எங்கள் திருக்கோணமலை – 6

எங்கள் திருக்கோணமலை – 6


நிலவொளி மணலிற்பட்டு
 நீணிலம் நிலவாய்த்தோன்றும்
தலைவனின் புகழைப்பாடித்
 தமிழ்மொழி உயர்ந்துநிற்கும்
அலைகடல் கரையில்மோதி
 அணிமணி கொணர்ந்துசேர்க்கும்
மலையுறை உமையாள்பாகன்
 மகிழ்ந்தருள் புரிந்தேநிற்பர்.


இறைவழிப் பாடலோசை
 இதயத்தை அள்ளிச்செல்லும்
குறைவிலா துயிர்கள்வாழும்
 கொள்கையைச் சைவம்சொல்லும்
நிறைமதி மாந்தர்வழியில்
 நின்றிடும் தமிழும்வெல்லும்
அறவழி ஒன்றேமேவி
 அனைத்தையும் நலமாய்க்கொள்ளும்.


அருள்மிகு முத்துக்குமரன்
 அமர்ந்தருள் கோணைப்பதியில்
வருதுயர் ஏதுமில்லை
 வளர்தமிழுக் கெல்லையில்லை
ஒருமனப் பட்டுஇங்கே
 உயர்ந்திடும் தமிழர்கொள்கை
திருபொழி கோணைமண்ணின்
 சிறப்புக்கும் உண்டோஎல்லை?


கந்தவனம் கோணேஸ்வரன்
மார்கழி 2018.


கருத்துகள்