தமிழ் இலக்கணம் அறிவோம் எழுத்தியல்- பகுதி 06
அளபெடை
எழுத்துகள் தமக்கெனக் குறிக்கப்பட்ட மாத்திரை அளவுகளைவிட மிகுந்து ஒலிக்கின்ற சந்தர்ப்பங்களும் வருவதுண்டு அவ்வாறு வருவதை அளபெடை என்கிறோம். ஒலிக்கும் அளபு ஓரெழுத்தின் மாத்திரை அளவைவிடக் கூடுதலான நேரத்துக்கு நீட்டிக்கப்படுவதே அளபெடை என விளங்கிக் கொள்வது பயன்தர வல்லது.
அளபெடையை நடைமுறையில் விளங்கிக் கொள்வதானால் தமது பொருட்களைக் கூவி விற்பவரை நினைவிற் கொள்ளவேண்டும்.
மீன் விற்பவர் மீஇ..ன் எனவும் மரக்கறி விற்பவர் மரக்கறீஇ… எனவும் கேட்போர் கவனத்தைக் கவரும்வகையில் குரல்கொடுப்பதும், மரவள்ளிக் கிழங்கு விற்பவர் மரவள்ளிக் கிழங்ங்கு எனவும் பஞ்சு விற்பவர் பஞ்ஞ்சு எனவும் அழுத்திக் குரல்தருவதும் அளபெடையைச் சார்ந்தவையே.
ஒருபாடலை இசைக்கும்போதும், ஒருவரை அழைக்கும்போதும், பண்டங்களைக் கூவி விற்கும்போதும், பிறரிடம் முறையீடு செய்யும்போதும், துக்கத்திற் புலம்பும்போதும் எழுத்தொலிகள் தத்தம் மாத்திரையைவிட அதிகமான நேரம் ஒலிப்புப் பெறுகின்றமையை நாம் உணரலாம். இயல்பான இந்த நடைமுறைகளையே அளபெடைகள் என அறிஞர் பகர்வர்.
அளபெடை உயிரளபெடை, ஒற்றளபெடை என இரு இருபெரும் வகுதிக்குள் அடங்கிவிடுகின்றது எனலாம்.
1. உயிரளபெடை ( இலகு விளக்கம் )
ஒரு நெட்டெழுத்து தான் அளபெடுக்கின்ற தேவை வரும்போது தனது உயிர்ஓசைசார்ந்த உயிர்க்குறிலைத் துணையாகக் கொள்வது உயிரளபெடை எனப்படுகிறது.
இங்கே மீன்விற்பவர் மீ என்ற நெட்டெழுத்தில் வரும் ஈ என்ற உயிரோசையை நீட்டிக்கொள்ள வேண்டி அவ்வோசைக்குரிய இனமான ‘இ’ என்ற ஒலியைத் துணைக்கழைத்திருக்கிறார். அப்படிச் செய்வது அவருக்கு உரத்து ஒலியெழுப்புதற்கு இசைவாகவும், கொள்வனவு செய்பவர்களை ஈர்ப்பதற்கு வசதியாகவும் அமைந்திருக்கிறது.
இதேபோல் மரக்கறி விற்பவரும் மரக்கறி என்ற சொல்லினிறுதியில் வருகின்ற ‘றி’ என்ற எழுத்தினோசையை ‘றீ’ என ‘ஈ’காரமாக்கி அதற்கினமான ‘இ’கரத்தை இணைத்துக் கூவியுள்ளார். இதுவும் உயிரளபெடையைச் சார்ந்ததுதான்.
உயிர் அளபெடையின்போது ‘ஆ’வுக்கு ‘அ’வும். ‘ஈ’காரத்துக்கு ‘இ’கரமும், ‘ஊ’காரத்தக்கு ‘உ’கரமும், ‘ஏ’காரத்துக்கு ‘எ’கரமும். ‘ஓ’காரத்துக்கு ‘ஒ’கரமும், ‘ஐ’காரத்துக்கு ‘இ’கரமும், ‘ஒள’காரத்துக்கு ;உ’கரமும் உடனின்று துணைசெய்கின்றன. இவை இனஎழுத்துகள் என முன்னரே குறிப்பிடப்பட்டிருப்பதும் கவனத்துக்குரியது.
உயிரளபெடை மொழிக்கு முதலிலேனும், இடையிலேனும், கடைசியிலேனும் வரக்கூடியது. நெட்டெழுத்தை அடுத்து அதன் இன உயிர்க்குறில் வந்து அளபெடுப்பதுபோல், குறில் நெடிலாகி அதனையடுத்து தன்னினக் குறிலையேற்று அளபெடுப்பதுமுண்டு. வரும் எனுஞ்சொல் வரூஉம் என அமைவது இதற்கான உதாரணமாகும். அதேபோல் தழீஇ, குரீஇ என்பவற்றையுங் காணலாம்.
ஊஉமை (ஊமை), வரூஉம் (வரும்), தழீஇ (தழுவி) என்பவற்றை முறையே மொழிக்கு முதலிலும், இடையிலும், கடையிலும் வரும் அளபெடைகள் எனத் தெரிந்து கொள்ளலாம்.
உயிரளபெடை, செய்யுளிசைஅளபெடை, இன்னிசைஅளபெடை, சொல்லிசைஅளபெடை என மூவகைப்படும்.
செய்யுளிசை அளபெடையை இசைநிறை அளபெடை எனவும் அறிஞர் அழைப்பர்.
