தமிழ் இலக்கணம் அறிவோம் - எழுத்தியல்- பகுதி 01
“அன்னைத் தமிழில் மொழிநூல் செய்ய
அன்னை தந்தை துணைவேண் டுதுமே.”
உலகில் வாழ்கின்ற பண்பட்ட மொழிகளுக்கெலாம் இலக்கணங்கள் உள. இலக்கணமின்றி எந்த ஒரு மொழியும் வளர்ச்சி பெறாது. மொழியின் அடிச்சட்டகமே இலக்கணம் எனலாம்.
மிகப்பழைய மொழிகளுள் ஒன்றானதும் இன்றும் இளமைச் சிறப்புடன் விளங்குவதுமான தமிழ்மொழி எமது தாய்மொழியாக வாய்த்தமை நாம்பெற்ற பெரும்பேறாகும். எமது தாய்மொழி அறிவை நாம் சரியாகப் பெற்றுக்கொள்ளத் தவறுவோமானால் அந்த இழப்பு எமக்கேயாகும். தாய்மொழி அறிவைப் பெறாத ஒருமனிதன் உலகில் வேறேந்த அறிவைப் பெற்றிருப்பினும் அது நிறைவானதொன்றன்று.
தாய்மொழி அறிவைப் பெறுதற்கு இலக்கிய, இலக்கணநூல்கள் எமக்குதவுகின்றன. வாசித்தலில் ஆர்வமுள்ள ஒருவரால் தனது மொழியிலுள்ள இலக்கியச் சுவையைப் படிப்படியாகப் பெற்றுக்கொள்ள முடியும். ஏனெனில் இலக்கியங்கள் சுவை தருவன. மனதுக்குகந்த இலக்கியங்களைப் படிக்கவும் அல்லாதவற்றைப் படிக்காமல் விடவும் எவராலும் முடியும்.
நந்தமிழ் மொழியில் ஏராளமான இலக்கியநூல்கள் உளவாதலின் தமிழ்மொழி அறிய விழைவோருக்கு இது சாத்தியமாகிறது.
ஆனால், இலக்கணம் அவ்வாறன்று. மொழியின் கட்டுமானம் எந்த அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பதை விளக்குவதே இலக்கணம் ஆகின்றது.
இலக்கணம் கற்கும் மாணவர்களுக்கு இலக்கணம் ஒரு சுவைதராத் துறையாகத் தென்படலாம். இஃது இலக்கணத்தின் தன்மையன்று: இலக்கணத்தைக் கற்பிப்போரின் தன்மையே. சொல்லும் விதத்திற் சொன்னால் இலக்கணம்கூடச் சுவையாகும். இனிய முறையைக் கையாளின் இலக்கணம் எளிமையான ஒரு துறையாகத் தோன்றும். இதற்கான ஒரேவழி இலக்கணத்தை இலக்கணத்துள் நின்று போதிக்காது மொழியின் நடைமுறையூடாகவோ, இலக்கியங்களுடாகவோ போதிப்பதுதான்.
இலக்கணத்திலிருந்து நடைமுறையோ இலக்கியங்களோ தோன்றுவதில்லை. மாறாக, நடைமுறைகளிலிருந்தும் இலக்கியங்களிலிருந்துமே இலக்கணம் வடித்தெடுக்கப்படுகிறது. உயர்ந்தோர் வழக்குகளும் உலகோர் நடைமுறைகளுமே இலக்கண விதிகளைத் தோற்றுவிக்கின்றன என்பது கண்கூடு.
மேற்சொன்னவற்றை மனத்திருத்திப் படிப்போர் எவரும் தாமே உய்த்து இலக்கண அறிவைப் பெற்றுக் கொள்ளத்தக்க வகையிலேயே இத்தொடர் ஆக்கம் பெறுகிறது. எமது அன்னைத்தமிழ் இலக்கணத்தை இலகுவாகக் கற்க இவ்வழிநூல் துணையிருக்கும் என நம்புகிறேன்.
எழுத்தியல்
பகுதி 1
எழுத்து என்பது ஒலியின் வரி வடிவமாகும். ஆதியில் மனிதன் ஒலிகளை எழுப்பித் தனது கருத்துகளை முன்னால் நிற்பவருக்கு உணர்த்தினான். இக்கருத்துகள் சீர்மை பெறவேண்டி ஒலிக் கூட்டங்களாற் சொற்கள் தோற்றம் பெற்றன. ஆயினும் இவை மனிதனின் உச்சரிப்புடன் மட்டுமே நின்றதால், கணப் பொழுதிலேயே மறைந்துவிடும் இயல்பினதாயின.
