தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 : பகுதி 02
பதவியல் 2
ஓரெழுத்தாலோ ஒன்றுக்குமேற்பட்ட எழுத்துகளாலோ ஆக்கப்பட்டுப் பொருள் வெளிப்படுத்தி நிற்பவை பதங்கள் அல்லது சொற்கள் எனப்படுகின்றன. அவை பெயர், வினை, இடை, உரி என நான்கு வகையின.
பகுபதம் : பகாப்பதம்;
பதங்கள் அனைத்தும் பிரிக்கப்படக் கூடியவை, பிரிக்கப்பட முடியாதவை என இரு வகைக்குள் அடங்குகின்றன. பிரிக்கப்படக் கூடியவை அதாவது பகுக்கப்படக் கூடியவை பகுபதங்கள் எனவும் பகுக்கப்பட முடியாதவை பகாப்பதங்கள் எனவும் அழைக்கப்படுகின்றன.
பகுபதம்
ஒரு பதத்தைப் பகுத்தாலும் அச்சொல் பொருள்தருமாயின் அது பகுபதம் எனப்படுகிறது. பொதுவாக பெயர்ச்சொற்களிலும் வினைச்சொற்களிலும் அநேகமானவை பகுபதங்களாகவே காணப்படுகின்றன.
இடைச் சொற்களும் உரிச்சொற்களும் பகுக்கப்பட முடியாதவை. எனவே அவை பகாப்பதங்கள் வகுதிக்குள் நிற்கின்றன.
அதேபோல் பெயர்ச்சொற்களிலும் வினைச் சொற்களிலும் பகாப்பதங்களும் இருக்கின்றன.
பகுபதங்கள் பகுதி, விகுதி, இடைநிலை, சாரியை, சந்தி, விகாரம் என ஆறு உறுப்புகளில் இரண்டையேனும் இரண்டுக்கு மேற்பட்டவற்றையேனும் அல்லது அனைத்தையேனும் கொண்டமைகின்றன.
கண்ணன் என்பது பெயர்ப் பகுபதம் ஆகும். பொன்னி என்பதும் பெயர்ப் பகுபதமே. இவை கண், பொன் என்பதன் அடிப்டையாக எழுந்த பெயர்ச் சொற்களிலிருந்து உருவானவை. பார்ப்பதற்குத் தனிச்சொற்கள் போன்று அவை தோற்றமளிப்பினும் இலக்கண நோக்கின்படி பகுதி. விகுதி ஆகிய ஈருறுப்புகளின் இணைப்புகளேயாம்.
கண்ணன் என்பது கண் என்ற பகுதியும் அன் என்ற ஆண்பால் விகுதியும் கொண்ட ஈருறுப்புச் சொல்.
அதேபோல் பொன்னி என்பது பொன் என்ற பகுதியும் இ என்ற பெண்பால் விகுதியும் இணைந்த பதம். பொன் என்ற பகுதியுடன் அன் எனும் ஆண்பால் விகுதி இணையின் அது பொன்னன் ஆகி ஆணைக் குறிக்கும் என்பதையும் மனதிற்கொள்க.
செய்தான் எனுஞ்சொல் வினையடியாகப் பிறந்த பகுபதம். செய்-த்-ஆன் அதாவது பகுதி, இடைநிலை, விகுதி என்ற மூன்றின் சேர்க்கையாகும்.
அதேபோல், தின்றனன் எனுஞ்சொல் தின்-ற்-அன்-அன் பகுதி, இடைநிலை, சாரியை, விகுதி என நான்கு உறுப்புகளால் ஆனது.
குடித்தனன் எனுஞ்சொல் குடி-த்-த்-அன்-அன் என, பகுதி, சந்தி, இடைநிலை, சாரியை, விகுதி ஆகிய ஐந்துறுப்புகளைக் கொண்டமைகிறது.
நடந்தனன் என வரும்போது. நட-த்-த்-அன்-அன் என ஐந்துறுப்புகளோடு த், ந் ஆகமாறி விகாரமடைவதால் விகாரம் என்ற ஆறாவது உறுப்பையும் கொண்டிருக்கிறது.
