தமிழ் இலக்கணம் அறிவோம் - எழுத்தியல் - பகுதி 04
பகுதி 04
உயிர் மெய் எழுத்துகள்.
உயிரும் மெய்யும் இணைவதனால் உயிர்மெய் எழுத்து தோன்றுகிறது. மெய் ஒருபோதும் தனித்து இயங்காது. அதன்மேல் உயிர் ஏறினால் மட்டுமே இயக்கம்பெறும். இதனடிப்படையிலேயே உயிர்மெய் எழுத்துகள் தோற்றம் பெறுகின்றன.
‘அ’ என்ற உயிரெழுத்தும். ‘க்’ என்ற மெய்யெழுத்தும் சேரமுனைந்தால் ‘அக்’ என்ற ஒசைதான் பிறக்கிறது. இங்கே உயிரெழுத்து அசையாதிருக்க மெய்யெழுத்து வந்து இணைய முயல்கிறது. ஆயினும் அவை தத்தமது ஓசையை இழக்காமல் வெவ்வேறாகவே ஓசைதர முயல்வதால் ‘அக்’ என்று ஒலிக்க வேண்டியதாகின்றது.
ஆனால், ‘க்’ என்ற மெய் அசையாதிருக்க, அதனுடன் ‘அ’ என்ற உயிர்வந்து இணையும்போது க் + அஶ க என்ற ஓசை கிடைக்கிறது. எப்போதும் உடலானது உயிர் வந்து தங்கிச் செல்லும் ஊடகமாகவே உலகில் அமைந்திருக்கிறது என்ற உண்மையின் அடிப்படையிற்றான் இந்த இணைப்பும் இடம்பெறுகிறது என்பதைக் கருத்திற் கொள்க.
இதன்படி க் + அ = க
க் + ஆ = கா
க் + இ = கி
க் + ஈ = கீ
க் + உ = கு
க் + ஊ = கூ
க் + எ = கெ
க் + ஏ = கே
க் + ஐ = கை
க் + ஒ = கொ
க் + ஓ = கோ
க் + ஒள = கௌ
ஆகிய பன்னிரண்டு உயிர்மெய் தோன்றுமாப்போல் பதினெட்டு மெய்யெழுத்துகளுடனும் பன்னிரண்டு உயிர்எழுத்துகள் இணைவதனால் 18 x 12 = 216 மெய்யெழுத்துகள் உருவாகின்றன.
தமிழை எழுதும்போது எழுதுமுறையை இலகுபடுத்துவதற்காக உயிர்மெய் எழுத்துகள் தோற்றம் பெற்றன எனக் கொள்வதிற் தவறில்லை. உதாரணமாக, அம்மா என எழுதும்போது மேல்வாரியாக அ, ம், மா ஆகிய மூன்றெழுத்துகள் அடங்குவதுபோற் தோற்றமளித்தாலும், உண்மையில்
அ ம் ம் ஆ என்ற எழுத்துகளே அடங்கியுள்ளன என்பதை மறவற்க. இவ்வாறே கணபதி என்ற நான்கெழுத்து மொழியில் க் + அ, ண் + அ, ப் + அ, த + இ என எட்டெழுத்துகள் இருப்பதை நோக்குக.
உயிர்மெய் எழுத்துத் தோன்றும்போது அதன் ஒலிப்புக்கால எல்லையில் மெய்யெழுத்தின் மாத்திரை கணக்கிற் கொள்ளப்படுவதில்லை. மாறாக அம்மெய்மேல் ஏறும் உயிரின் மாத்திரையே கருத்திற் கொள்ளப்படுகிறது. இஃது உடல் இயக்கமற்ற ஓரூடகம் மட்டுமே என்ற அடிப்படையில் எழுந்ததாக இருக்கலாம்.
