தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 : பகுதி 03
பதவியல் 03
இடைச்சொற்கள்.
இடைச்சொற்கள் பகுக்கப்பட முடியாதவை. எனவே அவை எப்போதும் பகாப்பதங்கள் என்ற வகுதிக்குள் அடங்கி விடுகின்றன.
இடைச்சொற்கள் பெயராகவோ வினையாகவோ அல்லாமல் அவற்றுடன் இணைந்துநின்று பெயர்ச் சொற்களதும், வினைச்சொற்களதும் வலிமையை அதிகப்படுத்திப் பொருள் விளங்க வைக்கும் பணிகளைச் செய்கின்றன. எனினும் இவை தனித்து நிற்கும்போது பொருள் தருவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இடைச்சொற்களின் பணி
இடைச் சொற்கள் இலையேல் பெயர்ச் சொற்களும் வினைச் சொற்களும் ஏறத்தாழ, செயலற்றுப் போய்விடுகின்றன என்பது ஒப்புக்கொள்ளத்தக்க உண்மை.
பெயர் அல்லது வினைச் சொற்களைச் சொல்லவந்த கருத்துக்கேற்பத் தயார்படுத்துவதும், அவற்றுக்கு இடையிலான தொடர்புகளை மேம்படுத்துவதும் இடைச்சொற்களின் பணிகளாகின்றன. இதன்படி ஒரு சொல்லின் பகுதி தவிர்ந்த அனைத்து ஒட்டுகளும் இடைச்சொற்களே என்பது தெளிவான முடிவாகும்.
நடந்தான் என்ற வினைச்சொல்லை எடுத்துக்கொண்டால் நட என்ற வினையடியைத் தவிர்ந்த அனைத்து இணைவுகளும் இடைச்சொற்கள் சார்ந்தவையே.
கூனி என்ற பெயரை நோக்கின் கூன் எனும் அடிச் சொல்லுடன் இணைந்து வரும் விகுதி "இ" இடைச்சொல்லாகும். காலங்காட்டும் ஒட்டுகள் தொடர்புகளுக்கு வசதிசெய்யும் வேற்றுமைகள் எல்லாம் இடைச்சொற்களாகின்றன.
பகுதி விகுதி
ஒரு பதத்தைப் பிரிப்பதாற் பெறக்கூடிய மிகக்குறைந்த பிரிவுகள் பகுதி, விகுதி எனலாம். விகுதியை வைத்து உயர்திணை, அஃறிணை, ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால் என்பவற்றைத் தெரிந்து கொள்ள முடிகிறது. அதாவது, இருதிணையையும் ஐம்பாலையும் விகுதியாக வருகின்ற இடைச்சொற்களே அடையாளங் காட்டுகின்றன.
விகுதி
அவன் என்ற பதத்தை எடுத்தால் அப்பதம், அ-அன் எனவாகிறது. “அ” என்ற பகுதி இடத்தைச் சுட்டுகின்ற எழுத்து என்பதை அறிவோம். அன் எனும் விகுதி உயர்திணையைக் குறிக்கிறது. ஆண்பால் எனவும் காட்டுகிறது.
அவள் என்ற பதத்தின் பிரிவுகளான (அ-அள்) ‘அ’ இடத்தையும், ‘அள்’ பெண்பால் உயர்திணையையுங் காட்டுகிறது. நடந்தான் அல்லது நடந்தாள் என்ற வினைமுற்றில் வருகின்ற ‘ன்’ ‘ள்’ என்பவையும் இத்தகையனவே.
இவ்வாறே அவர் என்பதைக் கொண்டால் ‘அர்’ என்பது உயர்திணையையும் பலர்பாலையும் காட்டும் விகுதி. இன்றைய தமிழில் இவ்விகுதி பால்வெளிப்படுத்தாத உயர்திணையாகக் கொள்ளப்படுவதால், அவர் என்ற பதத்துடன் அஃறிணைப் பன்மை விகுதியான ‘கள்’ சேர்த்து அவர்கள் என்கிறோம்.
இப்பதத்தில் அ-அர்-கள் (அவர்கள்); என ஒரு பகுதியும் இரு விகுதிகளும் காணப்படுகின்றன. முந்தைய நாட்களில் அவர் என்ற சொல் ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்களையோ, பெண்களையோ, அல்லது இருசாராரையுமோ புலப்படுத்தியது. காலப்போக்கில் 'அர்' என்பது மதிப்புக்குரியவரைக் குறிக்கும் விகுதியாகக் கொள்ளப்பட, மதிப்புக்குரிய பலரை ஒருமித்து அடையாளப்படுத்துவதற்கு ‘கள்’ விகுதி இணைக்கப்பட்டு அவர், அவர்கள் ஆயிற்று.
எனினும் பெற்றோர், பெரியோர், மூத்தோர், தந்தையர், சென்றனர், நடந்தனர் போன்ற சொற்கள் 'கள்’ விகுதி பெறாமலேயே பன்மைத் தன்மையுடன் வழங்கப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதேபோல், ‘மார்’ எனும் இடைச்சொல்லும் மரியாதை விகுதியாக வழங்கப்படுகிறது. தாய்மார், மந்திரிமார், மாமன்மார், அண்ணன்மார், ஆசிரியர்மார் எனப் பயன்படுத்தப்படுவதோடு, பிறமொழிச் சொற்களுடன் இணைக்கப்பட்டு டொக்டர்மார், எஞ்சினியர்மார், டெக்னிஷியன்மார் என்றும் பயன்படுத்தப்படுகிறது. இவ்விடைச்சொல் உயர்திணைக்குரிய பன்மைத்தன்மையைக் கொண்டிருக்கிறது.
