தமிழ் இலக்கணம் அறிவோம் . எழுத்தியல் பகுதி - 03
பகுதி 3
மெய் எழுத்துகள்.
க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன் ஆகிய பதினெட்டும் மெய்யெழுத்துகள் எனப்படும்.
மெய் என்பது உடல். உயிர் இருந்தாலன்றி உடல் அசைவதில்லை. இதற்கேற்ப மெய்யெழுத்தும் தன்மேல் உயிரெழுத்து ஏறினாலன்றி அசைவு பெறுவதில்லை. சொற்களின் இடையிலோ கடையிலோ இவை வரும்போது, அருகிருக்கும் உயிரோசையைத் தழுவி அரைமாத்திரை நேர ஒலிப்பைப் பெறுகிறது. தனித்து இவ்வெழுத்துகள் ஓசை பெற முயலும்போது ‘இக்’ என்றோ, ‘இங்’ என்றோ இகர உயிரை முன்னிறுத்தியே செயற்பட வேண்டியுள்ளன.
எவ்வாறெனினும் இவற்றின் ஓசைகருதி மூன்று வகைப்படுத்தப்படுகின்றன. வல்லோசையை உடைய எழுத்துகள் வல்லினம் என்றும், மெல்லோசையை உடைய எழுத்துகள் மெல்லினம் என்றும், இடைப்பட்ட நிலைபெறுபவை இடையினம் என்றும் பெயர் பெறுகின்றன.
க, ச, ட, த, ப, ற எனவாறும் வல்லினம் எனவும்,
ங, ஞ, ண, ந. ம, ன எனவாறும் மெல்லினம் எனவும்,
ய, ர, ல, வ, ழ, ள எனவாறும் இடையினம் எனவும் மொழி நூலோரால் வகுக்கப்பட்டிருக்கின்றன.
அத்துடன் க – ங
ச – ஞ
ட – ண
த – ந
ப – ம
ற – ன என்பவை இன எழுத்துகளாகவும் அடையாளப் படுத்தப்பட்டிருக்கின்றன.
அதாவது ஒவ்வொரு வல்லின மெய்யும் தனக்கு அடுத்து வருகின்ற மெல்லின மெய்க்குத் துணை நிற்கிறது எனத் துணியலாம். இடையின எழுத்துகளுக்கு இன எழுத்துகள் கிடையா என்பது கருத்திற் கொள்ளப்படவேண்டியது.
இவை இன எழுத்துகள் என ஏன் வகுக்கப்பட்டிருக்கின்றன என்பதற்கான காரணத்தை நோக்குவோம்.
உதாரணமாக, ‘ங்’ என்ற மெய்யை எடுத்துக் கொண்டால், இதற்கு அடுத்துவரும் எழுத்து ‘க’கர வரிசையில் ஒன்றாக இருக்கவேண்டும். அல்லது ‘ங’ கர வரிசை சார்ந்ததாக இருக்கவேண்டும். வேறு எழுத்துகள் வரா.
இங்ஙனம் அங்ஙனம், எங்ஙனம் ஆகிய சொற்களை நோக்கின் 'ங்’ எழுத்தையடுத்து ‘ங’ என்ற எழுத்தே வருகிறது. அதேபோல் இங்கே, அங்கு, சங்கு, தங்கம், சங்கீதம், பங்கயம் ஆகிய சொற்களை நோக்கின் ‘ங்’ மெய்யையடுத்து ‘க’கரம் மட்டுமே வருகிறது. எந்தத் தமிழ்ச்சொல்லை நோக்கினும் இவ்வொழுங்கு தவறுவதேயில்லை.
இதேபோல் 'ஞ்' மஞ்ஞை ‘ஞ’கரம் வந்தது. பஞ்சு, நெஞ்சு, வெஞ்சினம், பஞ்சம், தஞ்சம் என இனவெழுத்தான ‘ச’கரமே வருகிறது.
'ண்' கண்ணன், கண்ணியம் ‘ண’கரம் அடுத்து வருகிறது. கண்டான், தொண்டு பண்டு, விண்டாள், மண்டு என இனவெழுத்தான ‘ட’கரமே வருகிறது.
புறநடையாக, சிறுபான்மை ‘ம’கரமும் வருவதுண்டு. உதாரணமாக….பெண்மை, திண்மை.
கண்வில்லை, மண்பொம்மை, விண்கல் போன்ற சொற்கள் காணப்படுகின்றபோதிலும் அவை தனிச் சொற்களாகவன்றி புணர்பதங்களாக அமைகின்றன என்பது கவனிக்கத்தக்கது.
'ந்' அந்நியன், சந்நிதி ‘ந’ கரம் அடுத்து வருகிறது. சாந்து, கந்தை, விந்தியம், சந்திரன் என இனவெழுத்தான ‘த’ கரமே வருகிறது.
'ம்' கம்மல், பொம்மை. இம்மி, அம்மி ‘ம’ கரம் வருகிறது. தம்பி, தும்பு, கம்பன் என்பவற்றில் ‘ப’ கரமே வருகிறது.
'ன்' அன்னம், சின்னம், கன்னி ஆகிய சொற்களில் ‘ன’ கரமே வருகிறது. என்றான். குன்று. பன்றி, நின்ற ஆகியவற்றில் ‘ற’கரமே அடுத்து வருகிறது.