இலக்கணநூலார், பதங்கள் ஈருறுப்பாலமையும்போது பகுதி, விகுதி என்றும் மூவுறுப்பெனின் பகுதி, விகுதி, இடைநிலை என்றும் நான்குறுப்புகள் வரின் பகுதி, விகுதி, இடைநிலை, சாரியை என்றும், ஐவகையுறுப்புகள் எனின் பகுதி, விகுதி, இடைநிலை, சாரியை, சந்தி, எனவும் ஆறாவது உறுப்பை விகாரம் எனவும் இலகுவாக அடையாளப் படுத்திச் செல்வர்.
எனினும் இடைநிலை, சாரியை, சந்தி போன்றவற்றைத் தெளிவாக விளங்கிக் கொள்வதற்காக இலக்கணநூலாரின் ஒழுங்கு இங்கு மாற்றப்பட்டிருக்கிறது. ஆயினும் பகுபத உறுப்புகளை மனதிற்கொள்வதற்கு இலக்கணநூலாரின் ஒழுங்கே சிறப்பானதாகும்.
பெயர், வினைப் பகுபதங்களும் பகாப்பதமும்.
பெயர்ப்பகுபதம் பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் ஆகிய அறுவகை இயல்புகளின் அடியாகத் தோன்றும் சொற்களிலிருந்தும், சுட்டு, வினா என்பவற்றுடன் பிற, மற்று ஆகிய இடைச் சொற்கள் என்பவற்றிலிருந்தும் தோன்றுகின்றன என ஆறுமுகநாவலரவர்கள் உரைக்கின்றார்.
பொருளின் அடிப்படையில் பொன்னன்,
இடத்தின் அடிப்படையில் இலங்கையன், இந்தியன்,
காலத்தின் அடிப்படையில் தையான், உதயன். மாரி,
சினையின் அடிப்படையில் கண்ணன், கொம்பன்,
குணத்தின் (பண்பு) அடிப்படையில் கரியன், இருளன், நெடியன்,
தொழிலின் அடிப்படையில் பாடகன், நடையன் எனப் பகுபதங்கள் தோற்றம் பெறுகின்றன.
அதேபோல்,
அவன் (அ-அன்), இவள் (இ-அள்), உது (உ-து) என்பவை சுட்டெழுத்துகளை அடிப்படையாகக் கொண்டெழுந்த பகுபதங்கள். அவை முறையே அன் எனும் ஆண்பால் விகுதியையும், அள் எனும் பெண்பால் விகுதியையும், து எனும் அஃறிணை ஒன்றன்பால் விகுதியையும் கொண்டு அவன், அவள், உது என உருவாயின என்பதையும் காண்க. இவ்வாறே அவை, இவை, இது, அது, அவர், உவர் என்பவற்றையும் கொள்க.
எது(எ-து), எவை(எ-வை), யாவர்(யா-அர்) போன்றவை வினா எழுத்துகளின் அடிப்படையில் தோன்றிய பகுபதங்களாகும். முதலெழுத்து வினாவெழுத்தாகவும் அடுத்தவரும் விகுதிகள் முறையே அஃறிணை ஒன்றன்பால், அஃறிணை பலவின்பால், உயர்திணைப் பலர்பால் சார்ந்தும் இச் சொற்கள் ஆக்கப்பட்டிருக்கின்றன என்பது கண்கூடு.
பிறன் (பிற-அன்), மற்றவர் (மற்ற-அர்) ஆகியவை பிற, மற்று போன்ற இடைச் சொற்களிலிருந்து பிறந்த பகுபதங்களாகும்.
வினைப்பகுபதம்.
வினைப்பகுபதம், தெரிநிலை வினைப்பகுபதம், குறிப்பு வினைப்பகுபதம் என இருவகைப்படும்.
