தமிழ் இலக்கணம் அறிவோம் - எழுத்தியல் பகுதி 08
ஐகாரக் குறுக்கம்.
உயிரெழுத்து வரிசையில் எட்டாவதாக வருகின்ற ‘ஐ’ என்ற எழுத்து நெடிலாகும். நெட்டெழுத்து என்றவகையில் இதன் ஒலிப்புநேரம் இரண்டுமாத்திரை அளவினதாக அமைகின்றது.
இந்தவிதி ‘ஐ’ எழுத்தைத் தனித்து ஒலிக்கும்போது மட்டுந்தான் பொருந்துகிறது. ஆனால், சொற்களில் ஐகாரம் வருகின்றபோது அதன் ஒலிப்புநேரம் இரண்டு மாத்திரையை அளவைவிடக் குறைந்து போவதை அனுபவத்திற் காணலாம்.
இவ்வாறு ஐகாரம் தன்னோசையின் அளவைக் குறைத்துக் கொள்வதையே ஐகாரக்குறுக்கம் என்கிறோம்.
ஐகாரம் ஒருசொல்லின் முதலிலோ, இடையிலோ, கடையிலோ வரக்கூடிய எழுத்தாகும்.
ஒரு மொழியில் ஐகாரம் வருமிடத்தைப் பொறுத்து மாத்திரையும் வேறுபாடடைவது அவ்வெழுத்தின் சிறப்பம்சமாகும்.
மொழிக்கு முதலில்வரும் ஐகாரம்.
ஐயர், ஐவர், ஐந்து, வையகம், நைந்தது, பைந்தமிழ் போன்ற சொற்களில் ஐகாரஒலி முதலில் வருகின்றது.
‘ஐ’ என்று தனித்து ஒலிக்கும் போது செலவிடப்படும் நேரம் மொழிக்கு முதலில் வருகின்ற ஐகார ஒலிக்குச் செலவிடப்படுவதில்லை என்பதை உன்னித்து நோக்கிற் புரியும்.
இங்கே மொழிக்கு முதலில் வருகின்ற ஐகார ஓசையின் அளவு ஒன்றரை மாத்திரை என்பர் இலக்கண அறிஞர்.
மொழிக்கு இடையில்வரும் ஐகாரம்.
தலைவன், கலைஞன், இணையம், நிலையம், விளைச்சல் போன்ற சொற்களில் ஐகாரவோசை இடையில் வருகின்றது.
இவ்விடத்தில் வரும் ஐகாரத்தின் ஒலிஅளவு ஒரு மாத்திரையாகும்.
மொழிக்கு இறுதியில்வரும் ஐகாரம்.
நம்பிக்கை, இருக்கை, கலை, விலை, மமதை, ஆசை போன்ற சொற்களில் ‘ஐ’ ஒலிப்பு மொழியின் இறுதியில் வருகின்றது. இதன் மாத்திரையும் ஒன்றாகும்.
எனவே ‘ஐ’காரம் தனித்து ஒலிக்கும்போது இரண்டு மாத்திரையும், சொல்லின் முதலெழுத்தாக நின்று ஒலிக்கும்போது ஒன்றரை மாத்திரையும், சொல்லின் நடுவிலோ கடைசியிலோ வரும்போது ஒருமாத்திரையும் பெறுகிறது என்பதை மறவற்க.
ஒளகாரக் குறுக்கம்.
‘ஒள’ என்ற உயிரெழுத்து நெட்டெழுத்து வகையைச் சார்ந்ததால் நெடிலோசைக்குரிய இரண்டு மாத்திரை அளவுநேரமே ஒலிக்கப்பட வேண்டியதாகும்.
இதன்படி ஒளகாரம் தனித்து நின்று ஒலிக்கும்போது இரண்டுமாத்திரை பெறுகிறது.
ஓள எழுத்து அல்லது அதனோசை, சொற்களின் முதலில்மட்டுமே வரக்கூடியது. சொற்களின் இடையிலோ, கடையிலோ வராது.
ஓளவை, மௌவல், பௌராணிகர், பௌத்தம், கௌமாரம் கௌசிகர், சௌந்தரியம் என்பன சில எடுத்துக்காட்டுகளாகும்.
தனித்துநின்று இரண்டுமாத்திரை நேரம் ஒலிக்கும் ஒளகாரம், சொற்களின் முதலெழுத்தாக நின்று ஒலிக்கும்போது அதன் ஒலிப்புநேரம் ஒன்றரை மாத்திரை அளவாகக் குறுகிவிடுகிறது. இதுவே இலக்கணத்தில் ஒளகாரக்குறுக்கம் எனப்படுகிறது.
எனவே, ஒளகாரக்குறுக்கத்தின் மாத்திரை ஒன்றரையாகும்.
மகரக் குறுக்கம்.
