தமிழ் இலக்கணம் அறிவோம் - எழுத்தியல் பகுதி 07

பகுதி 07

எழுத்துகள் தமக்குரிய மாத்திரையின் அளவைவிட நீண்டொலிப்பதுபோல் சில எழுத்துகள் தமக்குரிய மாத்திரையைவிடக் குறைவாக ஒலிப்பதுமுண்டு.
இவ்வொலிப்புக் குறைவுகள் சாதாரணமான பேச்சுவழக்கில் இருப்பதை உன்னிப்பாக நோக்கினாற் புரிந்து கொள்ளலாம். அப்பேச்சுவழக்கின் அடிப்படையை இலக்கண ஆசிரியர்கள் துல்லியமாகக் கணித்து இலக்கணம் செய்திருக்கிறார்கள்.
பொதுவாகத் தமிழர்கள் பேசும்போது தாய்மொழியின் எழுத்தொலிகளை எல்லாவிடத்தும் அச்சொட்டாகப் பேணுவதில்லை. சொற்களில் அமைகின்ற எழுத்துகள் சிலவற்றை வழக்கமான ஒலியளவைவிடக் குறைத்தே ஒலிக்கிறார்கள்.
அவ்வாறு ஒலிக்காமல் முழுமையாக எழுத்தொலிகளை உச்சரித்தால் பிறமொழியாளர்கள் தமிழ் பேசுவதுபோன்ற உணர்வே கேட்போருக்குத் தோன்றும்.
இவ்வொலிக் குறைப்புகள் மொழிக்கு இயல்பானவை, அழகு சேர்ப்பவை, மொழி இலக்கணத்தின் பாற்பட்டவை. அவை இலக்கணநூலில் குற்றியல்உகரம், குற்றியல்இகரம், ஐகாரக்குறுக்கம், ஒளகாரக்குறுக்கம், மகரக்குறுக்கம், ஆய்தக்குறுக்கம் என வகைப்படுத்தப்பட்டுள்ளன.

குற்றியலுகரம்.

குற்றியலுகரம் என்பதன் பொருள் உகரவோசை கொண்ட எழுத்து தனக்கியல்பான ஒலிநேரத்தைவிடக் குறைவான நேரத்தில் ஒலிக்கப்படுகிறது என்பதாகும்.
அதாவது குறைந்த ஓசையையுடைய உகரம் எனக்கூறலாம். இது எவ்வாறு நிகழ்கிறது என்பதுபற்றிப் பார்ப்போம்.
உகரமேறிய வல்லின மெய்கள் குறிலோசையுடன் இணைந்துவரும் இரண்டெழுத்துச் சொற்கள் தவிர்ந்த வேறு சொற்களின் இறுதியில் வரும்போது தமக்குரிய ஓசையைவிடக் குறைவாகவே ஒலிக்கப்படுகின்றன என்பது நடைமுறை அனுபவம்.
உகரம் ஏறிய வல்லின மெய்களாவன, கு, சு, டு, து, பு, று ஆகிய ஆறு உயிர்மெய்களாம்.
புகு, தகு, கொசு, பசு. கொடு, விடு, புது, மது, அறு, சிறு போன்ற முதலெழுத்து குறிலாகவும் அடுத்துவரும் எழுத்து உகரம் ஏறிய வல்லின மெய்களிலொன்றாகவும் அமையும் இரண்டெழுத்துச் சொற்களை ஒலிக்கும்போது கு, சு, டு, து, பு, று ஆகிய எழுத்துகளின் ஓசை முழுமையாக வெளிவருவதை அவதானிக்கலாம்.எனவே இவை முழுமையான ஓசையைப் பெறுகின்ற உகரங்களாகின்றன.
ஆனால், ஏனைய இடங்களில் சொற்களினிறுதியில் வருகின்ற வல்லின மெய்களிலேறிய உகரங்கள் எவையும் முழுமையான ஒலிப்புகளைப் பெறுவதில்லை. குறைவான ஒலிப்புகளைக் கொண்டிருப்பதால் இவை குற்றியலுகரங்கள் என அழைக்கப்படுகின்றன.
இவற்றில் எவ்வுகரத்தையேனும் ஒருவர் முழுமையாக ஒலிப்பாரானால் அவ்வொலிப்பு வித்தியாசமான தமிழாகத் தோன்றும். தமிழறியாதார் தமிழ் பேசுவதுபோற் தோன்றும்.
குற்றியலுகரம், தனக்கு முன்னேவரும் ஒலிக்கேற்ப ஆறு வகைப்படுகின்றன என்பர் இலக்கண அறிஞர்.
அவை, நெடிற்றொடர், ஆய்தத்தொடர், உயிர்த்தொடர், வன்றொடர், மென்றொடர், இடைத்தொடர் என்பவையாம்.

