனோ, பற்களுடனோ, அண்ணத்துடனோ தொடர்புபடாமல் உதடுகளின் அமைப்புவடிவத்தில் மாற்றம் ஏற்படுத்துவதாலேயே பெறப்படுகின்றன. ஒலி புறப்பட்டு வெளிவரும் வரைக்கும் எவ்விதத் தடைக்கும் உட்படுவதில்லை என்பது கவனத்துக்கு உரியது.
ஓலிப்பின் நீளங்கருதி இவ்வுயிரெழுத்துகள் இரண்டாக வகைப்படுத்தப் படுகின்றன.

அ, இ, உ, எ, ஒ ஆகிய ஐந்தும் குறுகிய கால அளவுக்கே ஒலிக்கப்பட வேண்டுமென்பதால் காலஅளவைக் கருத்திற்கொண்டு “குறில்” என வகைப்படுத்தப் படுகின்றன. குறில் எனில் குறுகிய ஓசையுடையது என்பது கருத்து. இவற்றைக் குற்றெழுத்துகள் எனவும் அழைப்பர். இவ்வைந்து குற்றெழுத்துகளும் ஒருமாத்திரை அளவு நேரமே ஒலிக்கப்பட வேண்டும்.
ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள ஆகிய ஏழு எழுத்துகளும் நெடிய ஓசையுடன் ஒலிக்கப்பட வேண்டியவை ஆகையால் நெடில் எனப் பெயர் பெறுகின்றன. இவற்றை நெட்டெழுத்துகள் எனவும் அழைப்பர். நெட்டெழுத்தின் மாத்திரை இரண்டு ஆகும். இதன்பொருள் குற்றெழுத்து ஒலிக்கப்படும் நேரத்தைப்போல் இருமடங்கு நேரம் ஒலிக்கப்பெறல் வேண்டும் என்பதேயாம்.
எனவே, உயிரெழுத்துகள் பன்னிரண்டு எனவும், அவற்றுள் அ, இ, உ, எ, ஒ ஆகிய ஐந்தும் குற்றெழுத்து எனவும் ஏனைய ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள ஆகிய ஏழும் நெட்டெழுத்து எனவும் அறியப்படுகின்றன.
மேற்சொன்ன பொருளை மனத்திருத்திப் பின்வரும் கருத்தையும் நோக்குவது இலக்கண அறிவு மேம்பட வழிவகுக்கும்.

குற்றெழுத்தின் இருமடங்கு நேரமே நெட்டெழுத்து ஓசை பெறுகிறது. ‘அ’ வைப்போல் 'ஆ’ இருமடங்கும் 'இ’ யைப்போல் ‘ஈ’ இருமடங்கும் ‘உ’ வைப்போல் ‘ஊ’ இருமடங்கும் ‘எ’ யைப்போல் ‘ஏ’ இருமடங்கும் ‘ஒ’ வைப்போல் ‘ஓ’ இருமடங்கும் ஓசை பெறுகின்றன என்பது தெளிவு.
இவ்வாறெனில் ‘ஐ’, ‘ஒள’ ஆகிய எழுத்துகள் எவ்வகைப் படுகின்றன என்பது நோக்கற்பாலது.
தொல்காப்பியர் ‘அ’ ‘இ’ இரண்டும் இணைந்தே ‘ஐ’ உருவாகிறது என்கிறார். அதேபோல் ‘அ’ 'உ' இரண்டின் இணைவே ‘ஒள’ என்பதும் அவர் தெளிவு.
ஆனால் நன்னூலாரோ தொல்காப்பியர் கூறுபவற்றைச் சரியென ஏற்றுக் கொள்வதோடு ‘அ’ ‘ய்’ இரண்டும் சேர்ந்து ‘ஐ’ தோன்றவும் ‘அ’ ‘வ்’ இரண்டும் இணைந்து ‘ஒள’ தோன்றவும் இடமுண்டு என்றும் கூறுகிறார்.
அ, இ என்பவற்றின் இணைவே ஐ என்றும். அ, உ என்பவற்றின் இணைவே ஒள என்றும் நோக்குமிடத்து, ஐகாரத்தில் அகரத்தின் ஒருமாத்திரையும், இகரத்தின் ஒருமாத்திரையும் சேர்ந்து இரண்டு மாத்திரை என்பது சரியாகிறது. அதேபோல் ஒளகாரமும் அகரம் உகரம் என்பவற்றின் ஒவ்வொரு மாத்திரையைப் பெற்று இரண்டு மாத்திரையாகிறது.
எனினும், ஐகாரம் அய் என வருமிடத்தும், ஒளகாரம் அவ் என வருமிடத்தும் அகரத்தின் ஒலிப்பு ஒருமாத்திரையும், ய், வ் ஆகிய மெய்களின் ஒலிப்பு அரை மாத்திரையாகவும் அமைவதால், ஐ, ஒள என்பன ஒன்றரை மாத்திரை ஒலிப்பைப் பெறுகின்றன.
உதாரணமாக, ஒளவை என எழுதுவதை அவ்வை அல்லது அவ்வய் என்றும். ஐயன் என எழுதுவதை அய்யன் என்றும் எழுதுவோமானால் ஒலிப்பு நேரத்தில் வேறுபாடு தோன்றுவதைக் காணலாம். ஓள இரண்டு மாத்திரையும், வை இரண்டு மாத்திரையுமாக நான்கு மாத்திரை நேர ஒலிப்பு, அ 1, வ் ½ , வை 2 என மூன்றரை மாத்திரை நேர ஒலிப்பாகவும், அ 1. வ் 1/2, வ 1. ய் ½ என மூன்று மாத்திரை ஒலிப்பாகவும் மாற்றம் பெறுவதைக் காணலாம்.
இதேபோல், ஐயன் ஐ = 2, ய = 1, ன்= ½ என மூன்றரை மாத்திரைநேர ஒலிப்புப்பெற, அய்யன்,( 1 +1/2 +1 + 1/2 ) மூன்று மாத்திரைநேர ஒலிப்பைப் பெறுகிறது.
எனினும், வைரம், வயிரம் என எழுதப்பட்டாலும், கைலாயம் கயிலாயம் என எழுதப்பட்டாலும் ஒலிப்புநேர அளவு சரியாகவே அமைகிறது. இவ்வாறே அயிராவதம் (ஐராவதம்), வயிராக்கியம் (வைராக்கியம்), போன்ற சொற்களையும் நோக்குக.
இவற்றை மனத்திருத்தி நவீன மொழிநூலார்
அ, இ. உ, எ, ஒ ஆகிய ஐந்தும் குற்றெழுத்துகள் எனவும்,
ஆ, ஈ, ஊ, ஏ, ஒள ஆகிய ஐந்தும் நெட்டெழுத்துகள் எனவும்,
ஐ, ஓள என்பவை கூட்டெழுத்துகள் எனவும் வகைப்படுத்தத் தலைப்படுகின்றனர். (தமிழ்மொழி இலக்கண இயல்புகள். அ. சண்முகதாஸ், பதிப்பு 1977, பக்கம் 81)
எவ்வாறெனினும் ஆரம்பநிலை மாணவர்கள் உயிரெழுத்துகளில் குறில் ஐந்து எனவும், நெடில் ஏழு எனவும் கொள்வதே இலக்கணச் சிறப்பு ஆகும்.

                                                                                                                                 தொடர்ந்து வரும்....

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 4

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 09

தமிழ் இலக்கணம் அறிவோம் எழுத்தியல்- பகுதி 5