எங்கள் திருக்கோணமலை -- 8

எங்கள் திருக்கோணமலை -- 8

தேன்சிந்தும் பலாப்பழங்கள் திசைபுகழும் ஆலயங்கள்
 தெருவெங்கும் தீந்தமிழர் கலைக்கூத்துகள்
வான்கொஞ்சும் தென்னைகள் மனங்கொஞ்சும் மாமரங்கள்
 வயலாலே வாழ்வுபெறும் பைந்தமிழர்கள்
மான்கெஞ்சும் மயல்விழிகள் மாதர்தம் அருள்மொழிகள்
 மானத்தின் வழிவாழும் செந்தமிழர்கள்
ஆன்சிந்தும் பால்நெய்கள் அகஞ்சிந்தும் புன்னகைகள்
 அன்பாலே அணைத்தேற்கும் இன்மாந்தர்கள்

அறிவுநிறை கற்றோர்கள் ஆர்வமுடை இளைஞர்கள்
 அழகுமயில் அன்னதமிழ் மெல்லணங்குகள்
செறிவுநிறை பண்பாளர் செகம்வியக்கும் நெறியாளர்
 செந்தமிழிற் துறைபோந்த காராளர்கள்
பரிவுநிறை தாய்மார்கள் பாசமிகு சோதரியர்
 பாடசாலை பெருமையுறம் மாணாக்கர்கள்
உயர்பதியாம் தமிழ்ப்பதியாம் ஓங்குசைவத் திருப்பதியாம்
 ஒப்பரிய திரியாயின் உயர்கோலங்கள்.

அந்தணர்கைம் மலர்குவிய அம்புஜங்கள் விரியும்
 அதிகாலை வேளைகாதில் வேதவொலி சொரியும்
செந்தமிழர் தேவாரம் மனையெங்கும் பெருகும்
 செந்நெல்லும் தயிர்பாலும் தெருவெங்கும் வழியும்
சொந்தபந்த உறவெல்லாம் சேர்ந்திங்கு வாழும்
 செல்விருந்து ஓம்பிவரு விருந்தினரைத் தேடும்
எந்தமிழர் ஆவிதிரி யாய்என்ற பூமி
 இன்றளவும் தமிழ்காத்து வருமரிய பூமி.

                 கந்தவனம் கோணேஸ்வரன்.
                 பங்குனி 2017

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் இலக்கணம் அறிவோம். (3) புணரியல் 4

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 03 - பகுதி 02

தமிழ் இலக்கணம் அறிவோம் எழுத்தியல்- பகுதி 5