இக்குறைபாட்டை நிவர்த்தி செய்ய வேண்டிய தேவை காலப்போக்கில் எழுந்தபோது வார்த்தைகள் ஒலியன்களாகப் பிரிக்கப்பட்டு, அவ்வொலியன்களுக்கு வரிவடிவம் கொடுக்க மனிதன் முனைந்தான். அதுவே எழுத்தானது. சீர்பெற்ற எழுத்துகளால் தனது எண்ணங்களைச் சேமித்துவைத்துப் பிறர் பயன்பெறத்தக்க வகையில் வழங்க முடியும் என்பதை உணர்ந்த மனிதன், அவற்றின் சிறப்புகளைப் பாதுகாத்து அடுத்த தலைமுறையினருக்கு வழங்கத் தலைப்பட்டான்.
இச் சிறப்பியல்புகளைப் பற்றிப் பேசுதலே இலக்கணமாயிற்று. இதனடிப்படையில் எழுத்து இலக்கணம் தொடங்குகிறது.
தமிழ் எழுத்துகளை உயிர் எழுத்து, மெய் எழுத்து, ஆய்த எழுத்து. உயிர்மெய் எழுத்து என நான்கு வகைப்படுத்தி உணர்தல் இலகுவாக அமையும்.
உயிர் எழுத்து என்பது அ, ஆ, இ, ஈ. உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள எனப் பன்னிரண்டு ஆகும்.
மெய் எழுத்து என்பது க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன் எனப் பதினெட்டு ஆகும்.
ஆய்த எழுத்து என்பது மேற்சொல்லப்பட்ட இரண்டின் வகையையும் சாராது மூன்று புள்ளி ( ஃ ) வடிவிலமைந்த எழுத்து ஆகும்.
உயிர்மெய் எழுத்து என்பது உயிர் எழுத்து ஒன்று மெய் எழுத்து ஒன்றில் ஏறி அதனை இயங்கச் செய்வதால் உண்டாகும் எழுத்து ஆகும்.
க்+அ = க, க்+ஆ= கா, க்+இ= கி எனத் தொடங்கிப் பதினெட்டு மெய்களின்மீதும் பன்னிரண்டு உயிரெழுத்துகளும் ஏறி வருவதால் 18x12 = 216 உயிர்மெய் எழுத்துகள் தோன்றுகின்றன.
எனவே இதன்படி,
உயிர் எழுத்துகள் 12
மெய் எழுத்துகள் 18
ஆய்த எழுத்து 1
உயிர்மெய் எழுத்து 216 எனத் தமிழ் எழுத்துகள் 247 ஆகின்றன. இது தமிழ் நெடுங்கணக்கு எனவும் அழைக்கப்படுகிறது.
மாத்திரை:
மாத்திரை என்பது அளவு. எழுத்தை எமது விருப்பத்துக்கு ஒலிக்கவிட்டால் ஒலியின் இயல்பு சிதைந்துவிட வாய்ப்புண்டு.
உச்சரிப்பின் காலஅளவு அதிகப்படவோ குறைந்து போகவோ இடமுண்டு. அவ்வாறு நேரின் எழுத்தின் நோக்கமும் கெட்டு மொழியும் திரிபடைந்து விடும். இந்நிலையைத் தவிர்ப்பதற்காக எமது முன்னோர் ஓர் எழுத்தை உச்சரிப்பதாயின் அதன் ஒலி எவ்வளவு நேர நீளங்கொண்டதாக அமைந்திருக்க வேண்டும் எனத் தீர்மானித்தார்கள். இந்தக் கால அளவையையே நாங்கள் மாத்திரை என்கிறோம்.
மாத்திரை என்ற பதம் குறிக்கும் காலஅளவு ஒரு கண்ணிமைப் பொழுது அல்லது கைந்நொடிப் பொழுது என்பர் இலக்கண அறிஞர். இதற்கமைய உயிர் எழுத்துகளில் அ. இ, உ. எ. ஒ ஆகிய ஐந்து எழுத்துகளின் மாத்திரை ஒன்று ஆகவும் ஆ, ஈ. ஊ, ஏ, ஐ, ஓ, ஒள ஆகிய ஏழு எழுத்துகளின் மாத்திரை இரண்டாகவும் அமைகிறது. இதிலிருந்து, கண்ணைச் சட்டென இமைக்கும் சிறு பொழுதிலோ, விரல்களை நொடிப்பதன் மூலம் உருவாக்கப்படும் கைந்நொடிப் பொழுதிலோ உயிரெழுத்துகளில் ஐந்தை ஒலித்துவிட வேண்டும் என்பதையும், அதன் இருமடங்கு நேரத்தில் ஏனைய ஏழு உயிரெழுத்துகளை ஒலிக்க வேண்டும் என்பதையும் புரிந்து கொள்ளமுடிகிறது.
உயிரெழுத்துகளின் அட்டவணையின் இறுதியில் தனித்து வருகின்ற ஆய்தஎழுத்தின் ஒலிப்புக்காலம் அரை மாத்திரையாகும். அதேபோல் மெய்யெழுத்துகளின் ஓசைக்காலமும் அரை மாத்திரையாகும். இதன் பொருள் ஆய்தஎழுத்து, மெய்யெழுத்து என்பவற்றை கைந்நொடிக்கும் அல்லது கண்ணிமைக்கும் பொழுதின் அரைவாசி நேரத்தில் ஒலித்துவிட வேண்டும் என்பதாகும். எனினும் அரைமாத்திரைக் காலத்தில் ஆய்தஎழுத்தையோ மெய்யெழுத்தையோ எவ்வாறு ஒலித்துவிட முடியுமென இலக்கண மாணாக்கர் வினவுவராயின் அக்கேள்வி மிகச் சரியானதொன்றாகவே தோன்றும்.
