இந்து சமய விளக்கம் - 2


அவ்வாறாயின் பல தெய்வ வழிபாடுகள் சரியாகுமா?
பல தெய்வ வழிபாடுகள் நிச்சயமாகச் சரியானவையே. ஒரு மனிதனை எடுத்துக்கொண்டால் அவன் பெற்றோரால் மகன் என அழைக்கப்படுகிறான். நண்பர்களால் பெயர்சொல்லி விளிக்கப்படுகிறான்.
அலுவலகத்தில் உத்தியோகப் பெயர்கூறி அழைக்கப்படுகிறான். வீட்டிலோ மனைவிக்குக் கணவனாகிறான். பிள்ளைகளுக்கோ தந்தையாகிறான்.
இவ்வாறு பல பெயர்களால் அழைக்கப்படுகின்ற போதிலும் அவன் ஒருவனே என்பது வெளிப்படை. எனினும் அவன் அழைக்கப்படுகின்ற பெயரைப் பொறுத்து, அவனது கடமை, தொடர்பு கொள்ளும் முறைமை, பழகும் விதம் என்பன் வேறுபடுகின்றன.
உத்தியோகத்தராகச் செய்கின்ற கடமைக்கும், தந்தையாகச் செய்கின்ற கடமைக்கும் வேறுபாடு உண்டு. கடமை மாத்திரமல்ல, உடை, நடைமுறை, உரையாடும் விதம் என்பவற்றிற்கூட வேறுபாடுகள் காணப்படுகின்றன. அவ்வாறே கணவன், நண்பன், மகன் என்றவகையிலும், அவனின் கடமை, உரிமை தொடர்பாடும் விதம் என்பன வேறுபடுகின்றன.
இதுபோலவே, தெய்வம் ஒன்றெனினும் மக்களின் நியாயமான விருப்பங்கள், தேவைகளுக்கேற்ப, அத்தெய்வம், பல உருவங்களில் செயல்படுவதாகக் கொள்ளப்படும் நம்பிக்கையின் விளைவே பலதெய்வ வழிபாடுகள் நிகழக் காரணமாகின்றது. எப்பெயரிட்டு அழைத்தாலும். எத்தோற்றத்தைக் மனக்கண் முன்னே நிறுத்தி வழிபட்டாலும். மனம் தூய்மையானால் அது மகத்துவம் நிறைந்ததே.
அதேபோல், தான் வழிபடும் தெய்வமும், அதுசார்ந்த நடைமுறைகளும் மட்டுமே மிகச் சரியானவை என்றும், ஏனையவை பிழையானவை என்றும் ஒருவன் மனத்தளவிலேனும்; நிந்திப்பானேயாகில் அது தெய்வ நிந்தனையின்பாற்படும் என்பதையும் மறத்தலாகாது.


பலதெய்வ வழிபாடு என்ற போர்வையில் கல், மணல், மரம் என்பவற்றைக்கூடச் சிலர் வணங்குகிறார்களே, இது பிழையாகாதா?
இந்துசமயத்தில் இறைவழிபாடுதான் உச்ச முக்கியத்துவம் பெறுகிறது. வழிபாட்டு முறைகளும், அதற்காகப் பயன்படுத்தப்படும் ஊடகங்களான பொருட்கள். தோற்றங்கள் என்பவையும் மனத்தை ஒருமுகப்படுத்திச் செய்யப்படும் வழிபாட்டின்முன் இரண்டாம்பட்சமே. இதனை உணர்ந்து கொண்ட ஒருவர், வழிபாடு எதற்கூடாக, எந்த முறைகளின்கீழ் நடந்தாலும் அது இறைவனையே சேர்கிறது என்பதில் சந்தேகம் கொள்ளமாட்டார்.
முற்காலத்தில் இன்றுமனிதன் அனுபவிக்கும் வசதிகள் கிடையா. இருப்பவற்றைக் கொண்டும் கிடைப்பவற்றைக் கொண்டுமே திருப்தியடைய வேண்டிய நிலை இருந்தது. இதனடிப்படையிலேயே கல்லைப் பெறக்கூடிய மனிதன், தெய்வ வழிபாட்டுக்காக ஒரு கல்லைத் தேர்ந்தெடுத்துத் தானும் வணங்கி, ஏனையோரையும் வணங்கும்படி தூண்டினான்.
காட்டில் திரிந்தவன் மரம் ஒன்றைத் தேர்ந்தெடுத்து வழிபடத் தலைப்பட்டான்.
ஆற்றங்கரையில் நின்ற ஒருவன் ஆற்றைப் புனிதமாகக் கருதி அதன் கரையிலுள்ள மணலில் உருவம் செய்து வழிபட்டான்.
இடையன் ஒருவன் பசுவின் சாணத்தில் உருவம் செய்து அதில் அறுகம்புல்லை வைத்து வழிபட்டான். இச் செயற்பாடுகளின் நோக்கம் இறைவனை வழிபடுவதற்கான தூண்டுதலை ஏற்படுத்துவதாக இருந்ததேயொழிய, அப்பொருட்களே இறைவன் என்ற கருத்தை வலியுறுத்துவதாக அமையவில்லை.


