இந்துசமய விளக்கம். 1


இந்து சமயம் என்றால் என்ன? அப்பெயர் வந்ததன் காரணம் என்ன?
இந்துசமயம் என்பது வேதங்களை அடிப்படையாகக் கொண்டது. இருக்கு, யசுர், சாம, அதர்வணம் என் அழைக்கப்படும் இவற்றை நான்கு வேதங்கள் என்றும் நான்மறைகள் என்றும் அழைப்பர்.
இன்று உலகில் உள்ள நூல்களுள் நான்கு வேதங்களே மிகப்பழமையானவை எனக் கணக்கிடப்பட்டுள்ளன.
இந்நான்கு வேதங்களையும் அடிப்படையாகக் கொண்டு இறைவழிபாடுகள் தோன்றின. இவற்றை ஆதாரமாகக் கொண்டு எழுந்தவையே சைவம், வைணவம், சாக்தம், கௌமாரம், காணாபத்தியம், சௌரம் எனப்படும் நெறிகள். இவற்றை அறுவகைச் சமயங்கள் என்றும் கூறுவர்.
எனினும், இவையனைத்தும் சனாதன தர்மம் என்றே முற்காலத்தில் அழைக்கப்பட்டு வந்தன. ஆயினும் இந்திய உபகண்டத்தைத் தளமாகக் கொண்டு தோன்றியதால் இந்து சமயம் எனவும் வெளியாரால் அழைக்கப்படலாயிற்று.


வேதங்கள் எவ்வாறு தோன்றின? அவை கடவுளால் அருளப்பட்டவையா?
வேதங்கள் எவ்வாறு தோன்றின என்றோ, எப்போது தோன்றின என்றோ எவராலும் அறுதியிட்டுச் சொல்ல முடியாது. வேதங்கள் ஞானியரால் அருளப்பட்டவை என்று கொள்ள வேண்டியுள்ளது.
நூற்றுக்கணக்கான ஞானியரின் சிந்தனைகளின் தொகுப்பே வேதங்களாகும்.
பல தலைமுறைகளைச் சேர்ந்த ஞானியர்கள், தங்கள் சிந்தனையில் உதித்த உயரிய கருத்துகளைத் தம் சீடர்களிடமும் விளங்கிக் கொள்ளக்கூடிய அறிவுநிறைந்த மனிதர்களிடமும் தெரிவித்து வந்திருக்கிறார்கள். இக்கருத்துகளைப் பிற்காலத்தில் ஒருமுகமாகத் திரட்டியதன் தொகுப்பே வேதங்கள் எனப்படுகின்றன.
எமக்குக் கிடைத்திருக்கும் தொகுப்பு நூலான நான்கு வேதங்களே உலகின் மிகப் பழைமையான நூல்கள் என அறியப்படும்போது, அக்கருத்துகள் வாய்வழியாக உரைக்கப்பட்டு, செவிவழியாக உள்வாங்கப்பட்டுப் பல தலைமுறைகளாகச் சிந்தனையில் தேக்கிவைக்கப்பட்டுப் பேணப்பட்டதென்பது ஒப்புக்கொள்ளக் கூடிய உண்மையாகும்.
இவற்றை நோக்கும்போது இந்திய ஞானியரின் பெருமையும் அவர்தம் சிந்தனையின் திறமையும் எம்மைப் பெருமைகொள்ள வைக்கின்றன.
வேதங்கள் கடவுளால் அருளப்பட்டவை என்ற கருத்து, அச்சிந்தனைகளின் உயர்வு கருதித் தோற்றம் பெற்றது எனக் கொள்ளலாம். இறைவன் அருளால் ஞானியர்களுடைய சிந்தனையில் உதித்தவை என்றோ, இறைவன் ஞானியரின் சிந்தனையை ஊடகமாகப் பயன்படுத்தினார் என்றோ கொள்ளப்படினும் தவறன்று. இன்றுங்கூட, சிறந்த செயல்களைப் புரிபவர்களையும் உயரிய கருத்துகளை வெளிப் படுத்துபவர்களையும் தெய்வத்தன்மை பொருந்தியவர் என்று அழைப்பது உண்டல்லவா?