இதன்படி, க, கி, கு, கெ, கொ ஆகிய ஐந்து உயிர்மெய்களும் அவ்வவற்றின் உயிர்ஓசையின் இயல்புக்கேற்ப ஒருமாத்திரை நேர அளவுக்கே ஒலிப்புப் பெறுகின்றன. இதேபோல் கா, கீ, கூ, கே, கை, கோ, கௌ ஆகிய ஏழு உயிர்மெய்களும் இரண்டு மாத்திரை அளவு ஒலிப்பைப் பெறுகின்றன. எல்லா உயிர்மெய்களுக்கும் இவ்விதி பொருந்தும். ஆகவே, உயிர்மெய்க் குறில்கள் ஒருமாத்திரை அளவு ஓசையையும் உயிர்மெய் நெடில்கள் இரண்டு மாத்திரை அளவு ஓசையையும் பெறுகின்றன என்பது முடிபு.
ஆய்த எழுத்து
இஃது மூன்று புள்ளி வடிவிலான தனி எழுத்தாகும். இதன் மாத்திரை அரை. இவ்வெழுத்தின் பயன்பாடு கருதி, ஆய்தம் என்ற பெயர் சூட்டப்பட்டிருக்கலாமோ எனத் தோன்றுகிறது. ஆய்த எழுத்தானது குற்றெழுத்துக்கும் வல்லின உயிர்மெய்க்கும் இடையிற்றான் வரும் என்பதை நினைவிற் கொள்ளல் நன்று. உதாரணமாக, அஃது. இஃது. எஃகு, பஃறுளியாறு ஆகிய சொற்களை நோக்கலாம். வல்லெழுத்தின் வலிய ஓசையை சற்றே மென்மைப்படுத்தும் தன்மை 'ஃ' இல் காணப்படுவதை உசசரிக்கும்போது தெரிந்துகொள்ள முடிகிறது.
சில எழுத்துகள் தங்கள் சிறப்பான பணிகருதி சிறப்புப் பெயர்கள் பெறுகின்றன. சுட்டெழுத்து, வினாஎழுத்து, போலியெழுத்து என்பவற்றை இவ்வாறு அடையாளப்படுத்தலாம். அவற்றை விரிவாகப் பார்ப்போம்.
சுட்டெழுத்து.
ஒரு பொருளை அல்லது இடத்தைச் சுட்டுவதற்காகப் பயன்படுத்தப்படுகின்ற எழுத்துகள் சுட்டுகின்ற எழுத்துகள் ஆகின்றன. மொழிநூலார் இதனைச் சுட்டெழுத்து என்பர்.
தமிழில் அ, இ, உ ஆகிய மூன்று உயிர்எழுத்துகளும் சுட்டெழுத்துகள் எனப்படுகின்றன. இச் சுட்டெழுத்துகளின் உதவியின்றி தமிழ்மொழியில் எதனையும் சுட்டிக்காட்டிவிட முடியாது என்பதை நினைவிற் கொள்ள வேண்டும். சுட்டுப்பொருளில் இவ்வெழுத்துகள் பயன்படுகின்ற தன்மையைக் கருதி அகச்சுட்டு, புறச்சுட்டு என இருவகைப்படுகின்றன.
அகச்சுட்டு
அ, இ, உ ஆகிய மூன்று எழுத்துகளில் எவையேனும் ஒருமொழிக்குள்ளேயே இரண்டறக் கலந்து தனது பணியைச் செய்யுமாயின் அஃது அகச்சுட்டு எனப்படும். இச்சொல்லிலிருந்து சுட்டெழுத்தைப் பிரித்துவிட்டால் சொல் சிதைவடைந்து பொருளற்றுப் போய்விடும்.
அது, இது, உது, அவை, இவை. உவை, அவன், இவன். உவன், அவள், இவள், உவள் அங்கே, இங்கே, உங்கே என்பவற்றில் வருகின்ற அ, இ, உ ஆகிய சுட்டெழுத்துகள் அகச்சுட்டு வகைக்குள் அடங்குகின்றன. இச் சொற்களிலிருந்து அ, இ, உ என்பவற்றை நீக்கிவிட்டால் சொற்கள் பொருளிழந்து போவதைக் காணலாம்.