இத்தகைய தூண்டுதல்கள் ஏன் ஏற்படுத்தப்பட வேண்டும்? இவை இல்லாமல் இறைவனை வழிபட முடியாதா?
எத்தகைய தூண்டுதல்களும் இல்லாமல் இறைவனை வழிபட முடியும். ஆனால் இது எல்லோராலும் செயற்படுத்தக் கூடியதல்ல. பக்குவம் அடைந்தவர்களால் மட்டுமே தூண்டுதல்கள் எவையுமின்றி இறைவனை வழிபடக்கூடியதாக இருக்கும். ஏனையோர் தூண்டுதல்கள் மூலமே இறைவனை வழிபடவேண்டிய தரத்தில் இருக்கிறார்கள்.
உதாரணமாகக் கூறுவதானால், நாட்டுப்பற்றாளர் ஒருவரின் உயிர்மூச்சு தான் பிறந்த நாட்டுக்கு விசுவாசமாகவே இருக்கும். ஒவ்வொரு கணமும் அவர் தனது செயற்பாடுகளால் நாட்டுக்குச் சிறப்புச் சேர்த்துக் கொண்டேயிருப்பார்.
ஆனால் எல்லோராலும் இது முடிவதில்லை. சாதாரணமக்கள் நாட்டுக்காகச் செயற்பட வேண்டுமாயின், அவர்களுக்கு உரைகள் தேவைப்படுகின்றன. கோசங்கள் தேவைப்படுகின்றன. வழிகாட்டல்கள் தேவைப்படுகின்றன. ஆகக் குறைந்தது தேசியகீதம். தேசியக்கொடி என்பவையேனும் தேவைப்படுகின்றன.
தேசிய கீதமும், தேசியக் கொடியும் இல்லாத நாடு உலகில் கிடையவே கிடையாது. புதிதாக ஒரு நாடு தோற்றம் பெற்றாற்கூட, அந்நாட்டு மக்கள் முதல்வேலையாகத் தமக்கென ஒரு தேசிய கீதத்தையும், தேசியக் கொடியையும் தாபித்துக்கொண்டு அவற்றுக்கு மரியாதை செலுத்துகின்றனர். அவற்றுக்குச் செலுத்தும் மரியாதையை நாட்டுக்குச் செலுத்துகின்ற மரியாதையாகக் கருதுகின்றனர்.
நாட்டுக் கொடிக்கும், நாட்டுக் கீதத்துக்கும் மரியாதை செலுத்தாத மனிதன் உலகில் எவருமேயில்லை. அதேபோல், நாட்டுக் கொடியென்பது வெறுந்துணியினாலும் வண்ணங்களாலும் ஆனது என்பதையும், நாட்டுக் கீதம் என்பது வெறும் ஒலிக்கூட்டம் என்பதையும் மனிதர்கள் அறியாமலில்லை.
கொடியும் கீதமும் நாடல்ல என்பதை நன்குணர்ந்திருந்தும் அவற்றை வணங்கும் சாதாரண மனிதன் போல்தான், சாதாரண பக்தனும் கல்லும் மண்ணும், மரமும் கடவுளல்ல என்பதை உணர்ந்திருந்தும் வணங்குகிறான் என்று கொள்ள வேண்டும்.