நெடிற்றொடர்க் குற்றியல்உகரம்.

இரண்டெழுத்துப் பதங்களில் நெடிலோசையை முதலெழுத்துக் கொண்டிருக்குமிடத்து அடுத்துவரும் வல்லின உகரம் நெட்டெழுத்தோசையை அடுத்து வருகின்றது என்ற பொருளில் நெடிற்றொடர்க் குற்றியலுகரம் எனப் பெயர்பெறுகிறது.
ஆடு, காசு, பேசு, வீடு, நாடு, மாடு, ஓடு, மாது, ஓது, தீது, கோபு, சோறு, வீறு போன்றவை இதற்கு உதாரணங்களாம்.

ஆய்தத்தொடர்க் குற்றியல்உகரம்.

தனக்கு முன்னமைகின்ற எழுத்து அல்லது ஓசை ஆய்தமாக அமையுமிடத்து சொல்லிறுதியில் வருகின்ற வல்லின உகரங்கள் ஆய்தஓசையைத் தொடர்ந்து வருகின்றன என்ற பொருளில் ஆய்தத்தொடர்க் குற்றியலுகரம் எனப் பெயர்பெறுகிறது. 
இஃது, அஃது, எஃகு என்பவை உதாரணங்களாம்.


உயிர்த்தொடர்க் குற்றியல்உகரம்.

இவ்வகைக் குற்றியலுகரங்களுக்கு முன்னே உயிரோசை வருவதால் இவை இப்பெயர் பெறுகின்றன.
உதாரணங்களாக, படகு, வரகு, பழசு, விளாசு, பவிசு, குறடு, சரடு, புதிது, பெரிது, உதறு, பதறு என்பவற்றைக் கொள்ளலாம்.
இங்கே கவனிக்கவேண்டியது என்னவெனின், குற்றியலுகரங்களுக்கு முன்னேவரும் எழுத்துகளின் உயிரோசை மட்டுமே இலக்கணஆசிரியர்களால் கருத்திற் கொள்ளப்படுகிறது என்பதாகும்.

மேற்கண்ட பதங்களில் வருகின்ற ட, ர, ழ, ளா, வி, ற, ரி, த போன்ற உயிர்மெய்யெழுத்துகளைச் சிந்தித்துக் குழப்பமடையத் தேவையில்லை.


வன்றொடர்க் குற்றியல்உகரம்.


சொல்லினிறுதியில் வல்லின மெய்களான க், ச், ட், த், ப், ற் ஆகிய எழுத்துகளை அடுத்து வருகின்ற வல்லினமெய்களில் ஏறிய உகரம், வலிதான எழுத்தைத் தொடர்ந்துவரும் குற்றியலுகரம் என்ற பொருளில் வன்றொடர்க் குற்றயலுகரம் என அழைக்கப்படுகிறது.
கொக்கு, திக்கு, அச்சு, கச்சு, பட்டு, சிட்டு, முத்து, வித்து, உப்பு, சிறப்பு, பற்று, ஒற்று என்பவை வன்றொடர்க் குற்றியலுகரத்துக்கு எடுத்துக்காட்டுகளாம்.

மென்றொடர்க் குற்றியல்உகரம்.