ஏனெனில் இவ்வெழுத்துகளை உச்சரிக்கும்போது நடைமுறையில் ஒன்றரை மாத்திரைப் பொழுதாகி விடுகின்றது என்பதுதான் உண்மை.
எடுத்துக்காட்டாக, ‘அ’ என்பதை ஒரு மாத்திரைப் பொழுதிலும், 'ஆ’ என்பதை இரண்டு மாத்திரைப் பொழுதிலும் ஒலித்துவிட முடியும். அதிற் சிரமமேதுமில்லை. ஆய்த எழுத்தையோ, மெய்யெழுத்தையோ அவ்வாறு ஒலிக்க முடிவதில்லை. ஆய்தஎழுத்தை ‘அகேனம்’ என்றோ, ‘அஃகன்னா’ என்றோதான் கூறுகிறோம். இதன் ஒலியளவை மாத்திரம் கருத்திற்கொண்டு உச்சரித்தால் அஃ என்றாகும்.
எனவே இவ்விடத்தும் 'அ’ கரத்துக்குரிய ஒரு மாத்திரையையும். ஆய்தத்துக்குரிய அரை மாத்திரையையும் சேர்த்தே ஒலிக்கிறோம். இதன்படி ஃ க்கு மாத்திரை ஒன்றரை ஆகிவிடுகிறது.
இதேபோல் ‘க்’ என்ற மெய்யெழுத்தைக் கிட்டத்தட்ட ‘இக்’ என்றுதான் உச்சரிக்கிறோம். அவ்வாறே ஏனைய மெய்யெழுத்துகளும் ஒலிக்கப்படுகின்றன.
இந்நிலையில் மெய்யெழுத்தை ஒலிக்கும்போது முன்னால் வருகின்ற 'இ’ கரத்தின் மாத்திரை ஒன்றாகவும், மெய்யெழுத்தின் மாத்திரை அரையாகவும் இருப்பதால் ஒலிப்புநேரம் ஒன்றரை மாத்திரையாகி விடுகிறது.
இதன்படி, இலக்கண மாணாக்கரின் ஐயத்துக்கும் இலக்கண நூலோரின் ஒலிப்புக்கால அளவுக்குமிடையில் முரண்பாடு காணப்படுவதுபோல் தோன்றுகிறது. இது வெறுந் தோற்றமேயன்றி உண்மையன்று. உயிர் எழுத்துகளும், உயிர்மெய் எழுத்துகளும் தனித்துநின்று தமது ஒலியை வெளிப்படுத்த வல்லனவாயிருக்கின்றன.
ஆனால் ஆய்தஎழுத்தோ மெய்யெழுத்துகளோ அவ்வாறாகா. இவை சொற்கள் உருவாகும்போதுதான் தமது ஒலியை வெளிப்படுத்துகின்றன. ஆய்த எழுத்தானது தனக்கு முன்னால் ஒரு குறிலையும் தனக்கடுத்து ஒரு வல்லின மெய்யையும் ஏற்றுத்தான் இயக்கம் பெறுகிறது.
உதாரணமாக அஃது. இஃது, எஃகு அஃகம் என்பவற்றை நோக்கலாம். இங்கு ‘அ’ கரம் ஒருமாத்திரை நேரத்திலும், ஃ எழுத்து அரைமாத்திரை நேரத்திலும் ஒலிக்கப் பெறுகின்றன. எனவே அகேனத்தின் உச்சரிப்பு அரைமாத்திரை என்பது உறுதியாகிறது.
அதேபோல், மெய்எழுத்துகள் எப்போதும் ஒரு சொல்லின் இடையிலோ இறுதியிலோதான் அமைகின்றன. இதனால் அருகிலுள்ள எழுத்துகளுக்கு இசைவாகவே அவை செயற்படுவதால் அரைமாத்திரை ஒலிப்பு அவற்றுக்குப் பொருந்திவருகின்றன. உதாரணமாக, அக்கம், தமிழ், அம்மா என்பவற்றைக் கொள்ளலாம்.
எனவே, அரைமாத்திரை அளவு ஒலிப்புப் பெறும் எழுத்துகள் (ஆய்தமும் மெய்யும்) மொழிக்கு முதலெழுத்தாக வராமல் இடையிலோ கடையிலோதான் வருவதால் அவை தனித்துநின்று ஒலி தரவேண்டிய தேவை குறைவாகவே அமைகிறது.
தொடர்ந்து வரும்…..
கருத்துகள்
கருத்துரையிடுக