புறச்சுட்டு
சுட்டெழுத்துகள் சொல்லின் வெளியேநின்று தமது பணியைச் செய்யும்போது அவை புறச்சுட்டுகள் என அழைக்கப்படுகின்றன. புறச்சுட்டுகளைச் சொற்களிலிருந்து பிரித்துவிட நேர்ந்தாலும் அச்சொற்கள் தமது தன்மையை இழப்பதில்லை. மாறாகச் சுட்டுந்தன்மையை மாத்திரமே இழக்கிறது.
அந்தமாடு, இந்தமனிதன், உந்தப்பெண், அப்பையன், இச்சட்டி, உவ்வாடு போன்ற சொற்களிலிருந்து புறச்சுட்டுகளைப் பிரித்தால் அவை மாடு, மனிதன், பெண். பையன், சட்டி, ஆடு எனத் தம்நிலை இழக்காமற் பொருள் தருவதைக் காணலாம்.
தற்காலத்தில் உகரச்சுட்டின் பயன்பாடு குறைந்து வருகிறது. இப்பொருளுக்கும் அப்பொருளுக்கும் இடையில் அமையும் பொருளைச் சுட்டவே உகரம் பயன்படுகிறது. அவ்வாறு சுட்டுமிடத்து அஃது உப்பொருள் எனவமையும். வடமாகாண மக்களிடையே உகரச் சுட்டுச் சொற்களான உவன், உவள், உது, உங்கே என்பன் இன்றும் பெருவழக்கிலே உள்ளன. தமிழுக்குச் சிறப்பைத்தரும் உகரச்சுட்டைப் பயன்படுத்துதல் நலந்தரும் விடயமாகும்.
வினாஎழுத்து.
ஒரு வினாவை உருவாக்குவதற்குப் பயன்படும் எழுத்துகள் வினாவெழுத்துகள் எனப்படுகின்றன. இவற்றுள் சிலஎழுத்துகள் ஒரு சொல்லை உருவாக்கி வினாவைத் தருகின்றன. சிலஎழுத்துகள் தமது அசையால் (ஓசைப்பலத்தால்) வினாவைத் தருகின்றன. வினாவுக்கான சொல்லை உருவாக்கும்போது அவை சொல்லின் முதலிலும், அசையை ஏற்படுத்தி வினாவை உருவாக்கம்போது அவை சொல்லினிறுதியிலும் வருகின்றன என்பதைக் கருத்திற்கொளல் நலம்.
எ, யா, ஆ, ஓ, ஏ ஆகிய ஐந்தெழுத்துகளும் வினாவெழுத்துகள் ஆகின்றன. இவற்றுள் எ, யா ஆகிய எழுத்துகள் இரண்டும் எப்போதும் மொழியின் தொடக்கத்திலேயே வருமியல்புடையன.
உதாரணம்: எந்த மனிதன்? எது சிறந்தது? எங்கு கூடினர்? எவரிடம் கூறினாய்?
யார் வந்தனன்? யாவர் சிரித்தனர்? யாது மொழிந்தனை? யாரிடம் உரைப்பாய்?
ஆ, ஓ ஆகிய எழுத்துகள் இரண்டும் மொழியின் இறுதியில் வந்தே வினாவைத் தோற்றுவிக்கின்றன.
உதாரணம்: வந்து விட்டாயா? ( விட்டாய் + ஆ )
சென்றனையோ ( சென்றனை + ஓ )
அவனா இவனா? (அவன் ஆ + இவன் + ஆ)
அதுவோ இதுவோ? (அது + ஓ இது + ஓ)
ஏ எனுமெழுத்து சொல்லின் முதற்பகுதியிலோ கடைப்பகுதியிலோ வந்து வினாவைத் தோற்றுவிக்கும்.
உதாரணம் : ஏது? ஏன்? (மொழிக்கு முதலில் வருகிறது.)
வந்தாளே ? ... அவனே? (மொழிக்கு இறுதியில் வருகிறது.)
கருத்துகள்
கருத்துரையிடுக