மகர மெய், அதாவது 'ம்’ எழுத்துக்குரிய மாத்திரை ஏனைய மெய்களைப் போன்று அரையாகும். எனினும் சில இடங்களில் மகரமெய் தன் மாத்திரையிற் குறைந்து கால் மாத்திரையாகவும் ஒலிப்பதுண்டு. அவ்வாறு ஒலிக்கும்போது அது மகரக்குறுக்கம் எனப்படுகிறது.
இது செய்யுள்களிலும் உரைநடைகளிலும் நிகழ்வதுண்டு.
ஓசைநயங் கருதிச் செய்யுள்களில் சில சொற்கள் குறுக்கமடைவதுண்டு. அவ்வாறான சந்தர்ப்பங்களில் மகரக்குறுக்கம் தோன்றுகின்றது.
உதாரணமாக, போலும் என்றசொல் போல்ம் எனமாற்றம் பெற்றுப் பின்னர் போன்ம் எனச் செய்யுள்களில் வருவதுண்டு.
இதேபோல் மருளும் என்றபதம் மருள்ம் எனமாறி மருண்ம் எனச் சுருக்கம் பெறுவதுண்டு.
இவ்வாறு போன்ம், மருண்ம் ஆகிய பதங்களில் மகரமெய் தன்மாத்திரையிற் குறைந்து போகின்றது. ஒலித்துப் பார்த்தால் இக்குறைவு தெளிவாகத் தெரியும். இது மகரக்குறுக்கம் ஆகும்.
ஊரைநடையைப் பொறுத்தவரையில், வரும், போகும், செல்லும், நிற்கும் என்பன போன்ற மகரமெய்யை இறுதியாகக் கொண்ட பதங்களுடன் ‘வ’கர வரிசையை முதலெழுத்தாகக் கொண்ட சொற்கள் வந்து இணையும்போது, நிலைமொழியின் இறுதியில் நிற்கும் மகரமெய் ஓசையிற் குறைந்து போகின்றது.
வரும்வண்டி, செல்லும்வழக்கம், விற்கப்படும்வீடு நிற்கும்வரிசை போன்றவற்றை ஒலித்துப்பார்த்தால் மகரஓசை குறைவடைவதைத் தெரிந்து கொள்ளலாம். இது மகரக்குறுக்கம் எனப்படும்.
மகரக்குறுக்கத்தின் ஒலியளவு கால் மாத்திரையாகும்.
ஆய்தக் குறுக்கம்.
ஒரு சொல் குற்றெழுத்தை யடுத்து லகர, ளகர மெய்களில் நிறைவடையும்போது, அச்சொல்லுடன் இணையவரும் சொல் தகர வரிசையைக் கொண்டிருக்குமாயின் அவ்விணைவின்போது ஆய்தக்குறுக்கம் தோன்றுகிறது.
நிலைமொழி இறுதி லகர மெய்யாகி வருமொழி தகரவரிசையைக் கொண்டிருக்குமாயின் அவ்விணைவில் ஆய்தத்துடன் றகரம் தோன்றும்.
நிலைமொழியிறுதி ளகர மெய்யானால் தகரவோசை சேருமிடத்து ஆய்தத்துடன் டகரம் தோன்றுகிறது.
பல எனும் நிலைமொழியுடன் துளி எனும் வருமொழி இணையும்போது பல, பல் எனமாறி பல் + துளி = பஃறுளி என்றாகிறது.
கல் எனும் நிலைமொழியுடன் தீது எனும் வருமொழி இணையின் கல் + தீது = கஃறீது என்றாகிறது.
அதேபோல் முள் எனும் மொழியுடன் தீது எனும் மொழி இணையும்போது முள் + தீது = முஃடீது என்றாகின்றது.
ஆய்தக்குறுக்கத்தின் மாத்திரையளவு கால் ஆகும்.
தற்கால வழக்கில் ஆய்தக்குறுக்கத்தின் பயன்பாடு குறைவடைந்து வருகிறது.
முக்கிய குறிப்பு:
அது, இது எனவரும் சுட்டுப் பெயர்ச்சொற்களை யடுத்து உயிரோசையிற் தொடங்கும் பதம் வருமாயின் அது அஃது என்றும், இது இஃது என்றும் மாற்றமடைகின்றன.
உதாரணமாக, அது எனும் சொல்லையடுத்து ஒரு எனுஞ்சொல் வருமாயின் அஃதொரு என்றாகிறது. அது இலார்க்கு என்பது அஃதிலார்க்கு என மாற்றமடைகிறது.
சாரியை.
தமிழ் எழுத்தை ஒலிக்கும்போது அவ்வொலிக்குத் துணையாகவரும் ஓசையைச் சாரியை என்பர் இலக்கண அறிஞர்.
சாதாரண பேச்சுவழக்கில் எழுத்தொன்றைத் தனியாக ஒலிக்கும்போது அவ்வெழுத்து, குறிலாயின் அதை நெடிலாக்கி ‘னா’ என்ற ஓசையையும் இணைத்தே ஒலிக்கிறோம்.