வினைச் சொற்களிலிருந்து பிறந்து அதனைப் பகுதியாகக் கொண்டு விகுதி, இடைநிலை, சாரியை, சந்தி, விகாரம் எனும் அறுவகை உறுப்புகளோடோ அல்லது குறைவான உறுப்புகளோடோ இணைந்து பொருள்தரும் சொல் தெரிநிலை வினைப் பகுபதம் எனப்படுகிறது.
நடந்தான், வருகின்றாள், சிரிக்கிறது, ஓடும் என்பவை தெரிநிலை வினைப் பகுபதங்களுக்கு உதாரணங்களாம். காலம், எண் திணை போன்றவற்றைத் தெளிவாகக் காட்டுந் தன்மை கொண்டவை இவை.
பெயர், இடை, உரிச் சொற்களை அடிப்படையாகக் கொண்டும் தெரிநிலைவினைப் பகுபதங்கள் தோன்றுகின்றன. எனினும் இவை வெகுகுறைவாகவே காணப்படுகின்றன.
பயணமானான் என்பது பயணம் என்ற பெயர்ச்சொல்லை அடித்தளமாகக் கொண்டு தோன்றிய தெரிநிலைவினைப் பகுபதமாகும். சித்திரித்தாள் என்பது சித்திரம் என்ற பெயரடியாகத் தோற்றம் பெற்ற பிறிதொரு தெரிநிலைவினைப் பகுபதம்.
‘பாவை போன்றாள்.’ எனுந்தொடரில் வருகின்ற போன்றாள் எனுந் தெரிநிலைவினைப் பகுபதம் போல் எனும் இடைச்சொல்லிருந்தும்,
புலி நிகர்த்தான் எனுந்தொடரில் வரும் நிகர்த்தான் என்பது நிகர் எனுமிடைச் சொல்லிலிருந்தும் பிறந்தன என்பதைக் கருத்திற் கொள்க.
அவ்வாறே, சால், மாண் ஆகிய உரிச்சொற்களிலிருந்து சான்றான், மாண்டான் போன்ற தெரிநிலைவினைப் பகுபதங்கள் தோன்றுமாற்றையும் தெரிந்துகொள்க.
குறிப்பு வினைப்பகுபதம்
தெளிவாகக் காலங்காட்டாது, அவற்றைக் குறிப்பாலுணர்த்தி நிற்கும் சொற்களான, பெரியன், நெடியன், போன்றவை குறிப்பு வினைப்பகுபதங்கள் எனப்படுகின்றன. இவற்றை விரித்துரைக்கின் பெரியனாக அல்லது நெடியனாக இருந்தவன், இருக்கின்றவன், எதிர்காலத்திலும் அவ்வாறே இருக்கப்போகின்றவன் எனப் பொருள் தோன்றும்.
பெயர்ப் பகுபதத்துக்கும், குறிப்புவினைப் பகுபதத்துக்குமிடையிலான வேறுபாடுகள்.
பெயர்ப் பகுபதங்களும் குறிப்புவினைப் பகுபதங்களும் பெரும்பாலும் ஒன்று போலவே தெரிகின்றன. அதற்காகக் குழப்பமடைய வேண்டியதில்லை. பெரியன் என்ற பதத்தை எடுத்துக்கொண்டால். பெருமை-அன் பெரியன் என்றாகிறது. பெரியனுக்குத் தம்பி. பெரியனைத் தண்டி, பெரியனால் வழங்கப்பட்டது, பெரியனிடத்துச் சிறந்தபண்பு எனக் கருத்துகள் கூறுமிடத்து பெரியன் பெயர்ச்சொல்லாகிப் பலவிதமான வேற்றுமையுருபுகளை ஏற்கிறது. இதேபோல் நெடியன் என்ற பதத்தையும் நோக்கலாம்.
இதன்படி வேற்றுமையுருபு ஏற்கும் வண்ணம் அப்பதத்தைப் பயன்படுத்துமிடத்து அது பெயர்ச் சொல்லாகிறது. எனவே அது பெயர்ப்பகுபதம் என்ற வகுதிக்குள் சேர்ந்து நிற்கிறது.