வேதங்கள் எதைப்பற்றிப் பேசுகின்றன?
வேதங்கள் உலகத்தோற்றத்தை ஆராய முற்படுகின்றன. இந்த உலகமும் பிரபஞ்சமும் யாரால் தோற்றுவிக்கப்பட்டன என்பது பற்றியும், ஏன் தோற்றுவிக்கப்பட்டன என்பது பற்றியும் அறிய முற்படுகின்றன. கடவுள் என்றால் என்ன, கடவுளின் தன்மைகள் எவை என்பவைபற்றித் தெளிவுகாண முற்படுகின்றன.
உயிர்களின் தோற்றுவாய் என்ன, அவை ஏன் தோன்றின, ஏன் பிறப்பெடுக்கின்றன என்பவை பற்றியும் பேசுகின்றன. பிறப்பெடுக்கும் உயிர்கள் எவ்வாறு வாழவேண்டும், எவ்வாறு வாழக்கூடாது என்றெல்லாம் கூறுகின்றன. சுருங்கக் கூறின், இறைவன், உயிர்கள், இயற்கை பற்றிய உண்மையை வேதங்கள் பேசுகின்றன எனலாம்.


தெய்வங்கள் பலவா, ஒன்றா? இதுபற்றி வேதங்கள் என்ன சொல்கின்றன?
வேதங்கள் மனிதகுலத்தின் ஆரம்பகாலச் சிந்தனைகளின் வெளிப்பாடு என்பதை முதலில் உணர வேண்டும். சாதாரண மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவும், அறிவு சார்ந்தவர்கள் நுணுகி ஆராய்ந்து உண்மையைத் தேடவல்லதாகவும் சொல்லப்படும் கருத்துகளே நிலைபெறும் என்பது நடைமுறையில் கண்கூடு.
இதற்கிசையவே வேதகாலச் சிந்தனைகள் பாமரமக்கள் புரிந்து ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவும், அறிவு சார்ந்தோர் ஆராய்ந்து மூலத்தை விளங்கிக் கொள்ளக் கூடியதாகவும் வெளிப்படுத்தப்படுகின்றன.
இயற்கைச் சக்தியின் ஒவ்வொரு வெளிப்பாட்டுக்கும் ஒவ்வொரு தெய்வம் இருப்பதாக வேதங்கள் பேசுகின்றன. ஒவ்வோர் இடத்திலும் ஒவ்வொரு தெய்வத்தைப் பற்றி சிறப்பாகப் பேசுகின்றன. அத்தகைய பகுதிகளைப் படிக்கும்போது அந்தந்தத் தெய்வங்களே பெரியனபோல் ஒரு தோற்றம் ஏற்படும். ஆனால், ஒட்டுமொத்தமாக விளங்கிக் கொள்ளும்போது தெய்வம் ஒன்றே என்பது சந்தேகமறத் தெளிவுபடுத்தப்பட்டு இருப்பதைக் காணலாம்.


அவ்வாறாயின் பலதெய்வ வழிபாடுகள் சரியாகுமா?
பலதெய்வ வழிபடுகள் நிச்சயம் சரியானதே. ஒரு மனிதனை எடுத்துக் கொண்டால், அவன் பெற்றோரால் மகன் என அழைக்கப்படுகிறான். நண்பர்களால் பெயர் சொல்லி விளிக்கப்படுகின்றான். அலுவலகத்தில் உத்தியோகப் பெயரால் அழைக்கப்படுகிறான். வீட்டில் மனைவிக்குக் கணவனாகின்றான். பிள்ளைகளுக்கோ தந்தையாகின்றான்.
இவ்வாறு பல பெயர்களால் அழைக்கப்படுகின்ற போதிலும் அவன் ஒருவனே என்பது வெளிப்படை. எனினும் அவன் அழைக்கப்படுகின்ற பெயரைப் பொறுத்து அவனது கடமை, தொடர்பு கொள்ளும் முறைமை, பழகும் விதம் என்பன வேறுபடுகின்றன.
இது போலவே, தெய்வம் ஒன்றெனினும் மக்களின் நியாயமான விருப்பங்கள் தேவைகளுக்கேற்ப, அத்தெய்வம் பல உருவங்களில் செயற்படுவதாகக் கொள்ளப்படும் நம்பிக்கையே பல தெய்வ வழிபாடு நிகழக் காரணமாகின்றது. எப்பெயரிட்டு அழைத்தாலும், எத்தோற்றத்தை மனக்கண்முன் நிறுத்தி வழிபட்டாலும், மனம் தூய்மையானல் அது மகத்துவம் நிறைந்ததே. அதேபோல் தான் வழிபடும் தெய்வமும், அது சார்ந்த நடைமுறைகளும் மட்டுமே மிகச் சரியானவை என்றும் ஏனையவை பிழையானவை என்றும் ஒருவன் மனத்தளவிலேனும் நிந்திப்பானேயாகில் அது தெய்வ நிந்தனையின் பாற்படும் என்பதையும் மறத்தலாகாது.


                                                                                                                                             தொடரும்……

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 4

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 09

தமிழ் இலக்கணம் அறிவோம் எழுத்தியல்- பகுதி 5