அ, இ, க, ண, கி, மு ஆகிய குறில் எழுத்துகளை முறையே ஆனா. ஈனா. கானா, ணானா, கீனா, மூனா என்றே ஒலிக்கிறோம். குறில்கள் அனைத்துக்கும் இது பொருந்தும்.
அதேபோன்று நெடில் எழுத்துகளுக்கு அவ்வெழுத்துடன் அன்னா என்ற ஓசையையும் சேர்த்தே ஒலிக்கிறோம்.
ஆ, ஈ, ஊ, ஐ, ஒள, மா, சா, டீ போன்றவற்றை முறையே ஆஅன்னா—ஆவன்னா, ஈயன்னா, ஊவன்னா, ஐயன்னா, ஒளவன்னா, மாவன்னா, சாவன்னா, டீயன்னா என்றுதான் ஒலிக்கிறோம். இஃது அனைத்து நெடில்களுக்கும் பொருந்தும்.
ஆய்த எழுத்துக்கும் நெடிலின் துணையொலிப்பான் ‘அன்னா’வைப் பயன்படுத்துவதுண்டு. ஆய்தத்தை அஃகன்னா அல்லது அக்கன்னா என்பதும் வழக்கு.
எனவே, குறிலுக்குத் துணைவருகின்ற ‘ன’வும், நெடிலுக்கும் ஆய்தத்துக்கும் துணைவருகின்ற ‘அன்னா’வும் சாரியைகள் என நாம் கொள்ளலாம்.
ஆயினும் “உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டு” என்பதற்கிணங்க, இலக்கணநூலோர் பின்வருமாறு சாரியைகளை வகுத்துள்ளனர்.
அ, இ, உ, க, ங, போன்ற குற்றெழுத்து வரிசை அகரச்சாரியை பெறுகிறது. இதன்படி அவை முறையே அகரம், இகரம், உகரம் ககரம், ஙகரம் என வருகின்றன.
நெட்டெழுத்துகள் காரச்சாரியை பெறுகின்றன. இதற்கிசைவாக அவை ஆகாரம், ஈகாரம், ஐகாரம், காகாரம் என உச்சரிப்புப் பெறுகின்றன.
ஆய்தஎழுத்து ஏனச்சாரியை பெறுகிறது. இதற்கேற்ப, அஃகேனம் அல்லது அக்கேனம் எனப்படுகிறது.
இவற்றைவிட. “ஐ” எழுத்து, கான் சாரியைப் பெற்று “ஐகான்” எனப்படுவதுமுண்டு.
“ம” எழுத்து மகரம் என்பதோடு, மாகரம், மஃகான் எனவும் வழங்கப்படுகிறது.
கவனத்திற் கொள்ளப்பட வேண்டியவை:
எல்லா எழுத்துகளுக்கும் தனித்தனி உச்சரிப்புகள் உளவெனினும் அவை பேச்சுவழக்கிலோ, இசையிலோ அவ்வப்போது தமது ஒலிப்பிலிருந்து சற்றே விலகி ஒலிப்பதுண்டு என்பதை மனத்திற் கொள்ளவேண்டும். காலங்காலமாக மொழிவழக்கு அவ்வாறுதான் அமைந்து வருகிறது.
எழுத்தின் அடிப்படைஒலி பிசகாமல் சொற்களை உச்சரிப்போமாயின் அது வேடிக்கை நிகழ்வாகிவிடும். குற்றியலுகரம் தொடக்கம் இதுவரை காட்டப்பட்ட ஆய்தக்குறுக்கம்வரை இலக்கணவாயிலாக இவ்வுண்மையைத்தான் உணர்த்துகின்றன.
இவற்றைவிட வேறு துல்லியமான எடுத்துக்காட்டுகளும் உள.
கானல், காணல் எனும்பதங்களை ஒலிக்கும்போது நடுஎழுத்தாக வருகின்ற ன, ண என்பவற்றுக்கேற்ப ‘கா’ எழுத்தின் ஓசை வேறுபடுவதைக் காணலாம். பிடிவாதமாக 'கா’ எழுத்தை ஒரேமாதிரித்தான் ஒலிப்போம் எனப்புகுந்தால் தமிழ் கர்ணகொடூரமாக இருக்கும்.
இவ்வாறே, வீசு – வீடு, பேன் -- பேண், சீலன் -- சீடன், வேலன் -- வேடன், கலை -- களை போன்ற சொற்களை ஒலிக்கும்போது சொற்களின் முதுலெழுத்துகள் தம் அயல் எழுத்துக்கேற்ப ஓசையில் மாறுபாடடைவதை உணரலாம்.
இவைபோன்று அப்பம் - கோபம், பட்டம் - படம் முதலான சொற்களிலும் பகர, டகர ஓசை மாறுபடுவதை அவதானிக்கலாம்.
இத்தகைய நுணுக்கமான அவதானிப்புகளே சிறந்தமுறையில் தமிழ்பேச உதவவல்லன என்பதை கருத்திற் கொள்க.
எழுத்தியல் முற்றும்.
கருத்துகள்
கருத்துரையிடுக