அவன் பெரியன், கணபதி நெடியன் என வாக்கியங்கள் அமையும்போது, சொல்லவந்த கருத்து நிறைவு பெறுவதால் பெரியன் நெடியன் என்பவை வினைமுற்றுக்குரிய பணிகளைச் செய்கின்றன. எனவே அவை காலங்காட்டாத குறிப்புவினைப் பகுபதங்களாகி விடுகின்றன.
இதேவேளை, நின்றான் அல்லது ஓடினான் எனும் காலம், எண், திணை, பால் என்பவற்றைத் தெளிவாகப் புலப்படுத்தும் பகுபத வினைமுற்று வேற்றுமை உருபுகளை ஏற்று வினையாலணையும் பெயராக மாற்றமடைகின்றன என்பதும் ஈண்டு குறிப்பிடத்தக்கது.
நின்றான் என்ற வினைமுற்றை நோக்குவோமாகில் அச்சொல் அவன் என்ற தோன்றா எழுவாயுடன் நின்று நிறைவான கருத்தைத் தருகிறது. அதேவேளை, நின்றான் என்ற வினைமுற்றுடன் ‘ஐ’ எனும் வேற்றுமையை இணைத்து நின்றானைக் கண்டாயா எனக் கேட்குமிடத்து நின்றானை என்றபதம் (நின்ற எனும்) செயலாற்றிய ஒரு மனிதனை அடையாளப் படுத்துகிறது, வினையுடன் இணைத்து ஒரு மனிதனோ பொருளோ அடையாளப்படுத்த முயலுமிடத்து அவ்வினைச்சொல் வேற்றுமை உருபையேற்று வினையாலணையும் பெயராகிறது.
“வந்தாரைக் காணல்லயே…” என்ற திரைப்படப் பாடலிலும்,
“அடித்தாரைச் சொல்லி அழு” என்ற தாலாட்டுப் பாடலிலும்,
வருகின்ற வந்தாரை. அடித்தாரை ஆகிய சொற்கள் வினையாலணையும் பெயரை நினைவில் வைத்துக் கொள்வதற்குச் சிறந்த உதாரணங்களாகும்.
பகாப்பதங்கள்.
பொதுவாக அடிச்சொற்கள் அல்லது வேர்ச்சொற்கள், இடுகுறியாக அமையும் சொற்கள் என்பவை பகாப்பதங்கள் எனலாம். இடுகுறி என்பது எக்காரணமும் கருதாது பொருள் புலப்படவோ அல்லது அடையாளப்படுத்தப்படவோ மாத்திரம் உருவாக்கப்பட்ட சொற்களாகும். உதாரணமாக, கல், மண் மலை, நிழல், மரம், கடல், வான், தீ, வளி, கிளி, காகம், நாய், சிங்கம், நான், நீ போன்ற சொற்கள் எவ்விதக் காரணமுமின்றி உருவானவை. எனவே பகுக்கப்பட முடியாத அவை அனைத்தும் பெயர்ப் பகாப்பதங்கள் ஆகின்றன.
அதேபோல், நட, நடி, பார், விழு, ஓடு, பாய், சிரி போன்ற வினைச் சொற்களும் வினைப் பகாப்பதங்கள் என்ற வகைக்குள் வருகின்றன. வேர்ச்சொற்களான இவற்றைப் பிரித்தால் பொருளற்றுப் போய்விடுவதைக் காணலாம். எனவே, இவற்றுடன் பகுபத உறுப்புகளான விகுதி, இடைநிலை போன்றவை இணையும்போதுதான் இவை பகுபதங்களாக மாற்றமடைகின்றன என்பதை நினைவிற் கொள்க.
தொடரும்…
Use fulla erunthathu so thank you sir
பதிலளிநீக்குதிரைபெரும் பகுதி என்றால் என்ன
பதிலளிநீக்குஒத்த கருத்து என்ன
நீக்கு