மெல்லின மெய்களான ங், ஞ், ண், ந், ம், ன் ஆகிய ஆறெழுத்துகளையடுத்து மொழிக்க இறுதியிலமையும் குற்றியலுகரம், மென்றொடர்க் குற்றியலுகரம் எனப்படுகிறது.
சங்கு, நுங்கு, பஞ்சு, நெஞ்சு, நண்டு, வண்டு, நொந்து, சிந்து, தும்பு, வேம்பு, கன்று, இன்று என்பவை வன்றொடர்க் குற்றியலுகரத்துக்கு உதாரணங்களாம்


இடைத்தொடர்க் குற்றியல்உகரம்.

இடையின மெய்களான ய், ர், ல், வ், ழ், ள் ஆகியவற்றையடுத்து மொழிக்கு இறுதியில் வருகின்ற வல்லின மெய்களிலேறிய உகரங்கள் இடைத்தொடர்க் குற்றியலுகரங்கள் என அழைக்கப்படுகின்றன.
கொய்து, பெய்து, சார்பு, சால்பு, போழ்து, வெள்கு போன்றவை இதற்கு உதாரணங்களாம்.
சொற்களின் இறுதியில் மட்டும்தான் குற்றியலுகரங்கள் வருகின்றன என்பதில்லை, அவை சொற்களின் நடுவேயும் வருவதுண்டு என்கின்றனர் இன்றைய இலக்கண அறிஞர்கள்.
முக்கியகுறிப்பு: பன்மை விகுதியான ‘கள்’ குற்றியலுகரச் சொற்களுக்குப் பன்மைத் தன்மையைத் தரும்போது வல்லெழுத்து ஒருபோதும் மிகாது.

ஆடுகள், வீடுகள், படகுகள், குறடுகள், கொக்குகள், திறப்புகள், இருப்புகள், வண்டுகள், போழ்துகள் எனவமைவதைக் கருத்திற் கொள்க.

எனவே, சிறப்புகள், விருப்புகள், வாழ்த்துகள் என எழுதுவதுதான் முறை. மாறாகச் சிறப்புக்கள், விருப்புக்கள், வாழ்த்துக்கள் என எழுதுமிடத்து ‘கள்’ பன்மைவிகுதி அற்றுப்போய் மது அல்லது தேன் என்ற பொருளைத் தரும் என்பதை நினைவிற்கொள்க.
எனினும் இந்துக்கள் எனவரும் பதத்தில் ‘து’ மென்றொடர்க் குற்றியலுகரம் என்பதால் பன்மை விகுதியான ‘கள்’ இன் ‘க’கரம் மிக வாய்ப்பில்லை. ஆனால் இந்துக்கள் என எழுதுவதும் அழைப்பதும் வழக்கமாகி விட்டதால், அது இலக்கண வழுவமைதியின் பாற்படுகிறது.


முற்றியலுகரம்.

உகரம் ஏறிவருகின்ற உயிர்மெய்கள் சொல்லினிறுதியில் வரும்போதும், ஏனைய இடங்களில் ஒலிக்கும்போதும் தனது முழுமையான ஓசையை வெளிப்படுத்துமாயின் அவை முற்றியலுகரங்கள் எனப்படுகின்றன. அதாவது, முழுமையான ஒலிப்பைப் பெறுகின்ற உகரங்களே முற்றியல் உகரங்கள் எனப்படுகின்றன.
தற்கால இலக்கண வகுப்புகளில் முற்றியலுகரம் பற்றிய முக்கியத்துவம் குறைவடைந்து வருகின்றதெனினும் மாணவர்கள் இதுபற்றி அறிந்திருப்பது பயன்பாடுடைத்தாகும்.
இரண்டெழுத்துச் சொல்லின் முதலெழுத்து குறிலாக அமையுமிடத்து இரண்டாம் எழுத்தாகிக் கடைசியில் வருகின்ற வல்லின மெய்களில் ஏறிய உகரங்கள் குற்றியலுகரமாகக் கருதப்படமாட்டா. 