செய்யுளிசை அளபெடை அல்லது இசைநிறை அளபெடை
செய்யுள் ஒன்றின் இசையை நிறைப்பதனால் இது இசைநிறை அளபெடை எனவும் அழைக்கப்படுகிறது.
செய்யுளில் ஓசை குறையுமிடத்து அதை நிறைவிக்கவேண்டிப் பொருத்தமான நெட்டெழுத்து தன் மாத்திரையைவிட நீண்டொலிக்குமாயின் அது செய்யுளிசைஅளபெடை அல்லது இசைநிறைஅளபெடை எனப்படுகிறது.
எடுத்துக்காட்டாக,
“உறாஅர்க்கு உறுநோய் உரைப்பாய் கடலைச்செறாஅஅய் வாழிய நெஞ்சு.” (திருக்குறள் 1200)
“கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மைவிடாஅர் விழையும் உலகு.” (திருக்குறள் 809)
என்பவற்றைக் கொள்ளலாம். இங்கே, வெண்பாவில் முதற்சீர் ஓரசைச்சீராக வருதல் ஏற்புடையதாகாது என்பதால், அச்சீர் ஈரசையாகும் பொருட்டு நெடில் அளபெடுத்தலைக் காணலாம். சீர், அசை, வெண்பா என்பவை பற்றிய விளக்கம் பிறிதோரிடத்திற் தரப்படும்.
இன்னிசை அளபெடை
செய்யுளில் ஓசை குறையாவிடத்தும் இசைகருதி நெடில் அளபெடுக்குமாயின் அது இன்னிசையளபெடை எனப்படும்.
“கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கேஎடுப்பதூஉம் எல்லாம் மழை.” (திருக்குறள் 15)
இக்குறளில் ஓசைக்குறைபாடு எதுவும் நேராவிடினும் இனிய இசை கருதிக் கெடுப்பதும், எடுப்பதும் எனவருஞ் சொற்கள் எடுப்பதூஉம் எனவும் கெடுப்பதூஉம் எனவும் இன்னிசைக்காக அளபெடுத்துள்ளன.
சொல்லிசை அளபெடை
செய்யுளொன்றில், தொழிற்பெயர் வினையெச்சமாகிச் செயற்படநேரின், அத்தொழிற்பெயர் அளபெடுப்பது சொல்லிசை அளபெடை எனப்படுகிறது.
“ குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கும் உலகு” (திருக்குறள் 544)
“ உரனசைஇ உள்ளம் துணையாகச் சென்றார்
வரனசைஇ இன்னும் உளேன்” (திருக்குறள் 1263)
மேலேகாட்டப்பட்ட குறள்களில் தழி, நசை என்பவை பெயர்ச்சொற்கள். அணைப்பு, விருப்பம் என்ற கருத்துகளை அவை குறித்து நிற்கின்றனவெனினும் வினையெச்சமாக மாறவேண்டி அளபெடுத்தன.
ஒற்றளபெடை.
செய்யுளில் ஓசை குறையுமிடத்து மெய் எழுத்துகளும் அளபெடுக்கின்றன. இதனை ஒற்று அளபு எடுத்தல் எனும்பொருளில் ஒற்றளபெடை என்பர் இலக்கணநூலார்.
ங், ஞ், ண், ந், ம், ன், வ், ய், ல், ன் ஆகிய பத்து மெய்யெழுத்துகளும் ஆய்தஎழுத்தும் இரட்டித்து வருவதன்மூலம் அளபெடுக்கின்றன.
வல்லினமான க், ச், ட், த், ப், ற், ஆகிய ஆறுமெய்களும், இடையினத்தைச் சார்ந்த ர், ழ் மெய்களும் அளபெடுக்கமாட்டா.
சங்ங்கு, பஞ்ஞ்சு, கண்ண்டம் பந்ந்து எஃஃகு என எடுத்துக்காட்டுகளை விரிவுபடுத்தலாம்.
கிழங்ங்கு என்றும் பஞ்ஞ்சு என்றும் கூவி விற்பதை நடைமுறை உதாரணமாகக் கொள்ளலாம்.
அளபெடைகள் பற்றி நினைவிற் கொள்ளவேண்டியவை:
அளபெடைகள் பெரும்பாலும் செய்யுள் வடிவங்களிலேயே பயன்படுத்தப்படுகின்றன.
உரைநடை வடிவத்தில் அவை பயன்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்றே கூறலாம்.
திரையிசைப் பாடல்கள், நாட்டார் பாடல்களுட்பட இசையோடு பாடப்படும் பாடல்களில் அளபெடைகளை உய்த்துணரலாம்.
பேச்சுவழக்கில், புலம்பல், முறையீடு, கூவுதல், விளித்தல் மகிழ்தல் ஆகிய சந்தர்ப்பங்களில் அளபெடைகள் தோற்றம் பெறுவதை நடைமுறையிற் காணலாம்.
உயிரளபெடை, மொழிக்கு முதலிலோ, இடையிலோ, கடையிலோ வருமியல்புடையது. ஆனால் ஒற்றளபெடை மொழிக்கு இடையில் மட்டுமே வருமியல்புடையது.
உயிரளபெடையின் மாத்திரை: நெட்டெழுத்து மாத்திரை 2, அதனோணைந்து வரும் குற்றெழுத்தின் மாத்திரை 1 என மூன்றாகும்.
ஒற்றளபெடையின் மாத்திரை: மெய்யெழுத்துகள் இரண்டினதும் அரை, அரை மாத்திரை சேர்ந்து ஒன்றாகும்.
கருத்துகள்
கருத்துரையிடுக