எனினும், நன்மை, அன்பு, நான்கு போன்ற பதங்களில் ‘ப’கரம், ‘ம’கரம், ‘க’கரம் போன்றவையும் அடுத்து வரும் என்பதையும் நினைவிருத்தல் நலம்.
எவ்வாறெனினும், இன எழுத்துகள் என நோக்குமிடத்து ங், ஞ், ண், ந், ம், ன் ஆகியவை ஒரு சொல்லில் வருமிடத்து, இவ்வெழுத்துகளை அடுத்துவரும் இவ்வெழுத்துகள் சார்ந்த உயிர்மெய்யாகவோ. இவற்றின் இனவெழுத்துகளின் உயிர்மெய் வடிவங்களாகவோ அமையும் என்பதே பெருவழக்கு.
முக்கிய குறிப்பு என்னவென்றால், ‘ண’கரத்தை டண்ணகரம் என்றும், ‘ந’கரத்தைத் தந்நகரம் என்றும், ‘ன’கரத்தை றன்னகரம் என அடையாளப்படுத்தும் வழக்கமும் இருக்கிறது.
இதனடிப்படையிற்றான் ‘ந்’ எழுத்தை ‘இந்த்தன்னா’ என அழைக்கிறார்கள். எவ்வாறு உச்சரிப்பினும், ‘ந’கர மெய்யில் ‘த’கர மெய் ஓசை ஒருபோதும் வரமாட்டாது. அது ‘ந’கர மெய்யின் அடையாளப்படுத்தல் மாத்திரமே.
இதைப் புரிந்து கொள்ளாத பலர், காந்தன் என்ற பெயரைச் சுருக்கி ‘காந்த்’ என எழுதுவதாக எண்ணிக்கொண்டு பிள்ளைகளுக்கு ‘காந்’ எனப் பெயர் சூட்டிவிடுகிறார்கள்.
உதாரணமாக, லட்சுமிகாந், சூரியகாந், விஜயகாந் என்றெல்லாம் தவறாகப் பெயரிட்டு விடுகிறார்கள்.
இப்பெயர்களின் இறுதிப்பகுதி கான் என ‘ந’கர ஓசையுடன் நிறைவு பெறுமேயன்றி ‘த’கர ஓசையுடனன்று என்பதை மனதிற்கொளல் நன்று.
சில மெய்யெழுத்துகள் மொழியின் இடையில் அடுத்தடுத்து வருவதுண்டு. மகிழ்ச்சி. உயிர்ப்பு, வீழ்ச்சி, மெய்ம்மை, மெய்ஞ்ஞானம், பொய்ப்பிப்பு போன்றவற்றை உதாரணமாகக் கொள்ளலாம்.
இச்சொற்களில் இரண்டாவதாக வருகின்ற மெய்யெழுத்தின் இன உயிர்மெய்யே மூன்றாவதாக வருவது நோக்கத்தக்கது. மகிழ்ச்சி, மெய்ப்பாடு, பொய்ப்பித்தல் என்பவற்றில் ‘ச்’ ஐ அடுத்து ‘சி’ யும், ‘ப்’ பையடுத்து ‘பா’வும், அடுத்த சொல்லில் ‘பி’யும் வருவது நோக்கத்தக்கது.
மகிழ்ச்சி என்ற சொல்லில் ‘ழ்’, ‘ச்’, ‘ச்’, ‘இ’ ஆகிய எழுத்துகள் வருவதன்மூலம் மூன்று மெய்யெழுத்துகள் வருகின்றன என மொழிநூலார் கூறுவதோடு, மூன்றாவது மெய் உயிர் ஏறிநிற்கும் எனவும் பகர்வர். ஆயினும் விளங்கும் ஆற்றல் கருதி இந்நூலில் இரண்டு மெய்களும், இரண்டாவதாக வரும் மெய்யையடுத்து அதன் இனமான உயிர்மெய் அமையும் எனவும் கூறப்படுகிறது.
எனினும் பஞ்ஞ்சு, சங்ங்கு, போன்ம் எனவும் வருவதுண்டு. இவைபற்றிய விளக்கம் பிறிதோரிடத்திற் தரப்படும்.
உயிர்எழுத்துகளில் இனஎழுத்துகள்.
மெய் எழுத்துகளில் இனஎழுத்துகள் இருப்பதைப் போலவே உயிரெழுத்துகளிலும் இனவெழுத்துகள் உள.
அ – ஆ, இ - ஈ, உ – ஊ, எ – ஏ, ஐ - இ, ஒ – ஓ, ஒள – உ ஆகியவை இன எழுத்துகளாம். பொதுவாக ஒலிஇயைபுகளை ஏற்படுத்துவதன்மூலம் இன எழுத்துகள் ஒன்றுக்கொன்று உதவுகின்றன. இந்நடைமுறை பெரும்பாலும் கவிதைகளிற்றான் கைக்கொள்ளப்படுகின்றன.
உதாரணம்:
அன்னை ஓர் ஆலயம் - இங்கு அ, ஆ
சொற்றுணை வேதியன் சோதி வானவன் - இங்கு ஒ, ஓ
வயலும் வாழ்வும் - இங்கு அ, ஆ
எனக் கவிதை நயங்களை உற்றுப்பார்ப்போருக்கு இவை புலப்படும்.
கருத்துகள்
கருத்துரையிடுக