முதலெழுத்து நெட்டெழுத்தாக வருமிடத்துமட்டுமே வல்லின உகரங்கள் குற்றியலுகரமாகின்றன.

உதாரணமாக, பாடு என்றபதத்தில் வரும் ‘டு’ குற்றியலுகரமாகிறது. ஆனால் படு என்றபதத்தில் வரும் "டு" குற்றியலுகரமாகாது. அது முழுமையான ஒலிப்பைப் பெறுவதால் முற்றியலுகரம் எனப்படுகிறது. 

இவ்வாறே பகு, பசு, விடு, பொது, குபு, செறு என்பவை முற்றியலுகரங்கள் எனப்படுகின்றன.

எனவே இரண்டெழுத்துப் பதத்தில் முதலெழுத்து குறிலோசையைக் கொண்டமையுமிடத்து அடுத்துச் சொல்லிறுதி எழுத்தாக வருகின்ற வல்லின உகரங்கள் முற்றியலுகரங்களாகும். ஏனைய மெல்லின, இடையின மெய்களிலேறி வருகின்ற அனைத்து உகரங்களும் எவ்விடத்தில் வரினும் அவை முற்றியல் உகரங்களேயாம்.


குற்றியலிகரம்.

வல்லின உகரங்கள் சில இடங்களிற் தம் மாத்திரையிற் குறைந்தொலித்துக் குற்றியலுகரங்கள் ஆவதைப்போல், இகரங்களும் சிலவிடங்களிற் தம் மாத்திரையைவிடக் குறைவாக ஒலித்துக் குற்றியலிகரங்கள் ஆகின்றன. இவை புணர்ச்சி விதிகளின்படியும் தூயஒலிப்பின் அடிப்படையிலும் இலக்கண அறிஞர்களால் அடையாளப்படுத்தப் படுகின்றன.
குற்றியலுகரம் அமைந்த சொற்களுடன் யகரத்தை முதலெழுத்தாகக் கொண்ட சொற்கள் இணையநேரின் குற்றியலுகரம், குறுகிய இகர உச்சரிப்பைப் பெற்றே இணையும் என்பது இலக்கணவிதி. 

பொதுவாக நாகு, சோறு, அஃது, பஞ்சு, படகு, சிறப்பு, களிறு போன்ற பதங்களுடன் யாது என்ற பதம் இணையுமிடத்து, முறையே, நாகியாது, சோறியாது, அஃதியாது, பஞ்சியாது, படகியாது, சிறப்பியாது, களிறியாது என அவை தோற்றம்பெறும் என்பது ஒலிப்பை நுணுகிப் பார்ப்பவர்களுக்குத் தெள்ளெனப் புரியும்.

இதேபோன்று, மியா எனப்படும் அசைச் சொல்லில்வரும் மி எழுத்தும் தன் மாத்திரையைவிடக் குறைந்தே ஒலிக்கும்.

முற்றியல் உகர குற்றியல் உகர, இகர மாத்திரைகள், 

‘உ’என்ற உயிர்க்குறிலின் மாத்திரை ஒன்று. அது மெய்யெழுத்துகளில் ஏறி உயிர்மெய்யாக வருமிடத்தும் குறிலோசைக்குரிய ஒருமாத்திரையையே பெறுகிறது.

எனவே முழுமையான ஒலியுடன் முற்றியலுகரமாக வருகின்றபோதில் அதன் மாத்திரை ஒன்று எனவுணர்க.
ஆனால் குற்றியலுகரமாக அவை ஒலியளவிற் குறைந்தமையும்போது அவற்றின் மாத்திரை அரை என்பதாகிறது.
இதேபோல் ‘இ’கரத்தின் மாத்திரை ஒன்று எனவமைந்திருந்தாலும், குற்றியலுகரம் இகரமாகும்போது ஒலியளவு குறைவதால் குற்றியல் இகரத்தின் மாத்திரை அரை என்பதாகும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 4

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 09

தமிழ் இலக்கணம் அறிவோம் எழுத்தியல்- பகுதி 5