“காரன்” என்ற விகுதி பிற்காலத்தில் உருவாக்கப்பட்டுப் பலவிதத்திலும் பயன்படுத்தப்படுகிறது. காரன் எனும்பதம் ‘அன்’ என்ற துணைவிகுதியை உள்ளடக்கி இருப்பதால் அது ஆண்பால் உயர்திணையைக் குறிக்க, ‘இ’ என்ற பெண்பால் விகுதி இணைக்கப்பட்டு “காரி” எனவாகிப் பெண்பால் உயர்திணையைக் குறிக்கப் பயன்படலாயிற்று. மற்றெல்லா விகுதிகளையும்விட, காரன், காரி விகுதிகள்தாம் அதிக சொற்களுடன் இணைகின்றன எனக் கொள்ளவும் இடமுண்டு.
காவற்காரன், சமையற்காரி, வேலைக்காரி, வீட்டுக்காரன், மீன்காரன், வெள்ளைக்காரன், இந்திக்காரன் எனத் தமிழ்ச்சொற்களிற் தொடங்கி, பொலிஸ்காரன், ஆமிக்காரன், நேவிக்காரன், டெலிபோன்காரன், கேபிள்காரன், றெயில்வேக்காரன் எனப் பிறமொழிச் சொற்களுடனும் தடங்கலின்றி ‘காரன், காரி’ என்பவை இணைந்து செயற்படுவதைக் காணலாம். காரர் எனும் விகுதி பன்மை உயர்திணையைக் குறிக்கப் பயன்படுவதையும் கவனிக்கலாம்.
இதேபோல், தாய்க்காரி, தகப்பன்காரன், அண்ணன்காரன், தங்கைக்காரி, புருஷன்காரன், மாமன்காரன் போன்ற வேண்டாத இணைப்புகளும் விரவிக்கிடக்கின்றன. இவை தமிழுக்குத் தீங்கு தருபவையாகும். எனவே உறவு முறைகளுடன் காரன், காரி விகுதிகளின் இணைப்பைத் தவிர்த்தல் தமிழறிந்தோர் கடமையாகும்.
அஃறிணை விகுதி
அஃறிணை விகுதிகளான ‘து’ ஒன்றன்பாலையும், ‘வை’ ‘ன’ என்பவை பலவின்பாலையும் சுட்டும் இடைச்சொற்களாகும். அது, இது, வந்தது, நின்றது போன்ற சொற்களையும், அவை, இவை, நின்றன, ஓடின போன்ற சொற்களையும் பிறவற்றையும் இவற்றுக்கு உதாரணமாகக் காட்டலாம்.
விகுதிகளின் வகைகள்.
இலக்கணநூலார் கூற்றுப்படி,
பெயர் விகுதிகளாக, அன், ஆன், மன், மான், ன், அள், ஆள், இ, ள், அர், ஆர், மார், கள், ர், து, அர், வை, தை, கை, பி, முன், அல் என்பனவும்,
தொழிற்பெயர் விகுதிகளாக, தல், அல், அம், ஐ, கை, வை, கு, பு. உ, வி, சி, தி, உள், காடு, பாடு, அரவு, ஆனை, மை, து என்பனவும்,
பண்புப்பெயர் விகுதிகளாக. மை, ஐ, சி, பு, உ, கு, றி, று, அம், நர் என்பனவும்,
குறிப்பு வினைமுற்று விகுதிகளாக, அன், ஆன், அள், ஆள், அர், ஆர், அ, டு, து, று, என், ஏன், அம், ஆம், எம், ஏம், ஓம், ஐ, ஆய், இ, இர், ஈர் என்பனவும்,
தெரிநிலைவினைப் பெயரெச்ச விகுதிகளாக, அ, உம் என்பனவும்,
குறிப்புவினைப் பெயரெச்ச விகுதியாக அ வும்,
தெரிநிலை வினையெச்ச விகுதிகளாக, இ, உ, ய், பு, ஆ, ஊ, என, அ, இன், ஆல், கால், ஏல், எனின், ஆயின், ஏனும், கு, இய, இயர், வான், பான், பாக்கு, கடை, வழி, இடத்து, உம், மல், மை, மே என்பனவும்,
குறிப்பு வினையெச்ச விகுதிகளாக, அ, றி, து, ஆல், மல், கடை, வழி, இடத்து என்பனவும்,
பிறவினை விகுதிகளாக, வி, பி, கு, சு, டு, து, பு, று என்பனவும்,
இன்னும் பலவும் உளவென அறியலாம்.
எனினும், இவ்வாறு விகுதிகள் நூற்றுக்கணக்காக இருப்பதுபற்றித் தமிழ் மாணவர் எவரும் அஞ்சத் தேவையில்லை. ஏனெனில் இவற்றை நாம் பேச்சு வழக்கிலும் எழுத்துநடையிலும் எம்மையறியாமல் அன்றாடம் மிகச்சரியாகப் பயன்படுத்திக் கொண்டுதான் வருகிறோம். நாம் பிரித்து அடையாளம் காட்டாமற் பயன்படுத்துகிறோம்: இலக்கணநூலார் மொழிவளங்கருதி நுணுக்கமாக அவதானித்து அவற்றுக்கு அடையாளம் தந்திருக்கிறார்கள், அவ்வளவுதான்.
.
கருத்துகள்
கருத்துரையிடுக