இறைவன் உருவமில்லாதவன் என்றும், உருவமற்ற ஒன்றுக்கு உருவங்கள் வைத்து வழிபடுவது பிழையானது என்றும் சிலசமயிகள் கூறுகிறார்கள். இதுபற்றி எங்கள் நெறி என்ன கூறுகிறது?
இறைவன் உருவமில்லாதவன் என்று பிறசமயிகள் சொல்வதை இந்துமதம் ஏற்றுக் கொள்கிறது. ஆனால். உருவங்களை வழிபடுதல் பிழையானது என்று கூறுவதை அது நிராகரிக்கிறது.
இதைத் தெளிவாகக் கூறுவதானால், எச்சமயத்துக்கும் தன்மதக் கோட்பாடுகள் சரியானவை என்று ஸ்தாபிக்கப் பூரண உரிமையுண்டு. ஆனால், பிறமதக் கோட்பாடுகள் பிழையானவை எனக் கண்ணை மூடிக்கொண்டு கூற உரிமை கிடையாது.
இதனால்தான் ‘நிராகரிக்கிறது’ என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
இந்துசமயத்தில் பக்தர்கள் தத்தம் படித்தரத்துக்கு ஏற்ப இறைவனை மூன்று விதமாகக் கொண்டு வழிபடுகின்றனர். பெரும்பாலானோர் இறைவனை உருவத்தூடாக வழிபடுகின்றனர். இது விக்கிரக வழிபாடு ஆகிறது. ஒருசிலர் இறைவனை உருவம், உருவமின்மை ஆகியன கலந்த தரத்தில் வைத்து வழிபடுகின்றனர். இது சிவலிங்க வழிபாடு எனப்படுகிறது. ஞானியரோ இரண்டுங்கடந்த அருவ நிலையிலேயே, அதாவது உருவமற்ற நிலையிலேயே வழிபடுகின்றனர். ஆக மொத்தம், மூன்றுவித வழிபாடுகளும் இந்து தர்மத்தில் அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றன.
இறைவனுக்கு உருவமில்லை என்று கூறுகின்ற சமயத்தைச் சார்ந்தவர்கள்கூட இறைவனை ஆண்பால் விகுதி கொண்டே விளிக்கிறார்கள் என்பதையும் கவனத்திற் கொள்ளவேண்டும். ஆண்பால் விகுதி கொண்டழைக்கப்படும் போது இறைவன் ஆண் என்றாகிறது. ஆண் என்றாகும்போது அது உருவம் உடையதாகின்றதல்லவா?
அது மட்டுமல்ல அருவம், உருவம். அருவுருவம் ஆகிய மூன்று நிலைகளையும் கொண்ட அமைப்பு, இறைவனுக்கு உருவமில்லை என்று சொல்கிறவர்களிடமும் காணப்படுகிறது. உதாரணமாக, அவர்களது சமயநூலை எடுத்துக் கொள்வோமாயின், அந்நூலில் காணப்படும் கருத்துகள் உருவமற்றவை. அதாவது, கண்ணால் பார்க்கவோ, தொட்டு அனுபவிக்கவோ முடியாதவை. ஆவை எழுத்துகள் வழியாக வெளிவரும்போது அருவுருவம் ஆகின்றன. எழுத்துகள் உருவமுள்ளவை போல் ஒருபுறம் தோன்றும். இன்னொருபுறம் உருவமற்றவையாக இருக்கும். ஆயினும் அந்தப் புத்தகத்தின் தாள்களோ உருவமுள்ளவை.
சாதாரண மக்களுக்கு அந்நூலின் உருவம் தெரியும். எழுதப்படிக்கத் தெரிந்தவர்களுக்கு அருவுருவமான எழுத்துகள் புரியும். ஆனால், ஆய்ந்துணர வல்லவர்களுக்கு மாத்திரமே அதன் கருத்தகள் தெரியும். உருவமற்ற கருத்துகளின் சிறப்புக் கருதி உருவமுள்ள புத்தகத்தை அவர்கள் புனிதமாக மதிப்பதில்லையா? எனவே, எல்லா மதங்களிலும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ உருவ வழிபாடு இருக்கிறது என்பதுதான் உண்மை.
                                                                                                                                              
                                                                                                                                                 தொடரும்…

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 4

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 09

தமிழ் இலக்கணம் அறிவோம் எழுத்தியல்- பகுதி 5